• Wed. Apr 9th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலத்தீன அவசரகால ஊழியர்கள் – என்ன நடந்தது?

Byadmin

Apr 7, 2025


காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலத்தீன அவசரகால ஊழியர்கள்

கொன்று புதைக்கப்பட்ட அவசரகால ஊழியர்கள் – தவறிழைத்ததாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

தெற்கு காஸாவில் மார்ச் 23 அன்று 15 அவசர கால ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த விஷயத்தில் தங்களது ராணுவ வீரர்கள் தவறு செய்ததாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

ரஃபாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, பாலத்தீன செம்பிறை சங்கத்துக்குச் சொந்தமான ஒரு வாகனம், ஐநாவின் கார் மற்றும் காஸாவின் சிவில் பாதுகாப்புக்குச் சொந்தமான ஒரு தீயணைப்பு வண்டி தாக்குதலுக்கு உள்ளானது.

ஹெட்லைட் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் இருட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனங்கள் நெருங்கி வந்ததால் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது.

ஆனால், கொல்லப்பட்ட ஒரு அவசர கால ஊழியரால் படம்பிடிக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில் வாகனங்கள் ஒளிரும் விளக்குகளை எரியவிட்டிருப்பதை காண முடிகிறது.

இதில் குறைந்தது 6 பேர் ஹமாஸுடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த ஆதாரத்தையும் இஸ்ரேல் வழங்கவில்லை. அதே நேரம், துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததாக இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது.

சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஐடிஎஃப் அதிகாரி, ராணுவம் முன்னதாக மூன்று ஹமாஸ் உறுப்பினர்கள் இருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார்.

ஆம்புலன்ஸ்கள் அந்தப் பகுதியை நெருங்கியபோது, ​​வான்வழி கண்காணிப்பாளர்கள், வாகனம் சந்தேகத்திற்கிடமான முறையில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்ததாகவும், ஹமாஸ் காரின் அருகே ஆம்புலன்ஸ்கள் நின்றபோது வீரர்கள் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறினார்.

உடல்களை புதைத்தது ஏன்?

முகப்பு விளக்குகள் இல்லாமல் வாகனங்கள் வந்ததாக முன்பு கூறிய கூற்று தவறானது என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவே 15 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. மேலும், சாலையில் இருந்தவற்றை அப்புறப்படுத்தவே வாகனங்கள் மறுநாள் அகற்றப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

சம்பவம் நடந்து ஒரு வாரம் வரை அவர்கள் உடல்களை கண்டுபிடிக்கப்படவில்லை, ஏனெனில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச குழுக்களால் அந்தப் பகுதிக்கு பாதுகாப்பான பாதையை ஏற்பாடு செய்யவோ அல்லது அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவோ முடியவில்லை.

ஒரு உதவிக் குழு உடல்களைக் கண்டுபிடித்தபோது, ​​தற்போது வெளியான வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்த மொபைல் போனும் கிடைத்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாலத்தீன செம்பிறை சங்கத்தின் தலைவர் யூனிஸ் அல்-கதிப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தால் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்ட முதல் பாலத்தீன செம்பிறை சங்க நபர்கள் இவர்கள் அல்ல எனவும் யூனிஸ் அல் கதிப் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளது.

முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து மார்ச் 18ஆம் தேதி காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் இடையே இழுபறியில் உள்ளது. மார்ச் 18 முதல் நடந்த தாக்குதலில் மட்டும் இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டனர்.

அதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் படையெடுத்தது. இதுவரை அங்கு நடந்த தாக்குதலில் 50,600-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin