பட மூலாதாரம், Reuters
கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலே இரான் மத்திய கிழக்கில் உள்ள பல இஸ்லாமிய நாடுகளை தாக்கியது.
இந்த நாடுகள் இரானின் அரசியல் எதிரிகள் கிடையாது. அங்கு அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருப்பதால் அவை குறிவைக்கப்பட்டன.
தங்கள் நாடு மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெரிய அளவிலான மற்றும் தொடர் தாக்குதலுக்குப் பதிலடியாக பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது
தற்காப்புக்காக அனைத்து ராணுவ வழிகளையும் இரான் பயன்படுத்தும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக “உண்மையான உத்தரவாதங்கள் 4” என்கிற நடவடிக்கையின் கீழ் அமெரிக்காவின் நிலைகள் மற்றும் சொத்துக்களைக் இரான் குறிவைப்பதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இரான் குறிவைத்த நாடுகளில் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் அடங்கும்.
இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்து பிராந்திய நிலைத்தன்மை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.
இரானிய தாக்குதல்களில் என்ன நடந்தது?
துபை மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் நிகழ்ந்த இரானிய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார், 11 பேர் காயமடைந்தனர்.
ஸயித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்த டிரோன் ஒன்று நடுவானில் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அபுதாபி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிலிருந்து விழுந்த உடைந்த பாகங்களால் ஒருவர் கொல்லப்பட்டார், 7 பேர் காயமடைந்தனர்.
பயணிகளின் எண்ணிக்கையின்படி உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபை சர்வதேச விமான நிலையம் இந்த தாக்குதல்களால் சேதமடைந்துள்ளது. நான்கு ஊழியர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்திலிருந்து கிளம்பும் மற்றும் இங்கு வரும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்றும் இரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தொடர்ந்தது. தோஹா, துபை மற்றும் மனாமாவிலும் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன.
இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணத்தைத் தொடர்ந்து, அந்நாடு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகள் மற்றும் இலக்குகளை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்கி வருகிறது. சனிக்கிழமை காலை அமெரிக்க-இரானின் கூட்டு தாக்குதலில் காமனெயி கொல்லப்பட்டதை இரானிய அரசு ஊடகங்கள் உறுதிபடுத்தின.
பட மூலாதாரம், Getty Images
பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் இரான் தாக்குதல்களை இடைமறித்தன. ஆனால் அதிலிருந்து விழுந்த உடைந்த பாகங்கள் அமெரிக்க ராணுவ நிலைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தின.
துபையில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்தில், இடைமறிக்கப்பட வான் தாக்குதல்களில் இருந்து வந்த பாகங்கள் தீயை ஏற்படுத்தியது. இந்த துறைமுகம் உலகின் ஒன்பதாவது பரபரப்பான துறைமுகமாக உள்ளது.
சனிக்கிழமை அன்று பஹ்ரைனின் தலைநகரான மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு தலைமையிடத்தை தாக்கியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியிலிருந்து பெரும் அளவிலான கரும்புகை வந்ததைப் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், துக்கமில் உள்ள வணிக துறைமுகத்தின் இரண்டு டிரோன்கள் விழுந்து ஊழியர் ஒருவர் காயமடைந்ததாக ஓமன் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வினை என்ன?
இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் மீதான இரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பல நாடுகளும், இதனை தங்களுடைய இறையாண்மை மீறல் எனக் கூறி வலுவாக எதிர்வினையாற்றி உள்ளன.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (ஓஐசி) இரானின் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.
ஓஐசி அமைப்பில் 57 நாடுகள் உள்ளன. இஸ்லாமிய உலகின் கூட்டுக்குரல் என இந்த அமைப்பு அழைக்கப்படுகிறது. 1969-இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க முனைகிறது.
பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவின் மெக்காவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய அரசு சாரா அமைப்பான முஸ்லிம் வேர்ல்ட் லீக், அண்டைய அரபு நாடுகளின் மீதான இரானின் நடவடிக்கைகளை வலுவாக கண்டித்துள்ளது.
இரானின் தாக்குதல்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
இரானின் உடனடி ராணுவ நடவடிக்கை, கூட்டு தாக்குதல்களுக்குப் பிறகு அந்நாடு பெற்றிருக்கும் சர்வதேச அனுதாபத்தை மட்டுப்படுத்திவிட்டதா?
இந்தத் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளிலிருந்து இரானை மேலும் அந்நியப்படுத்துமா?
ஏவுகணை தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் பரவிய பதற்றம், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது மற்றும் பொது மக்களின் மரணம் போன்ற நிகழ்வுகள், இரான் அதன் பலத்தை காட்டும் முயற்சியில் ராஜீய சவால்களை அதிகரித்துவிட்டதா?
பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகள் கட்டுப்பாடு மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் சூழலில் இரானின் வலிய நிலைப்பாடு எதிர்கால பேச்சுவார்த்தைகளில் அதன் நிலையை வலுவிழக்கச் செய்துவிட்டதா?
இந்த நகர்வு, சர்வதேச அரங்கில் அதற்கு ஆதரவு பெறுவதை விடவும் எதிர்ப்பை வலுப்படுத்துமா?
இரானின் தாக்குதல்கள் ஒரு ‘ராஜீய தவறா’?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளுக்கான பள்ளியில் பேராசியராகவும் மத்திய கிழக்கு விவகாரங்களில் வல்லுநராகவும் உள்ளார் அஷ்வினி மகாபத்ரா.
இது ராஜீய தவறு இல்லை என்கிறார் பேராசிரியர் அஷ்வினி. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் இரானில் உள்ள அரசின் அதிகாரம் சரிந்துவிட்டது. எனவே இரான் எடுக்கும் நடவடிக்கைகள் அரசு இருக்கிறது என்பதை அதன் மக்களுக்கு காட்டும் முயற்சியே.” என்று தெரிவித்தார்.
காமனெயி மரணத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் நிலையற்றத்தன்மையை உருவாக்குவதாகக் கூறுகிறார் அஸ்வினி.
“எனவே அதிகாரத்தில் உள்ளவர்களும் எப்படி தொடர வேண்டும் என்பதில் உறுதியில்லாமல் இருக்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.
இரானின் தாக்குதல்கள் அதன் அரசாங்கத்துக்குள்ளே குழப்பமான நிலை இருப்பதை உணர்த்துகிறது என்கிறார் அவர்.
“வெளியில் இருந்து பார்க்கும்போது இது ராஜீய தோல்வியாக தெரியலாம். ஆனால் உள்ளே உருவாகிவரும் சூழ்நிலைகளைப் பார்க்கையில் இரானின் கொள்கைகளை யார் உருவாக்குவார், என்ன பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை யார் முடிவு செய்வார் மற்றும் எந்த திசை நிர்ணயிக்கப்படும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்கிறார் அஸ்வினி.
பட மூலாதாரம், Getty Images
“ஒன்று நீங்கள் பதற்றத்தில் செயல்படுகிறீர்கள், மற்றொன்று அரசு இன்னும் சட்டப்பூர்வமாக இருப்பதைக் காட்ட வெளிப்படையாக முயற்சிக்கிறீர்கள். இரானிய அரசு அதன் வலிமையைக் காட்டுகிறது.. இது ராஜீய தவறு என நான் நம்பவில்லை. ஏனென்றால் நிலையான அரசு இல்லாதபோது இது ஒரு பதற்றமான எதிர்வினையாகவே உள்ளது.” என்றார்.
இரானிடம் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறும் பேராசிரியர் அஸ்வினி, அதனால் கத்தார் முதல் ஜோர்டான் வரை உள்ள அமெரிக்க நிலைகளை தாக்க முடியும் என்கிறார். “இவை அதன் வரம்பில் உள்ளன. அவர்களுடைய மக்களுக்கும் இதைக் காட்ட வேண்டும் அல்லவா?”
ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உள்ள அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான நெல்சன் மண்டேலா மையத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார் முனைவர் பிரேம் ஆனந்த் மிஸ்ரா.
இரான் ஒரு ராஜீய தவறு செய்துவிட்டதாக அவர் நம்புகிறார்.
“இது நிச்சயம் ஒரு ராஜீய தவறு தான். இந்த தாக்குதல்கள் இரானின் அளவான ராணுவ திறன்களைக் காட்டுகின்றன. செயல்பாட்டு குறைபாடுகள் தற்போது வெளிச்சமாகியுள்ளன.” என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் விரக்தியை வெளிப்படுத்துவதாகக் கூறும் பிரேம் ஆனந்த், எந்த விதத்திலாவது பதிலளித்துவிட வேண்டும் என இரான் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தார்.
அவருடைய கூற்றுப்படி, “இந்த அவசர நடவடிக்கை ஒரு ராஜீய தவறாக முடிந்துள்ளது. இதன் விளைவாக முன்பு தங்கள்து வான்பரப்பை வழங்க மறுத்த வளைகுடா நாடுகள் தற்போது அமெரிக்காவின் ஆதரவை ஏற்றுக்கொண்டு தங்களின் வான்பரப்பை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளன.”
