பட மூலாதாரம், AFP via Getty Images
இஸ்ரேலின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் அமிச்சாய் சிக்லி, ‘கத்தார்கேட்’ (Qatargate) விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென புதன்கிழமை (டிசம்பர் 24) அன்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
தற்போதைய இஸ்ரேல் அரசாங்கத்தில் இத்தகைய கோரிக்கையை முன்வைத்த முதல் அமைச்சர் இவர்.
சிக்லி, ‘கான் ரெஷெட் பெட்’ (Kan Reshet Bet) வானொலிக்கு அளித்த பேட்டியில், ‘கத்தார்கேட் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்று விவரித்ததுடன், ‘அதில் முழுமையான விசாரணை அவசியம்’ என்றும் கூறினார்.
அப்போது அவர், “இதை நியாயப்படுத்த வழியே இல்லை. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்குகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
கத்தார்கேட் ஊழலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் கத்தாரின் நலன்களை மேம்படுத்துவதில் பங்கு வகித்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இஸ்ரேல் கடுமையான ராஜதந்திர மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களுடன் திணறிக் கொண்டிருந்த நேரத்தில், ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டும் இதில் அடங்கும்.
பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர்களுக்கும் கத்தாருக்கு ஆதரவு திரட்டுபவர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களின் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது அரசியல் மற்றும் பொது மட்டத்தில் பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கத்தார் குறித்துப் பேசும்போது, சிக்லி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
“என் பார்வையில், அது ஒரு எதிரி நாடு மற்றும் மோசமான நாடு. கத்தார்கேட் தொடர்பான குற்றச்சாட்டுகளை என்னால் நியாயப்படுத்த முடியாது. இது அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சில ஊடக நிறுவனங்கள் நிதி ரீதியாகப் பலன் அடைந்திருக்கலாம் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
முன்னதாக திங்கள்கிழமையன்று, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தாலி பென்னட், கத்தார்கேட் ஊழல் தொடர்பான விவகாரத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
பட மூலாதாரம், Getty Images
பெஞ்சமின் நெதன்யாகுவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில் பென்னட் ஒரு முக்கிய வேட்பாளராகக் கருதப்படுகிறார்.
நெதன்யாகுவின் உதவியாளர்களுக்கு கத்தார் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, அவரது நிர்வாகம் ‘துரோகம்’ இழைத்துவிட்டதாக முன்னாள் பிரதமர் பென்னட் குற்றம் சாட்டினார்.
பென்னட் தனது சமூக ஊடக பதிவில், “போரின்போது, நெதன்யாகுவின் நிர்வாகம் இஸ்ரேலுக்கும் அதன் ராணுவ வீரர்களுக்கும் துரோகம் இழைத்ததுடன், பேராசையால் கத்தாரின் நலன்களுக்காகச் செயல்பட்டது” என்று குற்றம் சாட்டினார்.
நெதன்யாகுவே இந்த வழக்கை முடக்க முயல்வதாகக் குறிப்பிட்ட பென்னட், “இது இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக மோசமான துரோகச் செயல்” என்றும் குறிப்பிட்டார்.
கத்தார்கேட் என்றால் என்ன?
இஸ்ரேலிய செய்தி ஊடகங்களில் கத்தாரின் நலன்களை ஊக்குவிப்பதற்காக நெதன்யாகுவின் ஊடக ஆலோசகர்களுக்கு கத்தார் பிரதிநிதி ஒருவர் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த ‘கத்தார்கேட்’ வழக்கு அமைந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு பல இஸ்ரேலியர்களை கோபமடையச் செய்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளதுடன், ஹமாஸுக்கு நிதி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஷின் பெட் (Shin Bet) என்ற இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை பதவியிலிருந்து நீக்க நெதன்யாகு சமீபத்தில் மேற்கொண்ட முயற்சிகள் இந்த சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளன.
உண்மையில், நெதன்யாகுவின் உதவியாளர்களுக்கு எதிரான விசாரணையை முதலில் தொடங்கியதே ஷின் பெட் அமைப்புதான்.
நெதன்யாகு இந்த வழக்கை, “தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
கத்தார் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, நெதன்யாகுவின் உதவியாளர்களான ஜோனாதன் யூரிச், எலி ஃபெல்ட்ஸ்டைன் ஆகியோர் இஸ்ரேலிய செய்தி ஊடகங்களில் கத்தார் குறித்த நேர்மறையான பிம்பத்தை உருவாக்க முயன்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் பெயர் குறிப்பிடப்படாத மூன்றாவது நபர் ஒருவருடன் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
எகிப்து மற்றும் கத்தாரின் பங்கு
எகிப்து, கத்தார் ஆகிய இரு நாடுகளுமே 2023 இறுதி முதல் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இருப்பினும், மத்தியஸ்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு இல்லை.
காஸா போர் நிறுத்தம் தொடர்பான ராஜதந்திர முயற்சிகளில் எகிப்தைவிட கத்தார் முக்கியப் பங்காற்றியது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க இந்த மூவரும் முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
கத்தார் அரசாங்கம் ஓர் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், எகிப்தின் ‘தீர்க்கமான பங்கை’ பாராட்டியது. மேலும், “இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும்” கூறியது.
யூரிச் மற்றும் ஃபெல்ட்ஸ்டைன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்கள் பல கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் இறுதி வாரத்தில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஜோனாதன் யூரிச் ஒரு முன்னாள் இஸ்ரேலிய ராணுவ ஊடக அதிகாரி மற்றும் நெதன்யாகுவின் மிகவும் நம்பகமான வியூக வகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சமீபத்திய தேர்தல்களில் பிரதமரின் தகவல் தொடர்பு வியூகத்தை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார். நெதன்யாகு தனது சுயசரிதையில் அவரை ‘கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர் போன்றவர்’ என்று விவரித்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், கத்தாருக்காக பணியாற்றும் அமெரிக்க ஆதரவு திரட்டுபவர் (lobbyist) ஒருவர் சார்பாக ஃபெல்ட்ஸ்டைனுக்கு நிதி அனுப்பியதாக ஒரு தொழிலதிபர் கூறுவதன் ஆடியோ பதிவை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டன.
அந்த நேரத்தில், அந்த நிதி கத்தாருக்காக அல்ல, பிரதமர் அலுவலகத்திற்கு ஃபெல்ட்ஸ்டைன் வழங்கிய தகவல் தொடர்பு சேவைகளுக்காக வழங்கப்பட்டது என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மேலும் தொழிலதிபருக்கும் கத்தார் உள்ளிட்ட பிற தரப்பினருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருப்பது குறித்து ஃபெல்ட்ஸ்டைனுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.
மறுபுறம், கத்தாரிலிருந்து வந்த செய்திகளை, அவை மூத்த இஸ்ரேலிய அரசியல் அல்லது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து வந்ததைப் போல செய்தியாளர்களுக்கு யூரிச் வழங்கினார் என்ற சந்தேகம் இருப்பதாக போலீஸ் பிரதிநிதி ஒருவர் நீதிபதி மிஸ்ராஹியிடம் தெரிவித்தார்.
கத்தார் தரப்பு கூறுவது என்ன?
கத்தார் அதிகாரி ஒருவர் ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழிடம் பேசுகையில், “நாங்கள் இத்தகைய அவதூறு பிரசாரத்தால் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. காஸா போர் முடிவுக்கு வருவதையோ அல்லது எஞ்சியிருக்கும் பிணைக் கைதிகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்புவதையோ விரும்பாத நபர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்றார்.

டிசம்பர் 25 அன்று, இஸ்ரேலின் முன்னணி நாளிதழான ‘ஜெருசலேம் போஸ்ட்’ கத்தார்கேட் குறித்து ஒரு தலையங்கம் எழுதியது.
அதில், “கத்தாரின் பிராந்திய பங்கு ரகசியமானது அல்ல. பல ஆண்டுகளாக, இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்துடன் இணைந்த அமைப்புகள் உள்பட மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கான கத்தாரின் அரசியல் மற்றும் நிதி ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளன.
அல் ஜசீராவின் உரிமை மற்றும் நிதி ஆதாரம் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை சிறிய அல்லது மறைக்கப்பட்ட உண்மைகள் அல்ல. எனவே எந்தவொரு தொடர்பும் அல்லது செல்வாக்கும் இந்தச் சூழலின் அடிப்படையிலேயே ஆராயப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
“அதே நேரத்தில், இஸ்ரேல் கத்தாருடன் வரம்புக்கு உட்பட்ட மற்றும் நடைமுறை ரீதியான தொடர்புகளை, குறிப்பாக பிணைக் கைதிகள் மீட்பு மற்றும் போர் நிறுத்த முயற்சிகளில், பேணி வருகிறது. அதிகாரிகள் இந்த ஈடுபாட்டை மூலோபாய ரீதியானதாக அல்லாமல், ஒரு தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கையாக என்றே விவரிக்கின்றனர்” என்று ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட தலையங்கம் குறிப்பிட்டது.
அதோடு, “ஒரு சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கத்தார் உதவியாக இருப்பது, பெரும் மூலோபாய கவலைகளைவிட முக்கியமானது அல்ல. அதனால்தான் இந்த விசாரணைகளை வெறும் அரசியல் அசௌகரியங்களாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தொடர்புகள் மற்றும் செய்திகள் குறித்த நடவடிக்கைகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்” என்றும் ஜெருசலேம் போஸ்ட் எழுதியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு