ஓர் இஸ்ரேலிய குடும்பத்துக்கு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலும் அதன்பின் காஸாவில் வெடித்த போரும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அவர்களின் முடிவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அதே நேரத்தில், வெளிநாட்டில் வசிக்கும் மற்றொரு யூத குடும்பத்துக்கு, அந்த நிகழ்வுகளும் அதிகரித்த யூத எதிர்ப்பும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தின.
இஸ்ரேல் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, தற்போது நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை, இஸ்ரேலுக்குள் வரும் மக்களை விட அதிகமாக உள்ளது.
மத்திய இஸ்ரேலின் ரம்லா நகரத்தில், நோஃபர் மற்றும் இயல் அவிடன் தம்பதியரின் 15வது மாடி குடியிருப்பில், அவர்களின் பொருட்களை பெரிய அட்டைப்பெட்டிகளில் ஒரு நிறுவனம் அடைக்கிறது. அந்த பெட்டிகளில் “ஒட்டாவா, கனடா” என்று லேபிள் ஒட்டப்பட்டுள்ளது.
நோஃபர் தனது ஏழு மாத மகள் ஷினாவுக்கு உணவளித்துக்கொண்டே, “எந்த வருத்தமும் இல்லை” என்கிறார்.
அவர் “இடமாற்றம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இது இஸ்ரேலை விட்டு செல்லும் பல யூதர்கள் பயன்படுத்தும் சொல்.
அதாவது, ஒருநாள் திரும்பி வரலாம் என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆனால் “வெளியேறுதல்” என்ற சொல், தாயகத்தை முழுமையாக விட்டு பிரிந்து செல்கிறோம் என்ற உணர்வை தருகிறது.
”2023ல் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, நாங்கள் வெளிநாடு செல்வதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் நடந்த தாக்குதல்கள் எங்களுக்கு அந்த எண்ணத்தை வலுப்படுத்தின. இப்போதுதான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சரியான நேரம் என்று முடிவு செய்தோம்” என்கிறார் 39 வயதான ஆங்கில ஆசிரியையான நோஃபர்.
“எங்கள் குடும்பமும், எங்கள் மகள் ஷினாவும் வேறு விதமான வாழ்க்கையைப் பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று நோஃபர் கூறுகிறார்.
“நாங்கள் இந்த வீட்டின் வசதியைத் தாண்டி, அமைதியான வாழ்க்கைக்கு ஏங்குகிறோம்” என அவர்களது கடைசி பொருட்களை பெட்டிகளில் அடைக்கும்போது, வழக்கறிஞரான இயல் சொல்கிறார்.
கனடாவுக்கு இடம்பெயர திட்டமிடும்போது, அவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அவர்களுடய பல நண்பர்களும் ஏற்கனவே கனடாவில் குடியேறியிருந்தனர். மேலும், அங்கு புதிய மொழி கற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
‘வாழ்க்கை இன்னும் கடினமாகிவிட்டது’
“நான் பெருமையான யூதரும், சியோனிஸ்ட்டும் தான். ஆனால், என் மகள் ‘யூதர்’ என்று அடையாளப்படுத்தப்பட வேண்டாம் என நான் நினைக்கிறேன். மாறாக, அவள் ஒரு மனிதராக பார்க்கப்பட வேண்டும். இஸ்ரேலை விட கனடாவில் அவளுக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கும். இஸ்ரேலில் உள்ள அரசு, தீவிர மதக்கோட்பாடு பின்பற்றுபவர்கள் மீதுதான் முழுக்க முழுக்க கவனம் செலுத்துகிறது” என்று நோஃபர் கூறுகிறார்.
“இஸ்ரேலில் அரசியல்வாதிகள், கடினமாக உழைத்து பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் மக்களை ஆதரிப்பதில்லை. நாங்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், எங்களை யாரும் கவனிப்பதில்லை, புரிந்துகொள்வதில்லை,” என்றும் அவர் சொல்கிறார்.
பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி அரசைப் பற்றி தான் நோஃபர் குறிப்பிடுகிறார்.
இந்த அரசு, இஸ்ரேல் வரலாற்றில் மதச்சார்பும், கடுமையான கொள்கைகளைக் கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது. அங்குள்ள தீவிர வலதுசாரி கட்சிகள் முக்கிய கொள்கைகளில் பெரியளவில் செல்வாக்கு செலுத்துகின்றன.
மறுபுறம், இஸ்ரேலில் வாழ்வது எப்போதுமே சவாலாக இருந்ததாக சில இஸ்ரேலியர்கள் உணர்கின்றனர். “அக்டோபர் 7-க்கு முன்பே எங்களது எதிர்காலம் நம்பிக்கையளிப்பதாகத் தோன்றவில்லை ” என்று நோஃபர் கூறுகிறார்.
காஸா போர் தொடங்கிய பிறகு வாழ்க்கை இன்னும் கடினமாகிவிட்டதாகவும் அவர் சொல்கிறார்.
“வாரத்துக்கு ஒருமுறை என்றாலும் கூட ராக்கெட் தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கும்போது பாதுகாப்பு அறைக்கு விரைந்து செல்வது இயல்பாகத் தோன்றவில்லை
முடிவு தெரியாத இந்தப் போரில் குழந்தைகளை வளர்ப்பது சாதாரணமல்ல. ஒரு மணி நேரத்துக்கு முன்பாகக் கூட, இந்த இடத்துக்கு அருகே உள்ள அஷ்டோத் நகரில் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. எங்களைச் சுற்றி துக்கமும் துயரமும் நிறைந்திருக்கிறது” என்கிறார் நோஃபர்.
காஸாவிலிருந்து ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலிய நகரங்களை நோக்கி வீசும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கை, போர் தொடங்கியதிலிருந்து அதிகரித்து வருவதை நோஃபர் குறிப்பிடுகிறார்.
‘மன உளைச்சலுடன் வீடு திரும்பும் ஆண்கள்’
போருக்கு முன்பே இஸ்ரேலிய சமூகத்தில் “வன்முறை அதிகரித்து வந்தது” என்று இயல் கவலை தெரிவிக்கிறார்.
“சாலைகளில், பொது இடங்களில், குடியிருப்புகளில் என எல்லா இடங்களிலும் ஆக்ரோஷமான நடத்தை பரவியிருக்கிறது. போர் இதை இன்னும் மோசமாக்கிவிட்டது,” என்று அவர் கூறுகிறார்.
இஸ்ரேல் புள்ளியியல் அலுவலகத்தின் தரவுப்படி, 2024-ல் சாலை விபத்து மரணங்கள் 2023-ஐ விட 22% அதிகரித்துள்ளன.
2023ம் ஆண்டு அக்டோபர் 7 தாக்குதல்கள், இஸ்ரேலியர்களின் உணர்வுகளையும் நடத்தைகளையும் ஆழமாகப் பாதித்ததாக ஜெருசலேம் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மையம் (JCSFA) தெரிவிக்கிறது.
2024 ஜூன் மாதத்தில், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான நாடாளுமன்ற குழு போர் தொடங்கியதிலிருந்து குடும்ப வன்முறை புகார்கள் அதிகரித்திருப்பதாக அறிந்தது.
“போருக்குப் பின் மன உளைச்சலுடன் வீடு திரும்பும் ஆண்கள், முழு குடும்பத்தையும் பாதிக்கின்றனர். வன்முறை நடத்தைகள் அடக்கப்பட்டு, சிகிச்சை இல்லாமல் இருக்கின்றன. பெண்கள் புகார் செய்ய வெட்கப்படுகின்றனர்,” என்று ‘மதர்ஸ் ஆன் தி ஃப்ரண்ட்’ அமைப்பு நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்தது.
மேலும், 2023 அக்டோபருக்குப் பிறகு, தீவிர வலதுசாரியும் தேசிய பாதுகாப்புத் துறையின் அமைச்சருமான இடாமர் பென் க்விர், துப்பாக்கிச் சட்டங்களை தளர்த்தும் சீர்திருத்தங்களை வேகப்படுத்தினார்.
இதன் விளைவாக, துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரித்தன.
இஸ்ரேலிய ஊடகங்களின் தகவல்படி, இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை நிபந்தனை ஒப்புதலைப் பெற்றுள்ளன.
தெருக்களில் ஆயுதங்கள் அதிகரிப்பது துப்பாக்கி வன்முறையை தூண்டலாம் என்று ஜெருசலேம் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மையம் (JCSFA) உள்ளிட்ட அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.
இது மட்டுமில்லாமல், நாட்டை விட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்ததற்கு வேறு காரணங்களும் இருப்பதாக நோஃபரும் இயலும் கூறுகின்றனர்.
“அத்தியாவசியப் பொருட்களின் செலவு மிகவும் உயர்ந்துவிட்டது. போர் தொடங்கியதிலிருந்து கூடுதல் வரி செலுத்த வேண்டியுள்ளது,” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அதிகரித்த விலை
2025ம் ஆண்டு தொடக்கத்தில், முக்கிய உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் விலை உயர்வு பட்டியலை அறிவித்தன.
உலகம் முழுவதுமே இது ஒரு பிரச்னையாக இருந்தாலும், இந்த ஆண்டு ஏப்ரலில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலில் உள்ள விலை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளது” என்று குறிப்பிட்டது.
அதேபோல் போர் செலவுகளை ஈடுகட்ட, இஸ்ரேலில் வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. 2025 ஜனவரியில், மதிப்பு கூட்டு வரி (VAT) 17%-லிருந்து 18%-ஆக உயர்ந்தது. பொதுத்துறை ஊழியர்களுக்கு தற்காலிக சம்பளக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. (தனியார் துறையில் பணிபுரியும் நோஃபரும் இயலும் இதனால் பாதிக்கப்படவில்லை.)
அவிடன் இயல் குடும்பதினரின் வீட்டை காலி செய்யும் பணியை மேற்பார்வையிடும் டேனி ஷெரர், 2023 அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு முன்பே இஸ்ரேலை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை உயர்ந்ததாகக் கூறுகிறார். அவரது நிறுவனம் 2022-ல் ஆண்டுக்கு 400 இடமாற்றங்களைக் கையாண்ட நிலையில், 2023 நடுப்பகுதியில் அது 700-ஐ தாண்டியதாக அவர் மதிப்பிடுகிறார்.
இதற்குக் காரணம், 2023-ல் வெடித்த நீதித்துறை சீர்திருத்த நெருக்கடி என்று அவர் கூறுகிறார். அந்தக் கோடையில் பெரும் போராட்டங்கள் நடந்தன. பிரதமர் நெதன்யாகுவின் அரசு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து, நீதிபதி நியமனங்களில் அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் சீர்திருத்தங்களை அமல்படுத்தியது.
நீதிபதிகள் அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளில் அதிகமாக தலையிடுவதாக சீர்திருத்தத்தின் ஆதரவாளர்கள் வாதிட்டனர். ஆனால், விமர்சகர்கள் இந்த சீர்திருத்தங்கள் இஸ்ரேலின் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கருதினர்.
”நான் இடமாற்றம் செய்ய உதவுகிறவர்களில் பெரும்பாலானோர் தொழில்முறை நிபுணர்கள். அவர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்” என்று கூறுகிறார் டேனி .
ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் இஸ்ரேல் இனோவேஷன் ஆணையத்தின் தரவுப்படி, 2024-ல், கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக உயர் தொழில்நுட்பத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2023 அக்டோபர் முதல் 2024 ஜூலை வரை, சுமார் 8,300 உயர் தொழில்நுட்ப ஊழியர்கள், அதாவது அந்தத் துறையின் 2.1% பணியாளர்கள் ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதேபோல் 2023 முதல் 2024 வரை, இஸ்ரேலை விட்டு வெளியேறிய குடிமக்களின் எண்ணிக்கை (82,700) புதிதாக குடியேறியவர்களின் எண்ணிக்கையை (60,000) விட அதிகமாக இருந்தது என்று கூறுகிறது புள்ளியியல் அலுவலகம்
“இஸ்ரேல் உருவாகி 77 ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாக நடக்கிறது,” என்று யூத கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஐரோப்பிய யூத மக்கள் தொகை பிரிவுத் தலைவர் பேராசிரியர் செர்ஜியோ டெல்லா பெர்கோலா கூறுகிறார்.
“முதல் இரண்டு முறை, 1950களின் தொடக்கத்திலும் 1980களின் நடுப்பகுதியிலும் நடந்தது. அதற்கு முக்கியக் காரணமாக பொருளாதாரமே இருந்தது. ஆனால் இப்போது பாதுகாப்பு, போர், பொருளாதாரம், மற்றும் பல காரணங்கள் கலந்துள்ளன,” என்று செர்ஜியோ டெல்லா பெர்கோலா கூறுகிறார்.
2025-லும் இந்தப் போக்கு தொடரும் என்று அவர் நம்புகிறார், ஆனால் முன்பு போல தீவிரமாக இருக்காது என்றும் சொல்கிறார்.
பிரிட்டனில் இருந்து வந்த குடும்பம்
2022-ல் ரஷ்யாவின் யுக்ரேன் போர், முதலில் அந்த நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு வருவோர் எண்ணிக்கையை அதிகரித்தது. ஏனெனில், சிலர் போரையோ, ராணுவ பணியையோ தவிர்க்க வெளியேறினர். ஆனால், பின்னர் அந்த குடியேற்றம் மீண்டும் குறைந்துவிட்டதாக செர்ஜியோ டெல்லா பெர்கோலா கூறுகிறார்
யூதர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்வது ‘அலியா’ என்று அழைக்கப்படுகிறது. இது ஆன்மிக நம்பிக்கைகளும் பொருளாதாரக் காரணங்களும் இணைந்த ஒரு பயணம். இது மக்களை புதிய வாழ்க்கைக்கு தூண்டுகிறது.
சிலருக்கு, அக்டோபர் 7 தாக்குதல்கள், இஸ்ரேல் என்பது யூதர்களுக்கு இறுதியான பாதுகாப்பான புகலிடம் என்ற நம்பிக்கையை சவாலுக்கு உட்படுத்தியது.
மற்ற சிலர், அந்தத் தாக்குதல்களுக்குப் பின் காஸா போரால் உலகளவில் யூத வெறுப்பு அதிகரித்ததால், இஸ்ரேலுக்கே திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வலுத்ததாகக் கூறுகிறார்கள்.
காஸாவிலிருந்து 12 மைல் வடக்கே அஷ்கெலோன் நகரில் உள்ள தங்கள் சிறிய வீட்டில், சிம்ஹா தஹான் யூத புத்தாண்டுக்காக உணவு தயாரிக்கிறார்.
செம்மறியாட்டின் பாதி தலை, நேர்த்தியாக வெட்டப்பட்டு, அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கிறது.
“மான்செஸ்டரில் மீன் தலையுடன் இதை செய்தேன். இங்கு ஆட்டுத் தலை பயன்படுத்துகிறேன். மீன் தலை எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த நாக்கு சுவையாக இருக்கிறது,” என்று அவர் சொல்கிறார்.
ஆட்டுத் தலை யூத பாரம்பரியத்தில் பல குறியீடுகளைக் கொண்டது. “புதிய ஆண்டில் வாலாக அல்ல, தலையாக இருப்போம்” என்பது அவற்றில் ஒரு நம்பிக்கை.
கடந்த காலங்களில், பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள அவர்களது வீட்டு சமையலறை மேசையைச் சுற்றி, சிம்ஹாவின் எட்டு மகள்களும் ஒன்றுகூடி யூத புத்தாண்டை கொண்டாடுவார்கள். ஆனால், 2024 ஆகஸ்டில் சிம்ஹாவும் அவரது கணவர் மீரும் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தபோது, அவர்களது நான்கு மகள்கள் பிரிட்டனிலேயே தங்கினர்.
இந்த தீவிர மதக்கோட்பாடு கொண்ட தம்பதியர் செபார்டிக் யூதர்கள். இது ஸ்பெயின், போர்ச்சுகல், வட ஆபிரிக்கா போன்ற மத்தியதரைக் கடல் பகுதிகளைச் சுற்றிய யூதர்களின் வழித்தோன்றல்களைக் குறிக்கிறது.
‘அச்சம் அதிகரித்தது’
பிரான்சில் பிறந்த சிம்ஹா, 1992-ல் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். பின்னர், மீரை மணந்தார்.
மீர் தனது 14-வது வயதில் மொராக்கோவை விட்டு, மான்செஸ்டரில் உள்ள யெஷிவா எனும் யூத மதப் பள்ளியில் சேர்ந்தவர்.
மீர் ஒரு ‘ஷோசெட்’ , அதாவது யூத மத விதிகளின்படி விலங்குகளை அறுக்கும் நிபுணர். இஸ்ரேலில்வேலைக்கு உரிமம் கிடைக்கும் வரை, அவர் பிரிட்டனுக்கு சென்று பணிபுரிகிறார்.
சிம்ஹா முன்பு மான்செஸ்டரில் ‘டூலா’ (Doula) என்ற தன்னார்வ பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு பிறப்பின் போது ஆதரவு வழங்கும் பணி. அதை இஸ்ரேலில் தொழில்முறை ரீதியாக தொடர விரும்புவதாக அவர் கூறுகிறார்.
“நாங்கள் எப்போதுமே இஸ்ரேலுக்கு குடிபெயர விரும்பினோம். ஆனால், எங்கள் மூத்த மகள்கள் கல்வியை முடிக்கும் வரை காத்திருந்தோம்,” என்று மீர் கூறுகிறார்.
“அக்டோபர் 7-க்கு முன்பே யூத விரோதம் வளரத் தொடங்கியது. ஆனால், அதற்குப் பிறகு அது வேகமாக உயர்ந்தது,” என்று சிம்ஹா சொல்கிறார்.
“எங்கள் சமூகத்தில் ஆண்கள் வெளியே செல்லும்போது கிப்பா அணிவதை நிறுத்திவிட்டனர். இரவில் நானோ அல்லது என் மகள்களோ வெளியே செல்வது பாதுகாப்பாக இல்லை என்று உணர்ந்தோம்,” என்று சிம்ஹா கூறுகிறார்.
“‘ ஃப்ரீ பாலத்தீன் (Free Palestine)’ என்று எழுதிய பதாகைகளைப் பிடித்தவர்களைப் பார்த்தபோது, எனக்கு பயமாக இருந்தது. அவர்கள் அதை எப்படி புரிந்துகொள்கிறார்கள், எப்படி நடந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை,” என்று அவர் சொல்கிறார்.
ஒருமுறை தனது மகள் அழுதபடி வீடு திரும்பிய சம்பவம் தான் அவர்கள் அந்த முடிவை எடுக்க வழிவகுத்தது என்று சிம்ஹா கூறுகிறார்.
“‘ஃப்ரீ பாலத்தீன்'(Free Palestine) என்று எழுதிய டி-ஷர்ட் அணிந்த ஒருவர் என்னை கோபமாகப் பார்த்தார் என்று என் மகள் சொன்னாள். அவள் யூதர் என்று அவருக்குத் தெரிந்ததா என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அது அவளுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது,” என்று சிம்ஹா கூறுகிறார்.
மான்செஸ்டரில் உள்ள ஒரு யூத ஆலயத்தின் வெளியே சமீபத்தில் நடந்த தாக்குதல், அவர்களது பழைய வீட்டுக்கு மிக அருகில் நடந்ததாகவும், அதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர், தான் வேலை செய்த சூப்பர் மார்க்கெட்டின் வழக்கமான வாடிக்கையாளராக இருந்ததாகவும் சிம்ஹா சொல்கிறார்.
பட மூலாதாரம், Reuters/Phil Noble
இஸ்ரேல், உலகில் வேறு எங்கும் யூதர்களுக்கு கிடைக்காத பாதுகாப்பையும் நிம்மதியையும் தருகிறது என்று சிம்ஹா நம்புகிறார்.
“இங்கு இரவில் கூட எந்த நேரத்திலும் பயமின்றி வெளியே செல்ல முடியும். ஆயுதமேந்திய வீரர்களும் குடிமக்களும் எப்போதும் உள்ளனர். ஏதாவது நடந்தால் அவர்கள் உடனே பாதுகாப்பார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், 2023 அக்டோபர் 7-ல், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் சுமார் 1,200 இஸ்ரேலியர்களைக் கொன்று, 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தன. இப்படி ஒரு போரில் சிக்கியுள்ள நாட்டில் வாழ்வது பற்றி அவர் என்ன நினைக்கிறார்?
சிம்ஹாவின் புதிய வீடு காஸாவிலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. அங்கு இஸ்ரேலின் எதிர்த்தாக்குதல்களில் 66,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
“எனக்கு கவலையில்லை. நான் பயப்படவில்லை. இங்கு நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்,” என்று சிம்ஹா தயக்கமின்றி பதிலளிக்கிறார்.
போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இஸ்ரேலியர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது, “சிலர் அதிக பணம் சம்பாதிக்கவோ, பாதுகாப்பு இல்லை என்றோ சொல்லி வெளியேறினர். ஆனால், நான் அவர்களுடன் உடன்படவில்லை,” என்று கூறுகிறார்.
“ராக்கெட் தாக்குதலுக்கான சைரன் ஒலித்தால், தண்ணீர் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வோம். தொலைபேசியில் செய்திகளைப் பார்ப்போம். அலாரம் முடிந்ததும் வெளியே வருவோம்,” என்று சிம்ஹா விளக்குகிறார்.
இஸ்ரேலுக்கு தான் கடமைப்பட்டிருப்பதாகவும், தனது மகள்கள் காஸாவிலோ அல்லது வேறு இடங்களிலோ போர் முனைக்கு அழைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றும் சிம்ஹா கூறுகிறார்.
அவரது இரண்டு சகோதரர்கள் காஸாவில் பல மாதங்கள் பணியாற்றியுள்ளனர். “இது எங்கள் யூத அடையாளத்துடன் இணைவதற்கு ஒரு பகுதி,” என்று அவர் சொல்கிறார்.
அதே சமயம், மான்செஸ்டரில் தனது பழைய வாழ்க்கையை, நண்பர்களை, மகள்களை, பேரக்குழந்தைகளை, பெரிய வீட்டை நினைத்து சில நேரங்களில் வருந்துவதாகவும் சிம்ஹா ஒப்புக்கொள்கிறார்.
அதேபோல் தாங்கள் வாழ்வதற்கு இஸ்ரேலைத் தேர்ந்தெடுத்தாலும், “நான் இன்னும் மான்செஸ்டரை சேர்ந்தவளாக உணர்கிறேன், என் கணவர் மொராக்கோவனாக உணர்கிறார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்கிறார் சிம்ஹா .
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு