மதுரை: புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி என மதுரையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
மதுரையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பபெறு வலியுறுத்தி மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் தெற்குவாசல் மார்கெட் அருகில் நடந்தது. மாவட்ட செயற்குழு அ. ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் கே. அலாவுதீன் முன்னாடி தொடங்கி வைத்தார். தொழிற் சங்க மையம் சிஐடியூ பொருளாளர் லூர்து ரூபி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் கண்டன உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்திருப்பது, இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இந்த திருத்தச் சட்டம் மதங்களுக்கெல்லாம் மேலாக அமைந்துள்ள இந்திய குடியரசு என்ற அடிப்படையை சிதைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சியாகவும், எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் சொத்துக்களையும் கைப்பற்றும் அபாயகரமான ஆரம்பமாகவும் இச்சட்டம் உள்ளது.
இச் சட்டத்தை கடந்த 2ம் தேதி நள்ளிரவில், மாநிலங்களவையில் மூன்றரை மணிக்கு நிறைவேற்றிய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடுகிறது. உச்ச நீதிமன்றம் வக்பு வாரியத்தில் இஸ்லாமிய அல்லாதவர்களை நியமிக்க தடையை விதித்து அதன் நடைமுறையை அடுத்த அமர்வு வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இவ்வேளையில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாநில சட்டசபைகள் நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் ஆளுநர்களால் கையெழுத்திடப்படாமல் இருக்கும் நிலைமையை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பதை விமர்சித்து, அதை ஜனநாயகத்தின் மீது ஏவுகணை தாக்குதல் என குறிப்பிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.