இஸ்லாமிய நாடுகளுடனான இரானின் உறவு என்ன ஆகும்?
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் செய்த அனைத்தையும் இரானில் ஆட்சி மாற்றத்துக்காகவே செய்துள்ளன என்கிறார் பேராசிரியர் அஸ்வினி.
“எதிர்காலத்தில் இரானில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவார் என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவின் கூட்டாளிகள். இவர்கள் அனைவருக்கும் அமெரிக்கா உடன் இருதரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.” என்றார்.
“வளைகுடா நாடுகளில் நிலவும் பொதுக் கருத்து இரானுக்கு ஆதரவாக இருக்காது, ஏனெனில் பொது உணர்வு என்பது தேசியவாதத்தை மிகவும் வலுவாகப் பார்க்கிறது. அது தன்னை மதத்தின் அடிப்படையில் மட்டும் பார்ப்பதில்லை. எனவே சௌதி அரேபியா, கத்தார் என எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் இரான் மீது அத்தகைய அணுகுமுறை கொண்டிருக்க மாட்டார்கள். குறிப்பாக புரட்சிகர காவல்படையின் ஆட்சி தொடர்ந்தால் அந்த நிலை மாறாது.” என்கிறார் பிரேம் ஆனந்த்.
“இந்தச் சூழ்நிலைகளில் இரானில் நிகழும் மாற்றங்களில் குறைவான குழப்பங்களே இருக்க வேண்டும் என வளைகுடா நாடுகள் விரும்புவது உறுதியாகிறது. ஏனெனில் அந்த குழப்பம் இரானின் அண்டை நாடுகள் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்தும்.” என்றார்.
பட மூலாதாரம், Muskaan Kataria
இரானின் அண்டை நாடுகளில் அமெரிக்கா ராணுவ இருப்பு அதிகரிக்குமா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அஸ்வினி. “அது அமெரிக்காவைப் பொருத்து அமையும். டிரம்ப் அதிகாரத்தில் உள்ள வரை அந்த ராணுவ தளங்கள் அதே நிலையில் தொடரும். இதர நாடுகளில் இத்தகைய தளங்களை நிறுவி பராமரிப்பதற்கு மிகப்பெரிய பொருட்செலவு ஆகும். எதிர்காலத்தில் இது தொடர முடியுமா என்பது அமெரிக்க பொருளாதாரத்தைப் பொருத்து அமையும். இவை அனைத்தும் பொருளாதார வளங்களைப் பற்றியது.” என்றார்.
இரானின் அண்டை நாடுகளில் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே இருப்பு உள்ளது எனக் கூறும் பிரேம் ஆனந்த், “ஆனால் அமெரிக்காவின் இருப்பு கண்டிப்பாக அதிகரிக்கும். ஒரு ‘பாதுகாப்பு காவலாளியாக’ அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து இருப்பதை இஸ்ரேல் விரும்புகிறது.” என்கிறார்.
”உத்திக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன, ஒன்று அரசியல், இன்னொன்று பொருளாதாரம். இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அரசியல் நோக்கம் நிறைவடைந்துவிடும். ராணுவ உத்திக்கு நீண்ட கால திட்டமிடல் தேவை, ஏனென்றால் இந்த வெற்றிடம் குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இரான் இன்னொரு இராக் ஆவதை அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள் விரும்பவில்லை.”

இரான் ராஜீய தனிமைப்படுத்தலைச் சந்திக்குமா?
இந்தப் பிராந்தியம் சுன்னி ஆதிக்கம் நிறைந்ததால் ராஜீய தனிமைப்படுத்த ஏற்கெனவே இருந்தது என்கிறார் அஸ்வினி.
“ஷியா-சுன்னி பார்வையில் பார்க்கிறபோது, ராஜீய பிரச்னைகள் என்பது புதிதல்ல. அவை ஏற்கெனவே இருந்தன. இரானுக்கு ஆதரவு அல்லது அனுதாபம் என்பது உடனடியாக கிடைக்காது, ஏனெனில் மக்கள் இரான் இதைச் செய்திருக்கக்கூடாது என்பார்கள். போர் என்பது இரானுக்கும் இஸ்ரேலுக்குமானது. இதில் அமெரிக்கா சம்மந்தப்பட்டிருக்கிறது. இதில் மற்ற நாடுகளை ஏன் இழுக்க வேண்டும் என்கிற விமர்சனம் இருக்கும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு