மதுரை: இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் குறைந்துள்ளது. இளைஞர்களை அரசியல் பக்கம் ஈர்க்க புதிய யுக்திகளை கையாள வேண்டும் என அதிமுக ஐடி பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை கூறினார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் “இணையத்தில் இலையின் குரல்” என்ற தலைப்பில் திறமையான பேச்சாளர்கள் தேடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மண்டலம் வாரியாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் 82 கட்சி மாவட்டங்களுக்குமான காணொளியில் பேசும் திறமை உள்ளவர்கள், அதிமுக கொள்கைகளை எடுத்துரைக்கும் திறமை உள்ளவர்கள், சமூக வலைதளத்திற்கு ஏற்ப எழுதும் திறமை உள்ளவர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை நேர்காணல் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மதுரையில் இணையத்தில் இலையில் குரல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிமுக ஐடி பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், “தகவல் தொழில்நுட்ப பிரிவு தீவிரமாக செயல்பட்டால் தான் கட்சி செயல்படுவதாக தெரியும். தகவல் தொழில்நுட்ப பிரிவு சரியாக செயல்படவில்லை என்றால் கட்சி செயல்படவில்லை என்ற தோற்றம் ஏற்படும். ஒவ்வொரு இயக்கத்துக்கும் இளைஞர்கள், புதிய வரவு முக்கியம். அதிமுக தோன்றுவதற்கு முன்பு திமுகவில் இருக்கும் போது திராவிட மாணவர் முன்னேற்ற கழகம் இருந்தது. கட்சிக்கு இணையாக செயல்பட்ட இயக்கம். அதில் ஒன்றாக பயணம் செய்தோம். மாணவர் அமைப்பை வைத்து தான் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றோம்.
இதனால் மாணவர் அமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் குறைந்துள்ளது. அந்த இளைஞர்களை அரசியல் பக்கம் ஈர்க்க புதிய யுத்திகளை கையாள வேண்டும்.
இப்போதைய அரசியல் முறை ரெம்ப மாறியுள்ளது. இதற்கு காரணம் தலைமுறை இடைவெளி. காலத்துக்கு ஏற்ப நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டு வருகிறோம். அதேப்போல் இளைஞர்களும் மாற்றிக்கொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும் உழைப்பு என்பது முக்கியம். கடுமையாக உழைத்தால் அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்” என்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், “அதிமுக தொண்டர்கள் வித்தியாசமானவர்கள். எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைப்பவர்கள். அவர்களின் உணர்வுகளை தூண்டி விட வேண்டும். அதை எம்ஜிஆர், ஜெயலலிதா செய்தனர். இப்போது எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல் கொள்கை வீரர் எடப்பாடி. தொண்டர்களின் நாடி நரம்புகளை தெரிந்து வைத்திருப்பவர்.
கருணாநிதி இறந்த போது மெரினாவில் இடம் கேட்டபோது, மெரினாவில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக திமுக, பாமக தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருக்கிறது, காமராஜர் நினைவிடம் அருகே இரண்டே கால் ஏக்கர் நிலம் ஒதுக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் இருந்த ஒருவர், இப்போது அவர் அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமியிடம் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க பரிந்துரை செய்தார். ஆனால் ஜெயலிதாவை மெரினாவில் அடக்கம் செய்தவருக்கு மெரினாவில் இடம் கொடுக்கக்கூடாது என்ற அதிமுகவினரின் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இருந்தார் பழனிசாமி.
எம்ஜிஆர் ஆட்சிக்கு வர எம்ஜிஆர் மன்றம், இளைஞர் அணி, ஜெயலலிதா ஆட்சிக்கு வர ஜெயலலிதா பேரவை, இளைஞர், இளம் பெண்கள் பாசறை காரணமாக இரந்தது. அதேப்போல் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறை ஆட்சிக்கு வரவும், இனிமேல் திமுக எனும் தீய சக்தி தமிழகத்தில் இல்லை என்பதை உருவாக்கக்கூடிய அதிமுக ஐடி பிரிவு. இப்பிரிவால் தான் அதிமுக வெற்றி கிடைக்கப்போகிறது என்றார்.
ராஜன் செல்லப்பா பேசுகையில், “அதிமுகவில் ஐடி பிரிவு மிகச்சிறந்த பிரிவாக வளர்ந்துள்ளது. அதிமுக ஐடி பிரிவு வலிமைமிக்கதாக மாறியுள்ளது. அதிமுக வளர்ச்சிக்கு துணையாக உள்ளது. அதிமுகவின் குரலை, எடப்பாடி குரலை வெளிக்கொண்டு வரும் பிரிவாக செயல்படுகிறது. ஆட்சி மாற்றம், ஆட்சி வருவதற்கு மாணவர்கள், இளைஞர்கள் ஒரு காரணமாக இருந்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக ஐடி பிரிவு தான் ஆட்சி மாற்றத்தை உருவாக்கப்போகிறது. செல்போனை பயன்படுத்தியவர்களை கிண்டல் செய்த காலம் இருந்தது. இப்போது செல்போன் இல்லாவிட்டால் உலகமே இயங்காது என்ற அளவில் வந்துள்ளது. எனவே 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வர ஐடி பிரிவு அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்றார்.