பட மூலாதாரம், Getty Images
“கடந்த வாரம் வெளியான ‘ட்யூட்’ படத்திலும் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன”
அக்டோபர் 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையின்போது இளையராஜா தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
“அதுதொடர்பாக தனியாக நீங்கள் வழக்கு தொடரலாம்” என, நீதிபதி என்.செந்தில்குமார் கூறினார்.
‘ட்யூட்’ படத்தை ஆந்திராவை சேர்ந்த ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதே நிறுவனம் தயாரித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது அனுமதியின்றி மூன்று பாடல்களைப் பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
காப்புரிமை சர்ச்சையை இளையராஜா எப்போது தொடங்கினார்?
1. இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் மோதல்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை இளையராஜா அனுப்பினார்.
‘தன்னுடைய இசையமைப்பில் உருவான பாடல்களை முன் அனுமதியின்றி மேடைகளில் பாடக் கூடாது’ என, அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இளையராஜா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைதளப் பதிவு ஒன்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதனைத் தெரிவித்திருந்தார்.
‘முன் அனுமதியில்லாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடுவது பதிப்புரிமை சட்டத்தை மீறும் செயல். அதற்காக பெருமளவில் அபராதமும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், FB/SPB
“இளையராஜாவை தவிர, வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் நான் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை வரும் கச்சேரிகளில் பாடுவேன்” என அவர் கூறியிருந்தார்.
“சட்டம் பற்றிய அறியாமை காரணமாக இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினேன். இனி சட்டத்தை மதித்து அதனை ஏற்கப் போகிறேன். அதேநேரம் இதுதொடர்பாக எவ்வித கருத்துகளையும் விவாதங்களையும் எவரும் மேற்கொள்ள வேண்டாம்” எனவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, திரைப் பயணத்தில் ஐம்பதாண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இண்டஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘எஸ்பிபி 50’ என்ற பெயரில் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்தினார்.
‘இந்த நிகழ்ச்சிகளில் தான் இசையமைத்த பாடல்களைப் பாடக் கூடாது’ என எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அடுத்த ஆண்டு (2018 செப்டம்பர் மாதம்) எஸ்.பி.பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், ‘என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாட உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
“தனது எந்தப் பாடலுக்கு உரிமை உள்ளது என்பதை இளையராஜா கூற வேண்டும். அப்போது இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்” எனவும் அவர் கூறியிருந்தார்.
2019 ஜூன் மாதம் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.
2. சிக்கலை சந்தித்த ‘ராத்திரி சிவராத்திரி’
“2022 ஆம் ஆண்டில் இருந்து காப்புரிமை தொடர்பாக வழக்குகளைத் தொடர்ந்து வருகிறோம்” எனக் கூறுகிறார், இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன்.
“முன்னதாக காப்புரிமை தொடர்பாக எக்கோ நிறுவனத்திடம் இன்ரிகோ (INDRECO) நிறுவனத்திடமும் பிரச்னை ஏற்பட்டது. அந்த வழக்குகள் எல்லாம் தற்போது மேல்முறையீட்டில் உள்ளன” எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
“பல்வேறு இசை நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தாலும் திரைப்படம் எனப் பார்த்தால் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் தனது பாடலைப் பயன்படுத்தியது தொடர்பாக நீதிமன்றத்தில் இளையராஜா தொடர்ந்தது தான் முதல் வழக்கு” எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Sarvanan
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலை ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் அனுமதியின்றி வனிதா விஜயகுமார் பயன்படுத்தியதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஜூலை மாதம் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது.
‘படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடு கேட்கப்படும்’ என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘சோனி மியூசிக் நிறுவனத்திடம் முறையாக அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்தினோம்’ என, வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு படத்தில் இருந்து பாடலை மட்டும் எடுப்பது என்பது இசைப் பணி என்ற அடிப்படையில் காப்புரிமை சட்டத்தில் வருவதாகக் கூறும் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், “கேசட்டுகளை வெளியிடும் உரிமையை எக்கோவுக்கு (தற்போது சோனி) இளையராஜா வழங்கியிருந்தார். அவர்கள் அதை வேறு வகையில் பயன்படுத்தியதால் எக்கோ மீது வழக்கு தொடரப்பட்டது” எனக் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
3. ‘குட் பேட் அக்லி’ – என்ன பிரச்னை?
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ…இதோ..’, 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற ‘என் ஜோடி மஞ்சக் குருவி’, 1996 ஆம் ஆண்டு வெளியான நாட்டுப்புறப் பாட்டு படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ ஆகிய மூன்று பாடல்களை ‘குட் பேட் அக்லி’ படத்தில் படக்குழு பயன்படுத்தியிருந்தது.
இளையராஜாவின் அனுமதியின்றி இந்தப் பாடல்களைப் பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்துக்கு எதிரானது எனவும் பாடல்களைப் பயன்படுத்த தடை விதித்து அவற்றை நீக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, படத்தில் இருந்து பாடல்களை நீக்கிவிட்டதாகவும் இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மைத்ரி மூவிஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
வழக்கு விசாரணையின்போதும், சோனி நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று பாடல்களைப் பயன்படுத்தியதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
4. ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படக் குழுவுக்கு நோட்டீஸ்
2024 ஆம் ஆண்டு கேரளாவில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம், தமிழ்நாட்டில் வரவேற்பைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, ‘குணா குகை வரை சென்று பார்க்கலாம்’ என்ற முயற்சியில் அப்பகுதிக்குச் செல்கின்றனர். அப்போது குகையில் இருந்த குழிக்குள் விழுந்த ஒருவரை எவ்வாறு மீட்டனர் என்பதே கதை.
படத்தில் 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘குணா’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்மணி அன்போடு’ பாடலை படக்குழு பயன்படுத்தியிருந்தது.
பட மூலாதாரம், INSTA/CHIDAMBARAM
இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாகக் கூறி மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
‘பதிப்புரிமை சட்டப்படி பாடலை உருவாக்கியவர் அந்தப் பாடலுக்கு முழு உரிமையாளர் என்பதால் முறையாக அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்’ என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
“மஞ்சுமல் பாய்ஸ் படத்துக்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளோம். மிஸ்டர் அண்ட் மிஸஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது” என பிபிசி தமிழிடம் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
5. ‘ட்யூட்’ படத்தின் மீது முறையீடு
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 17 அன்று ‘ட்யூட்’ திரைப்படம் வெளியானது. நடிகை மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புது நெல்லு புது நாத்து படத்தின் ‘கருத்த மச்சான்’ என்ற பாடல், ‘பணக்காரன்’ படத்தில் வரும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்’ என்ற பாடல் ஆகிய இரு பாடல்களையும் ‘ட்யூட்’ படக்குழு பயன்படுத்தியிருந்தது.
“இதுதொடர்பாக இளையராஜாவிடம் படக்குழு எந்த அனுமதியையும் பெறவில்லை” என, அக்டோபர் 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது இளையராஜா தரப்பு தெரிவித்தது.
“அதுதொடர்பாக வழக்கு தொடரலாம்” என்று இளையராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தயாரித்த மைத்ரி மூவிஸ் நிறுவனம் தான், ‘ட்யூட்’ படத்தையும் தயாரித்துள்ளது.
‘ட்யூட்’ திரைப்படத்தில் தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா தரப்பில் வழக்கு தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
6. சர்ச்சை தொடங்கிய பின்னணி
தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை இளையராஜா தொடங்கினார். தற்போது வரை இந்திய மொழிகளில் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
தான் இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியில்லாமல் அகி மற்றும் எக்கோ ஆகிய இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் அவற்றுக்குத் தடை விதிக்குமாறு 2018-ஆம் ஆண்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில், ‘படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பாடல்களைப் பயன்படுத்த தடை இல்லை’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக, பிபிசி தமிழிடம் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
இந்திய இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு காப்புரிமை மற்றும் உரிய இழப்பீட்டை பெற்றுத் தரும் வகையில் இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டி (IPRS) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சட்டப்பூர்வமாக இசையைப் பயன்படுத்துவதற்கு பதிப்புரிமை சங்கமாக இசையமைப்பாளர்களுக்கு உதவி வருவதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.
தாங்கள் உருவாக்கும் இசைக்கு நியாயமான ஊதியத்தை இசையமைப்பாளர்கள் பெறுவதை தாங்கள் உறுதி செய்வதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இளையராஜா அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது அனைத்து பாடல்களின் உரிமையையும் நான் வைத்திருக்கிறேன். ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இனி இல்லை என்பதால் எனது பாடல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பெறும் காப்புரிமை தொகை சினி இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு செல்லும்’ எனக் கூறியிருந்தார்.
“ஐ.பிஆர்.எஸ் அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறிய பிறகே காப்புரிமை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன” எனக் கூறுகிறார், சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன்.
பட மூலாதாரம், Andhanan
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட இசையமைப்பாளர்கள் பலரும் ஐபிஆர்எஸ் அமைப்பில் உள்ளனர். உலகில் எங்கு பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதைக் கண்டறிவதற்கான மென்பொருளை இந்த அமைப்பு வைத்துள்ளது” எனக் கூறுகிறார்.
“இசையைப் பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அதற்கான ராயல்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை இசையமைப்பாளர்களுக்கு அந்த அமைப்பினர் வழங்கி வந்தனர்” எனவும் ஆர்.எஸ்.அந்தணன் குறிப்பிட்டார்.
அந்த அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறியதால், தனது பாடல்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீது அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி இளையராஜா வழக்கு தொடுத்து வருகிறார். ஆனால், ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு ஐபிஆர்எஸ் அமைப்பே சட்டரீதியாக இழப்பீட்டை பெற்றுத் தருவதால் அவர்களின் பெயர்கள் நேரடியாக வெளியில் தெரிவதில்லை” எனவும் ஆர்.எஸ்.அந்தணன் கூறுகிறார்.