பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோதியுடனான இஸ்ரேலின் உறவு மிகவும் வலுவானது என்று கூறியுள்ளது.
“நரேந்திர மோதி தலைமையின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து இஸ்ரேல் பிரதமருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பிரதமரின் இந்திய பயணத்திற்கான புதிய தேதிகளைப் பற்றி அவரது குழு ஏற்கெனவே ஆலோசனை நடத்தி வருகிறது” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
அதாவது, நெதன்யாகு தனது இந்திய பயணத்தை ஒத்தி வைத்துவிட்டார் என்பதையும், புதிய தேதி இன்னும் முடிவாகவில்லை என்பதையும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வரவிருக்கும் நிலையில், நெதன்யாகு தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
வியாழக்கிழமை அன்று, ஹீப்ரு மொழி செய்தி இணையதளமான ஐ24 நியூஸ் நெதன்யாகு பாதுகாப்புக் காரணங்களுக்காக தனது இந்திய பயணத்தை ரத்து செய்ததாக செய்தி வெளியிட்டது.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு நெதன்யாகுவின் புதுடெல்லி பயணம் குறித்த எங்கள் செய்திக்குப் பிறகு, இந்தப் பயணம் இப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை தூதரக வட்டாரங்கள் ஐ24 நியூஸிடம் உறுதி செய்துள்ளன,” என்று ஐ24 நியூஸின் ராஜாங்க விவகாரங்களுக்கான செய்தியாளர் கை அஸ்ரியேல் எழுதினார்.
அவர் மேலும், “இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதல், கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இருந்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
நெதன்யாகு கடைசியாக 2018-இல் இந்தியா சென்றார். தற்போது பிரதமர் மோதியை சந்திப்பதற்காக மீண்டும் செல்லவிருந்தார். இப்போது பாதுகாப்பு பற்றிய மதிப்பீட்டின் அடிப்படையில், அடுத்த ஆண்டு புதிய தேதி நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
‘பாதுகாப்பு கவலையைக் காரணம் காட்டுவது இந்தியாவுக்கு அவமானம்’
ஐ24 நியூஸின் இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் பிரதமர் பாதுகாப்புக் கவலைகள் காரணமாக இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் என்று செவ்வாயன்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கின. இதனால், மாலையில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் விளக்கமளிக்க வேண்டியிருந்தது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள கை அஸ்ரியேல், “பாதுகாப்புக் காரணங்களுக்காக டிசம்பரில் பிரதமர் நெதன்யாகு மேற்கொள்ளவிருந்த இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டது குறித்த எங்கள் பிரத்யேக செய்தியைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அசாதாரண அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வலிமை மற்றும் பயணத்திற்கான புதிய தேதி குறித்துப் பேசப்பட்டுள்ளது,” என எழுதியுள்ளார்.
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நவம்பர் 20 அன்று இஸ்ரேலுக்கு சென்று, இஸ்ரேல் பிரதமரையும் சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, நவம்பர் 23 அன்று இஸ்ரேல் பிரதமர் எக்ஸ் பக்கத்தில், “இன்று நான் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன். இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் மூலோபாய உறவை வலுப்படுத்துகின்றன” என்று எழுதினார்.
நெதன்யாகு உண்மையிலேயே பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்திய பயணத்தை ஒத்தி வைத்தாரா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த செளதி அரேபியாவில் இந்தியாவின் தூதராக இருந்த தல்மிஸ் அகமது, பயணத்தை ஒத்தி வைக்க பாதுகாப்பை காரணம் காட்டுவது இந்தியாவுக்கு அவமானகரமானது என்று கூறுகிறார்.
இதுகுறித்துப் பேசிய தல்மிஸ் அகமது, “இஸ்ரேல் பிரதமர் இந்தியாவில் பாதுகாப்பு குறித்து தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக விளக்கம் அளித்தாலும், நெதன்யாகு அரசுத் தகவல் சொல்லாமல் அங்குள்ள ஊடகங்களில் இவ்வளவு பெரிய செய்தி வெளியாகி இருக்காது. நெதன்யாகு உள்நாட்டில் பல முனைகளில் அழுத்தத்தில் இருக்கிறார் என்பதையும், இந்த நேரத்தில் இந்திய பயணம் அவருக்குச் சிரமமானது என்பதையும் நான் அறிவேன்.”
“அவர் உண்மையான காரணத்தைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், பயணம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணமாக பாதுகாப்புக் கவலைகளைக் கூறுவது இந்தியாவுக்கு அவமானகரமானது. அதிலும் அடுத்த மாதம் புதின் இந்தியா வரவுள்ள நிலையில் இது நடந்துள்ளது.”
“இந்தியா, இஸ்ரேல் இடையில் அடையாளபூர்வமாக நிறைய இருக்கிறது. இருப்பினும், நெதன்யாகு பயணத்தை ஒத்தி வைத்தது இந்தியாவுக்கு நல்ல செய்தியைத் தரவில்லை. அமெரிக்கா தவிர வேறு யாரும் அவருக்கு ஆதரவாக இல்லாதபோது இந்தியா அவருக்குத் துணை நின்றது.”
பட மூலாதாரம், Getty Images
உண்மையான காரணம் என்ன?
நெதன்யாகுவின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பாதுகாப்புக் கவலைகளைக் காரணம் காட்டுவது பொருத்தமானது அல்ல என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் முன்னாள் பேராசிரியர் ஏ.கே.பாஷா நம்புகிறார்.
“நெதன்யாகு இந்தியாவிடம் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளார். ஆனால் இந்தியாவால் ஓர் எல்லைக்கு மேல் செல்ல முடியாது. இந்தியா சில நேரங்களில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாகவும், சில நேரங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் இருப்பதாக நெதன்யாகு நினைக்கிறார். டிரம்ப் வந்த பிறகு இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இது இந்தியா-இஸ்ரேல் உறவுகளுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல,” என ஏ.கே. பாஷா கூறுகிறார்.
“இதனால், நெதன்யாகு இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்பினார். ஆனால் இந்தியா அதை ஏற்கவில்லை. யார் மத்தியஸ்தம் செய்தாலும், டிரம்ப் தனது நலன்களைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டார் என்பதை இந்தியா அறிந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டால், இஸ்ரேலின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. ஏனெனில் இஸ்ரேல் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை தனக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது,” என பேராசிரியர் பாஷா தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு மோசமாக இருந்தால், இஸ்ரேலுடனான உறவும் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று ஏ.கே.பாஷா கூறுகிறார். டிரம்ப் இந்தியா மீதான வரியை இரட்டிப்பாக்கி 50% ஆக்குவதாக அறிவித்தபோது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோதியும் அதிபர் டிரம்பும் தனது சிறந்த நண்பர்கள் என்று கூறியிருந்தார்.
டிரம்பை கையாள்வதற்கு பிரதமர் மோதிக்கு சில ஆலோசனைகளை வழங்குவதாகவும் ஆனால் பகிரங்கமாக அல்ல எனவும் நெதன்யாகு கூறியிருந்தார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய செய்தியாளர்கள் குழுவிடம் பேசிய நெதன்யாகு, “இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகளில் ஓர் அடிப்படைப் புரிதல் உள்ளது. இரு நாடுகளின் உறவின் அடித்தளம் மிகவும் வலுவானது” என்று கூறியிருந்தார்.
“இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டி, வரிப் பிரச்னையைத் தீர்ப்பது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கும். இரு நாடுகளும் நமது நல்ல நண்பர்கள் என்பதால் இது நமக்கும் சாதகமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல், இந்தியாவின் கூட்டுறவு எவ்வளவு முக்கியமானது?
ஆகஸ்ட் 29 அன்று, அமெரிக்கன் ஜூயிஷ் கமிட்டி எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது: “இந்தியாவின் மீதான அமெரிக்க அதிகாரிகளின் தாக்குதல் கவலையளிக்கிறது. வெள்ளை மாளிகை ஆலோசகர் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் கொடூர தாக்குதலை ‘மோதி போர்’ என்று கூறியுள்ளார்.”
“ஆற்றலுக்காக ரஷ்யாவை இந்தியா சார்ந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் புதினின் போர்க் குற்றங்களுக்கு இந்தியா பொறுப்பல்ல.”
“இந்தியா ஒரு ஜனநாயக நாடு மற்றும் அமெரிக்காவின் உத்தி ரீதியான நட்புநாடு என்ற வகையில் இதுவொரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையிலான பரஸ்பர போட்டியில் இந்தியா மிகவும் முக்கியமானது. இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய நேரம் இது.”
இஸ்ரேலின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணருமான செனியா ஸ்வெட்லோவா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மோதி-டிரம்ப் சந்திப்புக்கு முன், ‘மோதி-டிரம்ப் சந்திப்பு இஸ்ரேலுக்கு ஏன் முக்கியம்’ என்ற தலைப்பில் ஜெருசலேம் போஸ்ட்டில் ஒரு கட்டுரையை எழுதினார்.
அதில், “இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்ல உறவு மிகவும் அவசியம்” என செனியா ஸ்வெட்லோவா எழுதினார்.

கடந்த 2014இல் நரேந்திர மோதி பிரதமரான பிறகு இஸ்ரேலுடனான உறவுகளில் நெருக்கம் அதிகரித்துள்ளது. நரேந்திர மோதி இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் ஆவார். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் நடுநிலையாக இருக்க முயன்றபோது, இஸ்ரேல் வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது.
கடந்த 2003இல் அடல் பிஹாரி வாஜ்பேயி அரசாங்கத்தின்போது ஒரு இஸ்ரேல் பிரதமரின் முதல் இந்திய பயணம் நடந்தது. அப்போது ஏரியல் ஷரோன் இந்தியா வந்தார். சமீபத்திய காலகட்டத்தில், நரேந்திர மோதி வடிவில் முதல் இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார்.
கடந்த 2008இல் இந்திய பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் இஸ்ரேலுக்கு சென்றார். இந்தப் பயணம் குறித்து இஸ்ரேலின் தாராளவாத நாளிதழான ஹாரெட்ஸ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மதிப்பீடு செய்தது.
இந்த நாளிதழ் தனது பகுப்பாய்வில், “இந்தியா, இஸ்ரேல் இடையிலான உறவுகள் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும்போது அல்லது இந்திய அரசியலில் வலதுசாரி எழுச்சி ஏற்படும்போது அல்லது அங்குள்ள தலைமையிடம் முஸ்லிம் விரோத உணர்வு அதிகரிக்கும்போது வலுவடைகின்றன” என்று எழுதியது.
மேலும், “கடந்த 1999இல் கார்கில் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியபோது, இந்தியா இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தியது. ஊடக செய்திகளின்படி, அப்போது இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் அமோஸ் யாரோன், அவசரமாக ஆயுதங்களுடன் இந்தியாவுக்கு வந்தார்” என இதே பகுப்பாய்வில் இஸ்ரேல் நாளிதழ் தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு