படக்குறிப்பு, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
காஸாவின் கான் யூனுஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் சலா அல்-பர்தாவீல் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவரான பர்தாவீல் மற்றும் அவரது மனைவி என இருவருமே கொல்லப்பட்டதாக உள்ளூர் நபர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கான் யூனிஸ் மற்றும் தெற்கு ரஃபாவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
காஸாவில் மீண்டும் தீவிர தாக்குதல்களை இந்த வாரத்தில் இஸ்ரேல் தொடங்கியது. சுமார் 2 மாதங்களாக நடைமுறையில் இருந்த முதல் கட்ட போர் நிறுத்தம் இதனால் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் ஏற்க மறுத்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
மற்றொருபுறம் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட உண்மையான உடன்படிக்கையை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேலிய படைகளை திரும்ப பெறுவது, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலத்தீன சிறைக்கைதிகளை படிப்படியாக விடுவிப்பது, போரை முழுவதுமாக நிறுத்தி காஸாவை மறு கட்டமைப்பு செய்வது போன்றவை திட்டமிடப்பட்டிருந்தது.
அகதிகள் முகாமில் பிறந்தவர்
பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமையன்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்கிய போது பர்தாவீல் மற்றும் அவரது மனைவி தங்களின் கூடாரத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
8 குழந்தைகளின் தந்தையான பர்தாவீல் ஹமாஸின் பிரபலமான அரசியல் ஆளுமையாக உள்ளார்.
கான் யூனிஸின் அகதிகள் முகாமில் பிறந்த இவர், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஹமாஸ் அமைப்பை நிறுவியவர்களை அடுத்து இரண்டாம் தலைமுறை தலைவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்பட்டார்.
ஹமாஸின் அரசியல் பிரிவுக்கு 2021-ஆம் ஆண்டு இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
போரில் சின்வார் மற்றும் ராவி முஷ்டாஹா கொல்லப்பட்ட பின்னர், பர்தாவீல் ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவராக கருதப்பட்டார்
பட மூலாதாரம், Getty Images
கடந்த செவ்வாய்க்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் தெற்கு காஸாவில் தொடர்ச்சியான தீவிர குண்டு வீச்சுக்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடந்த வான்வழித் தாக்குதலில்தான் பர்தாவீல் கொல்லப்பட்டுள்ளார்.
பிபிசியிடம் பேசிய பாலத்தீனிய செம்பிறை சங்க செய்தி தொடர்பாளர் ஒருவர், ரஃபாவில் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுக முயன்ற அந்த அமைப்பின் பல ஆம்புலன்ஸ்களை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
துணை மருத்துவப் பணியாளர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், காஸாவினுள் சிக்கியிருக்கும் மருத்துவக்குழு ஒன்றுடன் தொடர்பு பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேற்கு ரஃபாவில் உள்ள டெல் அல் சுல்தான் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
தரைவழியாகவும் தாக்குதல்
பட மூலாதாரம், Getty Images
எகிப்து எல்லையிலுள்ள ஃபிலாடெல்ஃபி பாதையில் நிலைத் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படைகளால் கவசவாகன (Tank) தாக்குதல்கள், மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
அப்பகுதியின் அருகே வசிக்கும் அலா அல்-தின் சபா பிபிசியிடம் குரல் பதிவு தகவல் மூலம் அளித்த தகவலின்படி,”மழை பொழிவது போன்று தோட்டாக்கள் பொழிகின்றன. ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரை ஆம்புலன்ஸ் அணுக முடியவில்லை” என்றார்.
“துணை மருத்துவப் பணியாளர் ஒருவர் தரையில் விழுந்து கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்” என்றும் அவர் கூறினார்.
2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரைக் கொன்றனர், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக தகர்க்கும் முனைப்புடன் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதுவரையிலான தாக்குதல்களில் 49,500 பாலத்தீனியர்கள் காஸாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.