பட மூலாதாரம், Ilaiyaraaja/facebook
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது இந்திய திரை இசையில் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
ஒரு பாமர ரசிகன் அவரது பாடலை ரசித்துக் கேட்கும் அதே நேரத்தில் அவற்றின் இசை நுணுக்கங்களை தொழில்முறை இசைக் கலைஞர்கள் அன்றாடம் சிலாகித்து பேசுமளவுக்கு அனைத்து தரப்பினருக்குமான இசையை கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாக வழங்கி வருகிறார் இளையராஜா.
நாட்டுப் புற பாடல்கள், கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய பாப், ஜாஸ் என இளையராஜா தொடாத இசை மிகக் குறைவு. சமீபத்தில் லண்டனில் தனது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியதன் மூலம், மேற்கத்திய செவ்வியல் இசையிலும் தனக்கென ஒரு முத்திரையை இளையராஜா பதித்துள்ளார் .
இளையராஜாவின் இசையில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஏராளமான பாடல்களில் குறிப்பிடத்தக்க 10 பாடல்கள் உருவான விதம் பற்றி இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் குறிப்பிட்ட சுவாரசியமான விஷயங்கள் இந்த கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Kasthuri raja/facebook
1. பெண் மனசு ஆழமென்று.. (என் ராசாவின் மனசிலே)
இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்குநராக அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்தின்போது நடந்த சம்பவம் குறித்து அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
“எனது திரைப்படத்திற்கான படப்பிடிப்பை மொத்தமாக முடித்துவிட்டு, அதை திரையிட்டுக் காட்டி இளையராஜாவிடம் பாடல்கள் அமைக்கச் சொல்லிக் கேட்டேன்.
இளையராஜா, இந்த படத்திற்காக பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்தபோது, என்னை அழைத்தார். உடனே நான் அவரை சந்திக்கச் சென்றேன். அப்போது படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும் காட்சியை காட்டி, ‘இந்த இடத்தில் இன்னும் சில காட்சிகள் இருக்கிறதா?’ என்று இளையராஜா கேட்டார். எதற்காக அவர் இதைக் கேட்கிறார் என்று யோசித்தேன். அவர், ‘எனக்கு இங்கு சில கூடுதல் காட்சிகள் தேவைப்படுகின்றன. இருந்தால் எடுத்து வா இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்தி எடுத்து வா’ என்றார்.
படத் தொகுப்பு செய்யும் போது நீக்கிய சில காட்சிகளை எடுத்து அவரிடம் சென்றேன். அதை இளையராஜா பார்த்துவிட்டு அரைமணி நேரத்தில் ஒரு பாடலை, அவரே எழுதி, பாடியும் கொடுத்துவிட்டுச் சென்றார். அதுதான் ‘பெண் மனசு ஆழமென்று’ பாடல்.
இந்தப் பாடல் என் கதையின் சூழலில் இல்லவே இல்லை, படமாக்கவும் இல்லை. 12 வருடமாக அந்த இந்த படத்தின் திரைக்கதை என்னிடம் இருந்தது. ஆனால் வெறும் 2 மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு அவர் அதில் புதிதாக ஒரு உலகையே உருவாக்கினார். அவரை ஒரு மனிதர் என்றே என்னால் சொல்ல முடியாது. கடவுளுக்கு இணையானவர்”, என்று இளையாராஜாவுடனான அனுபவத்தை கஸ்தூரி ராஜா பகிர்ந்துகொண்டார்.
பட மூலாதாரம், Ilaiyaraaja/facebook
2. இளைய நிலா.. (பயணங்கள் முடிவதில்லை)
பயணங்கள் முடிவதில்லை படத்தின் பாடல்கள் உருவானது எப்படி என்பது பற்றி அதன் தயாரிப்பாளர் கோவை தம்பி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்தவை.
“நானும் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனும் இளையராஜாவை பார்க்கச் சென்றோம் சென்றோம். நான் படம் தயாரிக்க விரும்புவதாக அவரிடம் சொன்னேன். என்னை ஏற இறங்கப் பார்த்தார். நான் படம் தயாரிப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி சென்றுவிட்டார். தொடர்ந்து சில நாட்கள் சுந்தர் ராஜனுடன் இளையராஜாவை பார்க்கச் சென்றேன்.
ஒரு நாள், ‘சரி நான் கதை கேட்கிறேன். கதை பிடித்தால் நான் இசையமைக்க 3 மாதங்கள் ஆகும் என்றார்’. அதன் பின் சுந்தர் ராஜனிடம் கதை கேட்டு முடித்தார். இசைக் கோர்ப்பு எப்போது என்று சுந்தர் ராஜன் கேட்க, நான் சொல்லி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு இளையராஜா சென்றார். அடுத்த நாளே மெட்டமைக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்.
அடுத்த நாள் நானும் சுந்தர்ராஜனும் அவரைப் பார்க்கச் சென்றோம். ஒரே இரவில் பயணங்கள் முடிவதில்லை படத்துக்கான 7 பாடல்களையும் அவர் மெட்டமைத்துவிட்டார். அது மட்டுமல்ல, அவர் எங்களுக்குக் கொடுத்தது 16 மெட்டுகள். அதில் உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுங்கள் என்று கூறிவிட்டார். நானும் சுந்தர்ராஜனும் கலந்து பேசி இந்த 7 மெட்டுகளை தேர்ந்தெடுத்தோம். அந்தப் பாடல்களும், படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது. எனது மதர்லேண்ட் பிக்சர்ஸுக்கு மக்களின் இதயத்தில் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தவர் இளையராஜா”.
இந்த படத்தில் இளைய நிலா பொழிகிறதே, ஹே ஆத்தா, சாலையோரம் சோலையொன்று, தோகை இளமயில் ஆடிவருகுது ஆகிய பாடல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், facebook/Mysskin
3. உன்ன நினைச்சு… (சைக்கோ)
சைக்கோ படத்தின் உன்ன நினைச்சு பாடல் உருவான கதை குறித்து இயக்குநர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல் இது.
“உன்ன நினைச்சு பாடலின் சூழலுக்கு அவர் நிறைய மெட்டுகள் போட்டார். நான் எதையுமே தேர்ந்தெடுக்கவில்லை. நீ எத்தனை மெட்டுகள் கேட்பாய் என்றார் இளையராஜா. நீங்கள் போட்டுக் கொண்டே இருங்கள் நான் தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறிவிட்டேன். இப்படியே 2 – 3 நாட்கள் ஓடியது. பின் ஒரு மெட்டு தேர்வானது.
3 நாட்கள் கவிஞர் கபிலனை வைத்து அந்த பாடல் எழுதினேன். வரிகளைக் கொண்டு இளையராஜாவிடம் கொடுத்தேன். அவர் நன்றாக இல்லை என்று அதை திரும்பத் தந்துவிட்டார். சரி வேறொன்று எழுதுவோம் என்று கிளம்பிவிட்டேன். அடுத்த நாள் அவரே வேறொரு வரிகள் எழுதியிருந்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டேன். சரி கபிலன் எழுதியதே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
பின் அந்தப் பாடலைப் பாட ஒரு பாடகரின் பெயரைச் சொன்னார். ஆனால் நான் சித் ஸ்ரீராம் தான் பாட வேண்டும் என்று விடாப்படியாகக் கூறிவிட்டேன். ஆனால் அவர் சித் ஸ்ரீராம் பாடக்கூடாது என்று சொன்னார். நான் முடியாது என்றேன். எங்களுக்குள் 5 நாட்கள் சண்டை தொடர்ந்தது. சித் ஸ்ரீராம் பாடினால் நான் பாடல் பதிவுக்கு வர மாட்டேன் என்றார். நீங்கள் வர வேண்டாம் நானே பதிவு செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
கோபப்பட்டு அவர் வரவே இல்லை. பாடல் பதிவு முடிந்தது. இதன் பிறகும் அந்தப் பாடலின் இடையிசையை மாற்றச் சொல்லி கேட்டேன். கோபப்பட்டாலும் மாற்றிக் கொடுத்தார். எனக்கும் அவருக்கும் பல விவாதங்கள், சண்டைகள் இருந்தாலும் அவரைப் போல ஒரு மேதையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. என் அம்மாவின் கால்களை விட அவரது கால்கள் புனிதமானவை என்று நான் நினைக்கிறேன். அவருடன் செலவிட்ட நாட்களை மிகப் பெருமையாகக் கருதுகிறேன்”, என்றார் மிஷ்கின்.
4. அழகு மலர் ஆட… (வைதேகி காத்திருந்தாள்)
வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் பற்றி இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் ஒரு பேட்டியில் கூறியவை.
“80களில் இளையராஜா உச்சத்தில் இருந்த சமயம். அப்போது அவர் குறிப்பிட்ட 7 மெட்டுகளை தனியாக எடுத்து வைத்திருந்தார். இவை அனைத்துமே ஒரே படத்தில் இருந்தால் மட்டுமே நான் தருவேன் என்று கட்டாயமாகக் கூறிவிட்டார். பாலுமகேந்திரா, ராஜசேகர் போன்ற இயக்குநர்கள் கேட்டும் தரவில்லை.
இதைப் பற்றி கதாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்கள் என்னிடம் சொன்னார். இசையமைப்பாளர் அவரே இவ்வளவு நம்பிக்கையுடன் பேசும் போது, கதாசிரியராக நான் ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தேன். அவரிடம் சென்று அந்த மெட்டுகளைக் கேட்டேன். 7 மெட்டுகளும் ஒரே படத்துக்குத்தானே என்று கேட்டார். ஆம் என்றேன். அந்த மெட்டுகளை கேட்டு அதற்காக நான் எழுதிய கதை தான் வைதேகிக் காத்திருந்தாள் என்ற திரைப்படமாக உருவானது.
இதில் குறிப்பாக கடைசியில் வரும் அழகு மலர் ஆட பாடல், முதலில் ஆண்-பெண் சேர்ந்து பாடும் டூயட்டாகத்தான் இருந்தது. அதன் பின், நாயகியின் மன ஓட்டத்துக்கு ஏற்றாற் போல இப்படி ஒரு பாடலாக வேண்டுமென்று கேட்டேன். அதை மாற்றிப் போட்டுக் கொடுத்தார். நான் கொடுத்த மெட்டைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அவர் என்னிடமோ, அப்போது எந்த இயக்குநர்களிடமோ சொன்னதே இல்லை”
பட மூலாதாரம், facebook/Bharathiraja
5. சங்கீத ஜாதி முல்லை… (காதல் ஓவியம்)
இளையாராஜாவின் நீண்ட கால நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா தனது பேட்டியில் பகிர்ந்த நிகழ்வு இது.
“எனக்கும் இளையராஜாவுக்குமான புரிதல் மகத்தானது. இசையில் எனக்கு என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும். டிக் டிக் டிக் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென படத்தில் சில காட்சிகளுக்கு இளையராஜா என்ன இசையமைப்பாரோ என்று சந்தேகம் வந்துவிட்டது. பதறியடித்து அவரைப் பார்க்கச் சென்றேன்.
அவர் பின்னணி இசைக்கான வேலைகளில் இருந்தார். நான் அவரிடம் அந்தக் காட்சியில் எப்படியான இசை வேண்டும் என்று பேச ஆரம்பித்தேன். அவர் என்னை பேசவிடவில்லை. அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டார். ஆனால் நான் என்ன நினைத்தேனோ அப்படியே பின்னணி இசை அமைந்தது.
காதல் ஓவியம் படத்தின் இறுதிக் காட்சியில், சங்கீத ஜாதி முல்லை காணவில்லை என்ற ஒரு பாடல். படப்பிடிப்பின் போது நான் கூடுதலாக சில விஷயங்களை யோசித்து படம்பிடித்து விட்டேன். எனக்கு கர்நாடக இசையோ, ஜதியோ தெரியாது. இருந்தாலும் என் புரிதலில் நான் யோசித்து, நடிகை ராதாவை நடனமாட வைத்து, நாயகனின் கண்களை மட்டும் காட்டி காட்சிகளை படம் பிடித்துவிட்டேன். ஆனால் பாடலில் அதற்கான இடமில்லை. பின்னணி இசை கோர்ப்பின் போது என்ன இது என்று இளையராஜா கேட்டார்.
நீ போட்ட பாடலுக்கு மேல் நீயே கூடுதலாகக் கற்பனை செய்து சேர்த்துவிடு, எனக்கு இந்தப் பாணியில் வேண்டும் என்று எனக்குத் தெரிந்ததை சொன்னேன். உங்கள் இஷ்டத்துக்கு எடுத்து வந்தால் வாசிக்க முடியுமா என்று கேட்டார். உன்னால் முடியும் என்பதால் தான் எடுத்து வந்தேன் என்றேன். பின் பாலசுப்பிரமணியத்தை வரவழைத்து பாட வைத்து அந்தப் பாடலை நான் நினைத்தவாறே மிகச் சிறப்பாக முடித்தார் இளையராஜா”, என்கிறார் பாரதிராஜா.
பட மூலாதாரம், facebook/Rk Selvamani
6. ஆட்டமா தேரோட்டமா.. (கேப்டன் பிரபாகரன்)
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இளையராஜாவுடனான தனது பயணம் குறித்து இயக்குநர் ஆர்கே செல்வமணி பகிர்ந்தவை.
“இளையராஜா அவர்களின் பெயர் இல்லையென்றால் அன்றைய தேதியில் படம் வெளியாகாது. எனது முதல் படம் புலன் விசாரணையில் பாடல்கள் இல்லை. அவர் படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு, ஏன் படத்தில் பாடல்களே இல்லை என்று கேட்டார். ஏற்கனவே படத்தில் வணிக ரீதியான அம்சங்கள் இல்லை என்று பலர் என்னை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
இவரும் இப்படிக் கேட்டதால், ‘உங்கள் பாட்டை வைத்து அனைவரும் படத்தை ஓட வைக்கப் பார்க்கின்றனர். நான் உங்கள் பாடல் இல்லாமல் ஓட்ட நினைக்கிறேன்’ என்று கோபத்தில் கூறிவிட்டேன். அவர் என்னை அமைதியாகப் பார்த்துவிட்டுச் சென்றார். சுற்றியிருந்தவர்கள் பதறிவிட்டனர். எனக்கும் அதன் பிறகு வருத்தமாகிவிட்டது.
படம் வெளியானது. வெற்றி பெற்றது. என்னை அழைத்தார். இப்போது எனது பின்னணி இசை இல்லாமல் இந்தப் படத்தைப் பார், திரையரங்கில் ஒரு நாள் ஓடுமா என்று சொல் என்றார். நான் அதன் பின் அவரிடம் மன்னிப்புக் கேட்டேன்.
இதன் பிறகு கேப்டன் பிரபாகரன் படத்தில் கடைசி பாடலுக்கான சூழல். தேனியில் அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. நான் பாடல் மெட்டமைக்கச் செல்லவில்லை. அந்தச் சூழலுக்கான பாடல் ஒன்று வந்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை.
தொலைபேசியில் இளையராஜாவிடம் பேசினேன். அவரோ, பாடல் மெட்டமைக்கவும் நீங்கள் யாரும் வருவதில்லை, போட்ட பாடலும் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது. என்னதான் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான், எனது திரைப்படத்தை ஷோலேவைப் போல நான் எடுத்திருக்கிறேன். அதில் வரும் மெஹபூபா பாடலைப் போல ஒரு பாடல் வேண்டும் என்றேன்.
நான் சொன்னதை வைத்து அன்றே மெட்டமைத்து, பதிவு செய்து அடுத்த நாள் எங்கள் படப்பிடிப்புக்கு பாடலின் கேஸட் வந்தது. அதுதான் ஆட்டமா தேரோட்டமா பாடல். இதன் பிறகு அவர் பாடல்களுக்காகவே அமைந்த படம் செம்பருத்தி. 9 பாடல்களையும் வெறும் 45 நிமிடங்களில் இளையராஜா மெட்டமைத்தார்”, என்றார் ஆர்கே செல்வமணி.
பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja
7. நிலவே முகம் காட்டு… (எஜமான்)
சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், பொன்னுமணி, எஜமான் உள்ளிட்ட படங்களில் இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஒரு இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த செய்தி.
“எனது மூன்றாவது படத்தில் தான் என்னால் அவரை அணுக முடிந்தது. கிழக்கு வாசல் படத்தில் நான் எழுதிய பச்ச மல பூவு பாடலை முதலில் அவர் படிக்கவில்லை. பாலசுப்பிரமணியனை வைத்து என்னையே பதிவு செய்யச் சொன்னார். சில நாட்கள் கழித்து என்னை அழைத்து என் வரிகளை அவர் பாராட்டியதை மறக்க முடியாது.
எஜமான் படத்தின் போது நடந்த நிகழ்வை நான் சொல்ல விரும்புகிறேன். அப்போது அந்தப் படத்தின் பாடல்களுக்கு மெட்டமைக்க நான் காத்துக் கொண்டிருந்தேன். அவரை விட்டுப் பிரிந்து சென்ற மூத்த இயக்குநர்கள் சிலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வந்திருந்தனர். அவர்களின் படங்களுக்கான பாடல்களுக்கு மெட்டமைத்துக் கொண்டிருந்தார். அப்போது இளையராஜா அமைத்த மெட்டுகளை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அதனால் அந்த சமயத்தில் நான் போய் அவரிடம் கேட்க முடியாது. அவர் கோபத்தில் இருப்பார். நாளைக்கு மெட்டமைக்கலாம் என்று சொல்லி விடுவார் என்று நினைத்தேன்.
எனக்கு மனசு கேட்கவில்லை. இளையராஜாவின் அன்றைய உதவியாளர் சுந்தர்ராஜன் என்பவரை அழைத்தேன். அந்த இயக்குநர்கள் நிராகரித்த மெட்டுகளை போட்டுக் காட்டுங்கள் என்றேன். அவர்கள் வேண்டாம் என்று நிராகரித்த மெட்டுகளிலிருந்து நான் தேர்ந்தெடுத்த பாடல்கள் தான் மிகப்பெரிய வெற்றிப் பாடல்களாக அமைந்தன. அப்படியான பாடல் தான் எஜமான் படத்தில் வந்த நிலவே முகம் காட்டு என்ற பாடலும், ஒரு நாளும் உனை மறவாத என்ற பாடலும்”.
பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja
8. வளையோசை கலகலவென… (சத்யா)
சத்யா படத்தில் வரும் வளையோசை கலகலவென பாடல் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா, அவரது இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசியது:
“நான் நத்திங் பட் விண்ட் என்கிற தனியிசை ஆல்பத்துக்காக வைத்திருந்த மெட்டுதான் இந்தப் பாடல். புகழ் பெற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஹரிபிரசாத் சவுராஸியாவை இசைக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஒரு நாள் கமல்ஹாசனுடன் எதேச்சையாக பேசிக் கொண்டிருந்த போது இந்த மெட்டை இசைத்துக் காட்டினேன். மிக நன்றாக இருக்கிறதே. இதை என் படத்தில் பயன்படுத்தவா என்று கேட்டார். சரி என்றேன்.
பின் அதில் லதா மங்கேஷ்கரைப் பாட வைக்க முடிவு செய்தோம். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர் பாட ஏதுவாக வரிகளை அமைக்கலாம் என்று கவிஞர் வாலியிடம் சொன்னேன். கலகலகலவென, குளுகுளு தென்றல் போன்ற வார்த்தைகளை அவர் அதனால் தான் எழுதினார். குளுகுளு தென்றல் என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், அதை என் இசையில் எப்படிச் சொல்லலாம் என்று யோசித்தேன். அந்த வார்த்தைகளை வைத்துதான் அந்தப் பாடலுடன் ஆரம்ப இசையை உருவாக்கினேன்”
9. அந்திமழை பொழிகிறது… (ராஜ பார்வை)
“அந்த சூழலுக்கான மெட்டை அமைக்க நான், இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் மற்றும் கமல்ஹாசன் மூன்று பேரும் ராஜ்கமல் அலுவலகத்தில் உட்கார்ந்தோம். முதலில் நான் ஒரு மெட்டு போட்டேன், சிங்கீதம் இன்னொரு மெட்டு முயற்சி செய்யலாமா என்று கேட்டார். நான் அடுத்த 3 நாட்கள் மெட்டமைப்பதற்கு குற்றாலம் செல்லவிருந்தேன். முந்தைய நாள் இவர் வேறொரு மெட்டு முயற்சி பண்ணலாமா என்று கேட்டதால் குற்றாலம் சென்ற பிறகும் இவர்களுக்காக யோசித்தேன்.
திரும்பி வரும்போது 63 மெட்டுகளோடு வந்தேன். ராஜ்கமல் அலுவலகத்தில் அவர் கேட்கக் கேட்க அடுத்தடுத்த மெட்டுகளை வாசித்துக் கொண்டே இருந்தேன். எல்லாம் கேட்டு விட்டு, ராஜா, முதல் முதலில் ஒரு மெட்டு தந்தீர்களே, அதை கேட்கலாமா என்றார். சரி என்று அதை மீண்டும் இசைத்தேன். இது மிக நன்றாக இருக்கிறதே என்றார். அதுதான் இப்போது ஒலிக்கும் அந்தி மழை பொழிகிறது பாடல்.”, என்று இளையராஜாவே பகிர்ந்து கொண்டார்.
பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja
10. பொன்மாலைப் பொழுது… (நிழல்கள்)
இயக்குநர் பாரதிராஜா, தனது நிழல்கள் படத்திற்கான பாடல்களை மெட்டமைக்கும் போது முதல் முதலாக வைரமுத்துவும் இளையராஜாவும் சந்தித்துக் கொண்ட தருணம் குறித்துப் பகிர்ந்துள்ளதாவது:
“உபால்ட் என்கிற ஓவியர் வைரமுத்துவை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்கிற புத்தகத்தை வைரமுத்து எழுதியிருந்தார். இன்று இருக்கும் அதே கம்பீரம் அன்றும் வைரமுத்துவிடம் இருந்தது. என்னிடம் அவரது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, என்னைப் பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார். வாய்ப்பு கேட்க வந்த ஒருவனுக்கு என்ன இவ்வளவு திமிரா என்று நினைத்தேன். அவர் பெரிதாகப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார்.
இலங்கைக்கு படப்பிடிப்புக்கான இடங்களைப் பார்க்கச் செல்லும் போது விமானத்தில் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். எனது மண் சார்ந்த அத்தனை விஷயங்களும் அதில் இருந்தன. யார் இது என்று ஆச்சரியமாக யோசித்துக் கொண்டே சென்றேன். அப்போது எனக்கு வைரமுத்து மதுரையைச் சேர்ந்தவர், ஒரு வகையில் எனக்குச் சொந்தம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. சென்னை திரும்பி நிழல்கள் படத்திற்கான மெட்டமைக்கும் பணிகளை ஆரம்பித்தோம். பாடல்கள் எழுத புதிதாக யாரையாவது பயன்படுத்துவோம் என்று இளையராஜா சொல்லியிருந்தார்.
அப்போது நான் அந்தப் புத்தகத்தைக் காட்டி, இந்தப் புத்தகம் எழுதியிருக்கும் ஒருவன் இருக்கிறான். ஆனால் மிகவும் திமிர் பிடித்தவன் என்றே சொன்னேன். அப்போது வைரமுத்து அரசுப் பணி ஒன்றில் இருந்தார். அவரை பாட்டெழுத வரவழைத்தோம். அதே கம்பீரத்தோடு வந்தார். நான் என் மனதுக்குள், இவன் கர்வத்தை அடக்க மாட்டான் போலத் தெரிகிறதே என்று எண்ணிக் கொண்டேன். ஏனென்றால் இதைப் பார்த்தால் இளையராஜா அதற்கும் ஒரு படி மேல் நிற்பார்.
ராஜா மெட்டினை இசைத்தார். இந்த மெட்டுக்கு பாட்டெழுத வேண்டும் என்றோம். வைரமுத்து சரி என்று தலையசைத்து விட்டு கையில் பேப்பர் பேனாவுடன் வெளியே சென்றுவிட்டார். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. யார் யாரையோ அழைத்து வந்து வெறுப்பேற்றுகிறாயே என்று இளையராஜா என்னை திட்டினார். காத்திரு என்றேன். சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார் வைரமுத்து. காகிகதத்தை இளையராஜாவின் முன்னால் வைத்தார். அவர் அதை எடுத்துப் பார்த்தார். தனது மெட்டுக்கு அந்த வார்த்தைகளை பொருத்தி, பொன் – மாலைப் – பொழுது என்று பாட, அது அப்படியே சரியாக இருந்தது. ஆச்சரியமடைந்தார். அன்று ஆரம்பித்தது தான் இவர்கள் கூட்டணி”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.