பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ருஷ்தி அபுவலஃப்
- பதவி, காஸா செய்தியாளர்
- எழுதியவர், காத்தரின் ஆம்ஸ்ட்ராங்
- பதவி,
-
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகளை எகிப்திய நகரமான ஷர்ம் எல்-ஷேக்கில் செவ்வாய்க்கிழமையும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தீன மற்றும் எகிப்திய அதிகாரிகள் பிபிசியிடம் கூறுகையில், பல பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கும் சாத்தியம் குறித்த “கள நிலைமைகளை உருவாக்குவதில்” இந்த பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தனர்.
“வரும் நாட்களில்” பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சனிக்கிழமை கூறினார்.
“ஒரு ஒப்பந்தம் செய்வதற்கு எங்களுக்கு உண்மையிலேயே நல்ல வாய்ப்பு உள்ளது, அது ஒரு நீடித்த ஒப்பந்தமாக இருக்கும்.” என்று வெள்ளை மாளிகையில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஹமாஸ் அமைதித் திட்ட முன்மொழிவுகளுக்கு ஓரளவுக்கு உடன்படுவதாகக் கூறியுள்ளது. ஆனால் ஆயுதக் குறைப்பு மற்றும் எதிர்காலத்தில் காஸா நிர்வாகத்தில் பங்கு கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளுக்கு அது பதிலளிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது நாளாக நடக்கும் மறைமுக பேச்சுவார்த்தைகளின் போது, எகிப்திய மற்றும் கத்தார் அதிகாரிகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்துவார்கள். இந்த பேச்சுவார்த்தைகள், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதலைத் தொடங்கியது. அப்போதிருந்து, காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளில் 67,160 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் தனது அறிக்கையில், டிரம்பின் திட்டம் “இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என்று கூறினார்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், ஹமாஸ் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் தனது அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்: “மத்திய கிழக்கில் அமைதியை நோக்கிய அமெரிக்காவின் முன்முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம், இஸ்ரேலின் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பாலத்தீன அண்டை நாடுகளுடன் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய நாளைக் கொண்டுவர இந்த அரசாங்கம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் பணயக்கைதிகளை விடுவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும், அந்தக் கட்டத்தை முடிக்க ஹமாஸுக்கு சில நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பணயகைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
போர் தொடங்கியதில் இருந்து சில சாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதை எட்டக்கூடியதா என்பதையும் இவை தீர்மானிக்கும்.
அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகங்களில் பதிவிடும் போது, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் “வேகமாக” செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பணயக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட அமைதித் திட்டத்தின் முதல் கட்டம் “இந்த வாரம் முடிக்கப்படும்” என்று தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஹமாஸ் மிகவும் முக்கியமான விஷயங்களில் உடன்பட்டு வருகிறது” என்றார்.
“நாம் ஒரு ஒப்பந்தத்தை எட்டப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேச்சுவார்த்தைகளுக்கு நெருக்கமான ஒரு பாலத்தீன அதிகாரி, முதல் அமர்வு திங்கள்கிழமை மாலை முடிவடைந்ததாகவும், மேலும் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருப்பதாகவும் கூறினார்.
செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் – முதல் நாள் பேச்சுவார்த்தைகள் “நேர்மறையான சூழ்நிலையின் மத்தியில்” முடிவடைந்ததாகவும் அரசு சார் அல்-கஹெரா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் 20 அம்ச திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். மோதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதுடன், இஸ்ரேலிடம் உள்ள நூற்றுக்கணக்கான காஸா கைதிகளுக்கு ஈடாக , ஹமாஸ் பிடியில் உள்ள 48 பணயக்கைதிகளை (அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது) விடுவிக்கவும் அது முன்மொழிகிறது.
இந்த திட்டத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டவுடன், “காஸா பகுதிக்கு முழு உதவி உடனடியாக அனுப்பப்படும்” என்று 20 அம்ச திட்டம் கூறுகிறது.
காஸாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும், அது பாலத்தீனம் தனி நாடாக உருவாவதற்கான கதவைத் திறந்து வைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், ஒரு வாரத்திற்கு முன்பு இந்த திட்டம் பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட பின்னர், நெதன்யாகு பாலத்தீன நாடு உருவாவதற்கான தனது நீண்டகால எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், “இது ஒப்பந்தத்தில் எழுதப்படவில்லை. பாலத்தீன நாடு உருவாவதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று கூறினோம்” என்று கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
காஸா அமைதித் திட்டத்துக்கு ஹமாஸின் பதில்
இந்த 20 அம்ச திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஹமாஸ் பதிலளித்தது. ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், பரிமாற்றங்களுக்கான சரியான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், “அதிபர் டிரம்பின் முன்மொழிவில் உள்ள பரிமாற்ற திட்டத்தின்படி, உயிருள்ள மற்றும் இறந்த அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிக்க” ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.
டிரம்பின் 20 அம்சத் திட்டத்தைப் பற்றி ஹமாஸ் தனது அறிக்கையில் குறிப்பிடவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை. ஆனால் “பாலத்தீன தேசிய ஒருமித்த கருத்து மற்றும் அரபு, இஸ்லாமிய ஆதரவின் அடிப்படையில், காஸா பகுதியின் நிர்வாகத்தை பாலத்தீன சுயாதீன அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கான அதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்கிறது” என்று கூறியது.
இந்த அறிக்கையில் 20 அம்ச திட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான ஹமாஸின் ஆயுதக் குறைப்பு, காஸாவின் நிர்வாகத்தில் அதன் பங்கு குறித்து ஹமாஸ் எதுவும் குறிப்பிடவில்லை.
காஸாவின் எதிர்காலம் மற்றும் பாலத்தீன மக்களின் உரிமைகளைக் கையாளும் திட்டங்களின் ஒரு பகுதி இன்னும் “ஒரு தேசிய கட்டமைப்பிற்குள்” விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அதில் ஹமாஸ் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அது கூறியது.
பல பாலத்தீனர்கள் சமாதான திட்டத்திற்கு ஹமாஸின் பதில் எதிர்பாராதது என்று கூறுகின்றனர். டிரம்பின் அமைதித் திட்ட முன்மொழிவை நிராகரிக்க அல்லது குறைந்தபட்சம் கடுமையாக நிபந்தனைகளை விதிக்க ஹமாஸ் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறிகள் பல நாட்களாக தென்பட்டதாக கூறுகின்றனர்.
அதற்கு பதிலாக, ஹமாஸ் அதன் பாரம்பரிய “எச்சரிக்கைகளை” தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடுவதை தவிர்த்துள்ளது. இது வெளிப்புற அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்.
ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் இந்த அமைதி திட்டத்தை வரவேற்றுள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பாலத்தீன அதிகார சபை (பிஏ) அமெரிக்க அதிபரின் முயற்சிகள் “நேர்மையானவை மற்றும் உறுதியானவை” என்று குறிப்பிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக ஹமாஸின் முக்கிய ஆதரவாளர்களில் ஒன்றாக இருந்த இரானும் இப்போது டிரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவிப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக திங்களன்றும் காஸாவில் பல பகுதிகளில் இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடர்ந்தது.
காஸா நகரத்தில் இஸ்ரேல் ஒரு தாக்குதலை நடத்தி வருகிறது. இது “மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று இஸ்ரேல் கூறுகிறது.
காஸாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் டிஃபென்ஸின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் பிபிசியிடம் கூறுகையில், “நான்கு வாரங்களுக்கு முன்பு தாக்குதல் தொடங்கியதிலிருந்து காஸா நகரத்திற்குள் எந்த உதவிகளும் அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்.
“இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எங்களால் மீட்க முடியாத சடலங்கள் இன்னும் உள்ளன,” என்று அவர் கூறினார்.
தெற்கில் “மனிதாபிமான பகுதி” என்று அறிவிக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டதை அடுத்து பல ஆயிரக்கணக்கான காஸா நகர மக்கள் அங்கே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் காஸாவில் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது.
தாக்குதலின் போது காஸாவில் தங்கியிருப்பவர்கள் “பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள்” என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், காஸாவில் 21 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 96 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து சர்வதேச பத்திரிகையாளர்கள் காஸா பகுதிக்குள் சுயாதீனமாக நுழைவதற்கு இஸ்ரேலால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இரு தரப்பிலிருந்தும் வரும் கூற்றுகளை சரிபார்ப்பதை கடினமாக்கியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு