பட மூலாதாரம், AFP via Getty Images
கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் நடந்த கொடிய தாக்குதல், “இஸ்லாமிக் ஸ்டேட் சித்தாந்தத்தால்” தூண்டப்பட்டதாகத் தோன்றுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியதைத் தொடர்ந்து இஸ்லாமிக் ஸ்டேட் குழுவின் மீது உலகளாவிய கவனம் குவிந்துள்ளது.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வாகனத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களுடன் “வீட்டில் தயாரிக்கப்பட்ட” ஐஎஸ் கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஐஎஸ் அமைப்பு வியாழக்கிழமை தனது வாராந்திர செய்தித்தாளான அல்-நபாவில் இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்தது. அதில் பயன்படுத்தப்பட்ட மொழியானது, வன்முறையை நேரடியாக ஒருங்கிணைத்ததை விட, அதன் ஆன்லைன் செய்திகள் மூலம் வன்முறையைத் தூண்டியதற்கான பெருமையை அது தேடிக்கொண்டது போல் தோன்றியது.
தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தந்தையை போலீசார் சுட்டுக் கொன்றனர், மகன் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
சிட்னியில் நடந்த தாக்குதல், மேற்கத்திய இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களை ஒருங்கிணைக்க அல்லது தூண்டுவதற்கு ஐஎஸ் இன்னும் முயற்சிகளை கைவிடவில்லை என்பதை நினைவூட்டுகிறது. 2017-ஆம் ஆண்டு சிரியா மற்றும் இராக்கில் அதன் “கலிஃபேட்” தளங்களை இழந்ததிலிருந்து அதன் செல்வாக்கு கடுமையாகக் குறைந்த போதிலும் இது தொடர்கிறது.
போன்டை கடற்கரை துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு நாள் முன்னதாக சிரியாவில் இரண்டு அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்து அதன் ஆதரவாளர்கள் ஆன்லைனில் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட போதிலும் ஐஎஸ் அமைதி காக்கிறது. சிரியாவில் ஐஎஸ் நபர் ஒருவரே இந்தக் கொலைகளைச் செய்ததாக அமெரிக்கா கூறுகிறது.
“உண்மையில் ஒருபோதும் மறைந்து போகாத ஒன்றின் மறுபிரவேசம் பற்றி நாம் பேச முடியாது,” என்கிறார் பிபிசி மானிட்டரிங்கின் ஜிஹாதியிச நிபுணர் மினா அல்-லாமி.
தாக்குதல்களை முன்கூட்டியே இஸ்லாமிக் ஸ்டேட் நடவடிக்கைகள் என்று முத்திரை குத்துவது குழுவின் உண்மையான திறன்களைப் பிரதிபலிப்பதை விட அதன் பிரசாரத்தைப் பெருக்குவதற்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.
இஸ்லாமிக் ஸ்டேட் இன்னும் செயல்படுகிறதா?
பட மூலாதாரம், AFP via Getty Images
ஐஎஸ் அதன் உச்சக்கட்டத்தில், சிரியா மற்றும் இராக்கின் பரந்த பகுதிகளை ஆட்சி செய்தது, வரிவிதிப்பு, கல்வி, மதக் காவல் மற்றும் சுகாதார அமைப்புகள் மூலம் தன்னை ஒரு செயல்படும் அரசாக காட்டிக் கொண்டது.
ஆனால் 2019-இல் 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியால் அது பிராந்திய ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டது, இது அதன் பெளதீக கலிபா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
2019-ஆம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதலின் போது தன்னைத்தானே கொன்று கொண்ட அதன் நிறுவனத் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் இழப்பால் அந்தக் குழுவின் ஈர்ப்பு மேலும் பலவீனமடைந்துள்ளது என்று அல்-லாமி கூறுகிறார். அதன்பிறகு, அதன் தலைவர்கள் எவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமோ அல்லது பொதுத் தோற்றமோ இல்லை.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின்படி, இன்று சிரியா மற்றும் இராக்கில் மொத்தம் 3,000 ஐஎஸ் போராளிகள் வரை உள்ளனர். இதற்கு நேர்மாறாக, 2014-இல் ஒரு கலிபாவை நிறுவுவதாக அறிவித்த பிறகு, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் போராளிகள் அந்தக் குழுவில் சேரத் திரண்ட ஒரு காலம் இருந்தது.
ஐஎஸ் அமைப்பின் வலிமை குறைந்துவருவதன் மற்றொரு அறிகுறி அதன் தாக்குதல்களின் அளவு என்று அல்-லாமி கூறுகிறார். 2010-களின் நடுப்பகுதியில் சிரியா, இராக் மற்றும் மேற்கத்திய நாடுகளில் பல பெரிய தாக்குதல்களுக்கு இக்குழு பொறுப்பேற்றது.
“இது இப்போது பெரும்பாலும் சிறிய, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்கும் முறையையே நம்பியுள்ளது,” என்று அவர் கூறுகிறார். மேலும் மேற்கத்திய நாடுகளில் நடக்கும் அரிய தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் அமைப்பின் மத்திய தலைமையால் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை விட ஐஎஸ்-ஆல் “உந்தப்பட்டவை” ஆகும்.
கடந்த ஆண்டு, ஜனவரியில் இரானில் நடந்த தாக்குதல்களில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டதற்கும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரஷ்யாவில் நடந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டதற்கும் தொடர்புபடுத்தப்பட்ட பிறகு ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளையான கோரசன் மாகாணம் என அழைக்கப்படும் அமைப்பு உலகளாவிய செய்திகளில் இடம்பிடித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலும் முறியடிக்கப்பட்ட தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் அதன் மீது சந்தேகம் எழுப்பப்பட்டது.
இருப்பினும், இந்த ஆண்டு ஐஎஸ்கேபி கணிசமாக பலவீனமடைந்து ஆப்கானிஸ்தானில் கூட தாக்குதல்களை நடத்த திணறி வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஐஎஸ் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களில் பெரும்பகுதி இப்போது சஹாரா கீழமை ஆப்ரிக்காவில் நடக்கின்றன. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace) வெளியிட்ட 2025 உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டு அறிக்கையின்படி, ஐஎஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் “2024-ல் 22 நாடுகளில் 1,805 இறப்புகளுக்குப் பொறுப்பான மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பாகத் தொடர்ந்தன.”
ஐஎஸ் அதன் பிரசார வலிமையை பெருமளவு இழந்துவிட்டது என்று அல்-லாமி மேலும் கூறுகிறார். “அவர்களிடம் நேர்த்தியான, விரிவான பிரசார காணொளிகள் இருந்தன, இப்போது அவர்கள் வீடியோக்களை வெளியிட உண்மையில் போராடுகிறார்கள்.”
ஆனால் ஐஎஸ் அதன் ஆன்லைன் ஊடகங்கள் மூலம் இன்னும் தாக்குதல்களைத் தூண்டி வருகிறது.
அல்-லாமி கூறுகையில், ஐஎஸ் தனித்துவமானது என்னவென்றால், அதற்கு “இணைய ஆதரவாளர்களின் ராணுவம் உள்ளது, அவர்கள் இளைஞர்கள், சமூக ஊடகங்களில் திறமையானவர்கள், மேலும் பிரச்சாரத்தில் அந்தக் குழு விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்ப உண்மையில் உதவியுள்ளனர்.”
அவர்கள் இளைஞர்களைச் சென்றடையும் முயற்சியில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தீவிரமாக உள்ளனர். பிபிசி மானிட்டரிங் ஆய்வாளர்கள் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு சுடுவது மற்றும் ஒருவரை எவ்வாறு கொடூரமாகக் குத்திக் கொல்வது என்பது குறித்த “படிப்படியான வழிமுறைகளைக்” கொண்ட கையேடுகளை அடிக்கடி பார்க்கிறார்கள்.
இவற்றில் சில இடுகைகள் அனுபவம் வாய்ந்த “ஊடக ஜிஹாதிகளால்” செய்யப்பட்டவை என்று அல்-லாமி சந்தேகித்தாலும், சில “ஐஎஸ் பிரசாரத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்டு, குழுவின் செய்தியைப் பரப்புவதற்கு உதவும் சாதாரண இளைஞர்கள்” என்று அவர் மதிப்பிடுகிறார்.
போன்டை கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ், அதன் கருத்துக்களில், “ஜிஹாத்” இப்போது “மிகவும் கடினமான மற்றும் சிக்கலான ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது” என்றும், அது ஆன்லைன் தளத்தில் அதிக அளவில் கையாளப்படுகிறது என்றும் ஐஎஸ் கூறியது.
“டிஜிட்டல் உலகம் மூலம் உத்தரவுகளைப் பெறும் உத்தி… பல ஆதாரங்கள் தேவையில்லாத மற்றும் பல தடைகளைத் தாண்டக்கூடிய ஒரு பயனுள்ள உத்தி,” என்று அது கூறியது.
ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் ஐஎஸ் வளர்கிறதா?
பட மூலாதாரம், AFP via Getty Images
மத்திய கிழக்கில் உள்ள அதன் பாரம்பரிய தளங்களில் ஆதரவை இழந்ததனால், ஐஎஸ் மாற்றுகளைத் தேடியது.
தெற்காசியாவில், ஐஎஸ்-கோரசன் மாகாணம் அல்லது ஐஎஸ்கேபி, மிகவும் ஆக்ரோஷமான கிளைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட இதில் 2,000 போராளிகள் இருப்பதாகவும், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற பிற மத்திய ஆசிய நாடுகளில் இருந்து ஆட்களைத் தொடர்ந்து சேர்ப்பதாகவும் ஐநா மதிப்பிடுகிறது.
இதற்கிடையில், தென்கிழக்கு ஆசியாவை உள்ளடக்கியதும், பெரும்பாலும் தெற்கு பிலிப்பின்ஸில் குவிந்துள்ளதுமான ஐஎஸ்-ன் கிழக்கு ஆசிய மாகாணம் (ஐஎஸ்ஈஏபி) பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் முன்பு பல கொடிய தாக்குதல்களுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறது.
இருப்பினும், இந்தக் கிளை இந்த ஆண்டு எந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்கவில்லை.
ஐஎஸ் அமைப்பின் முக்கியக் கவனம் ஆப்ரிக்காதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நெதர்லாந்தைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (International Centre for Counter-Terrorism) பாதுகாப்பு நிபுணர் ஏட்ரியன் ஷ்துனி, கடந்த சில ஆண்டுகளில் அந்த கண்டத்தில் “ஐஎஸ் அதிவேகமாக வளர்ந்துள்ளது.” என்று எச்சரிக்கிறார்.
“வடக்கு ஆப்ரிக்காவின் சாஹேல் பிராந்தியம் மற்றும் மேற்கு ஆப்ரிக்கா போன்ற பலவீனமான நிர்வாகத்தைக் கொண்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு இடைவெளிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், மேற்கத்திய ராணுவத்தின் கட்டாய மற்றும் தன்னார்வ வெளியேற்றங்கள், பிராந்திய ஸ்திரமின்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கான குறைக்கப்பட்ட நிதி ஆகியவற்றிற்கு மத்தியில் அவர்கள் இதைச் செய்துள்ளனர்.”
ஐநா-வின் கூற்றுப்படி, இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்ரிக்கா மாகாணம் (ஐஎஸ்டபிள்யுஏபி) 8,000 முதல் 12,000 போராளிகளைக் கொண்டிருக்கலாம். இந்த ஆண்டு இக்குழு நடத்திய பத்து தாக்குதல்களில் ஒன்பது சஹாரா கீழமை ஆப்ரிக்காவில் நடந்துள்ளன என்று அல்-லாமி கூறுகிறார்.
சாஹேல் மற்றும் சோமாலியாவில் ஐஎஸ் தீவிரமாக உள்ளது என்று அவர் கூறுகிறார், அங்கு வலுவான அல்-கொய்தா கிளைகளின் வடிவத்தில் கடுமையான ஜிஹாதி போட்டி நிலவுகிறது. இருப்பினும், நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு (டிஆர்சி) மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் இது மிகவும் வலிமையாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.
இந்த நாடுகளில், போராளிகள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமூகங்களையும் ராணுவப் படைகளையும் இலக்காகக் கொள்கிறார்கள். டிஆர்சியில், ஐஎஸ் கூட்டாளிகள் தாங்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தும் பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் செலுத்த வேண்டிய வரியை விதிக்க முயன்றதாக அவர் கூறுகிறார்.
“டிஆர்சியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மூன்று தெரிவுகள் இருப்பதாக ஐஎஸ் கூறுகிறது: இஸ்லாமிற்கு மாறுவது, ஐஎஸ்-க்கு ஜிஸ்யா (Jizya) எனப்படும் அந்த வரியைச் செலுத்துவது அல்லது கொல்லப்படுவது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் (போராளிகள்) அவர்களுக்கு அந்த தெரிவை வழங்குவதில்லை. அவர்கள் அவர்களின் கிராமங்களை தாக்கி அவர்களைக் கொன்றுவிடுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
உலகளாவிய ஊடகக் கவனம் இல்லாததால், ஆப்ரிக்காவில் ஐஎஸ் பெரும்பாலும் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அல்-லாமி கூறுகிறார் – இது குறித்து அந்தக் குழுவே குறைபட்டுக் கொண்டதுண்டு.
“கடந்த ஆண்டு ஐஎஸ் விரக்தியடைந்தது. ‘நாங்கள் ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்கள் அனைவரையும் கொன்று வருகிறோம், மேற்கத்திய ஊடகங்கள் இனவெறி கொண்டவை. அவர்களுக்கு அக்கறை இல்லை, என அது ஒரு அதிகாரப்பூர்வ செய்தி மூலம் கூறியது,'” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் ஆப்ரிக்காவில் ஐஎஸ் தீவிரமாகச் செயல்பட்டாலும், சிரியா மற்றும் இராக்கில் ஒரு காலத்தில் இருந்த வலிமைக்கு “நெருக்கமாகக் கூட” அது இல்லை என்று அல்-லாமி கூறுகிறார்.
“மத்திய கிழக்கில் ஒரு காலத்தில் இருந்தது போல ஐஎஸ் ஆப்ரிக்காவில் எங்கும் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, அது மறைவிடங்களையும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்கும் முறையையும் நம்பியுள்ளது.”
அடுத்து என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
சாட்தம் ஹவுஸின் மூத்த ஆய்வாளர் ரெனாட் மன்சூர், ஐஎஸ் கடந்த காலத்தை விட மிகவும் பலவீனமாக இருப்பதாக நம்புகிறார்.
“ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கீழ் வாழ்ந்த மக்களில் பலர் அவதிப்பட்டனர்,” என்று அவர் கூறுகிறார், அரசுகள் மீதான அதிருப்தி இருக்கும் இடங்களில் கூட, “ஐஎஸ்ஐஎஸ் முன்பு கொண்டிருந்த அதே உந்துதல் அல்லது ஈர்ப்பு இப்போது இல்லை” என்று பிபிசியிடம் கூறுகிறார்.
“அந்த வேர்கள் இப்போது இல்லை, எனவே எதிர்காலத்தில் கலிபா அந்த வகையில் எழுவதைக் காண்பது கடினம்,” என்று அவர் மேலும் கூறுகிறார். ஆனால் அதிகாரத்திற்காகப் போட்டியிடும் பல ஆயுதக் குழுக்கள் உள்ள பகுதிகளில் ஐஎஸ் செழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார்.
பாதுகாப்பு நிபுணர் ஏட்ரியன் ஷ்துனி கூறுகையில், ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தலுக்கு சர்வதேச சமூகம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில்தான் மிகப்பெரிய அபாயம் உள்ளது. பெரிய தாக்குதல்களுக்குப் பிறகு ஒரு “பதிலடி கொடுக்கும் அணுகுமுறை” வேலை செய்யாது என்றும், பல்வேறு நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தம் அவசியம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
“ஐஎஸ் போன்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் எதிரிக்கும் அதன் வளர்ந்து வரும் உத்திகளுக்கும் எதிராக அவ்வப்போது காட்டப்படும் கவனம் போதுமானதல்ல,” என்று அவர் கூறுகிறார், மேலும் “ஐஎஸ் புறக்கணிப்பால் செழித்து வளர்கிறது” என்றும் அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு