சென்னை: இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இளையராஜாவின் பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இத்துடன் இளையராஜா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வீடியோவையும் முதல்வர் பகிர்ந்துள்ளார். அதில் லண்டனில் நடைபெற்ற சிம்பொனி குறித்தும், அதற்கு வாசித்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு குறித்தும் நெகிழ்ச்சியுடன் இளையராஜா முதல்வர் ஸ்டாலினிடம் பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும்… pic.twitter.com/e3Ofpt2Upq
‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறிவித்தார். லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்கேற்றம் செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்டன் சென்ற இளையராஜா, அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார்.
அவரது இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில்ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இசை ஜாம்பவான்கள் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக் கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.