படக்குறிப்பு, சனிக்கிழமை ஹமாஸ் விடுவித்த பணயக்கைதிகளின் உடல்நிலை மோசமாக இருந்தது. கட்டுரை தகவல்
இஸ்ரேல் பணயக்கைதிகளின் அடுத்த குழு இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருந்த நிலையில், பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்?
“ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) தன் கடமைகளைச் செய்ய அழுத்தம் கொடுப்பதற்காக போதுமான நேரம் மத்தியஸ்தர்களுக்கு வழங்கப்படுகிறது” இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுப்பதாகக் கூறி ஹமாஸ் அமைப்பினர் தங்களின் டெலிகிராம் பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கை இது.
வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை குறிப்பிட்டுள்ள ஹமாஸ், “கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன” என குறிப்பிட்டுள்ளது.
பிரச்னையில் முட்டுக்கட்டையாக இருக்கும் சிலவற்றை சுமூகமாக தீர்க்க இந்த குழு நேரம் கொடுப்பதாகத் தோன்றுகிறது.
ஹமாஸ் அமைப்பு தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இடம் பெயர்ந்த மக்கள் வாழ்விடங்களுக்கு திரும்புவதில் இருக்கும் தாமதம், அவர்கள் மீது இன்னமும் தாக்குதல்கள் தொடர்வது மற்றும் சில மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மறுப்பது உள்ளிட்டவை இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களாக உள்ளன.
ஹமாஸ் உடன் தொடர்பில் இல்லாத சில பாலத்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும் எண்ணிக்கையிலான பாலத்தீனர்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்தநிலையில் மக்கள் வசிப்பதற்கு தேவையான கேரவன்களை காஸாவுக்கு உள்ளே அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
காஸாவிலிருந்து வெளியேற மக்களை ஊக்கப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இஸ்ரேலிய அரசு வெளிப்படையாக விவாதிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், தற்காலிக குடியேற்றத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் அனுமதிக்க மறுப்பது, பாலத்தீனர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Reuters
அச்சத்தை அதிகரிக்கும் டிரம்ப்பின் வார்த்தைகள்
டிரம்பால் ஒவ்வொரு நாளும் காஸாவில் அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.
தொடக்கத்தில், காஸாவை மறு கட்டமைப்பு செய்ய பெரும்பாலான பாலத்தீனர்கள் வெளியேற வேண்டும் என டிரம்ப் கூறினார். பின்னர் அவரது கருத்து மாற்றம் பெற்று, “அனைவரும் வெளியேற வேண்டும், அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, சொந்தமாக்கிக்கொள்ளும்” என்பதாக மாறியது.
டிரம்ப்பின் தீ மூட்டும் பேச்சுகள் தொடரும் நிலையில், இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை பயன்தரக் கூடியதா? என்ற கேள்வி ஹமாஸுக்கு ஏற்படலாம்.
டிரம்ப்பின் வார்த்தைகள் உண்மையிலேயே தீவிரத்தன்மை உடையதாக இருந்தால் காஸாவை பொதுமக்கள் அற்றதாக மாற்றித் தரும் வேலை இஸ்ரேலின் தலையில் விழும் என்பது பாலத்தீனர்களுக்கு தெரியும். அந்த சூழலில், அவர்களுக்கு வசிப்பிடம் கிடைப்பதை தடுப்பது மட்டும் போதுமானதாக இருக்காது. பலப் பிரயோகமும் கண்டிப்பாக தேவைப்படலாம்.
தற்போது டிரம்ப் கூறுவது என்னவென்றால் சனிக்கிழமைக்குள்ளாக காஸாவில் இருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் திரும்பவில்லை என்றால், போர் நிறுத்தத்தை ரத்து செய்ய தான் பரிந்துரைப்பேன் என எச்சரிக்கிறார்.
ஆனால், ”இது என்னுடைய கருத்துதான், இஸ்ரேல் தன்னுடைய முடிவை எடுக்கலாம்” எனவும் கூறுகிறார் டிரம்ப்
பட மூலாதாரம், AFP
மீண்டும் போருக்கான முகாந்திரம் இருக்கும் சூழலில், எஞ்சிய பணயக் கைதிகளையும் விடுவிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என ஹமாஸ் நினைக்கலாம்.
“ஒவ்வொரு அறிக்கையும், பேச்சுக்களும் ஹமாஸின் பிடிவாதத்தை அதிகரிக்கும்” என பிபிசியிடம் கூறுகிறார் இஸ்ரேலைச் சேர்ந்த சல்மானோவிக் . இவருடைய மனைவியின் உறவினரான ஓமர் ஷெம் டோவ் , இன்னமும் ஹமாஸின் பிடியில் உள்ளார்.
“அவர் (டிரம்ப்) தனது அதீத செயல்பாட்டை கொஞ்சம் குறைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என கூறுகிறார் சல்மானோவிக் .
ஹமாஸின் தாமதம் குறித்து இஸ்ரேல் தனக்கேயான சந்தேகங்களைக் கொண்டுள்ளது.
கடந்த வார இறுதியில் உடல் மெலிந்த நிலையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், மற்ற பணயக்கைதிகளின் இன்னும் மோசான உடல்நிலையை உலக மக்கள் பார்ப்பதை ஹமாஸ் விரும்பாமல் இருக்கலாம்.
பட்டப்பகலில் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் குழுவினரின் அணிவகுப்பு காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் போரில் இழந்தவர்களை விடவும் , அதிக எண்ணிக்கையில் நபர்கள் ஹமாஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் எச்சரிக்கை ஆகியவற்றால் போர் நிறுத்தம் தொடரலாம் அல்லது தொடரும் என்பதை அனைத்து இஸ்ரேலியர்களும் நம்பவில்லை.
மிகக்கவனமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்யப்பட இந்த ஏற்பாடு உடையப்போகிறது என கூறுவதற்கு இது சரியான நேரமாக இருக்காது. ஆனால் பெரும்பாலானோர் யூகித்ததைப் போன்று ஆரம்பம் நன்றாக இருந்தாலும், தற்போது அழுத்தம் அதிகரிக்கிறது என்பது தான் உண்மை.