14
ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவின் தளபதியாக 2018-ம் ஆண்டு முதல் அலிரசா தங்சிரி பணியாற்றி வருகிறார். ஈரானின் புஷெர் மாகாணத்தில் பிறந்த இவர், 1980-களில் நடைபெற்ற ஈரான் – ஈராக் போர் மற்றும் புகழ்பெற்ற ‘டேங்கர் போர்களில்’ பங்கேற்றுப் பெரும் அனுபவம் பெற்றவர்.
2010 முதல் 2018 வரை IRGC கடற்படையின் துணைத் தளபதியாக இருந்த இவர், அலி ஃபடாவிக்குப் பிறகு தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். ஈரானின் கடல்சார் பாதுகாப்பு உத்திகளை வகுப்பதிலும், அமெரிக்காவிற்கு எதிரான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுப்பதிலும் இவர் மிக முக்கியமான தூணாகக் கருதப்பட்டார்.
உலகக் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தங்சிரி.
“இந்த ஜலசந்தி ஈரானுக்குச் சொந்தமானது; இங்கு அத்துமீறும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை” என்று பலமுறை பகிரங்கமாக எச்சரித்தவர். பிப்ரவரி 28-ம் திகதி போர் தொடங்கிய பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உலக நாடுகளுக்கு எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவின் உளவு ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித்துறையால் இவர் ‘சர்வதேசப் பயங்கரவாதி’ என அறிவிக்கப்பட்டுத் தடைகளுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (மார்ச் 26, 2026) அதிகாலை, ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டிடத்தின் மீது ஏவுகணை பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
ஒருவேளை இது உறுதியாகும் பட்சத்தில், ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனிக்குப் பிறகு ஈரானுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படும்.