• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

ஈரானின் ‘புஷேர்’ கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208 பேரும் வெலிசறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

Byadmin

Mar 6, 2026


இந்திய கடற்படையால், பெப்ரவரி 15 – 25 ஆம் திகதி வரை விசாகபட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்குபற்றிய ஈரான் கடற்படை கப்பல்களில் ஒன்றான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சியில் பங்கேற்று மீண்டும் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படை கப்பலான ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடந்த 4ஆம் திகதி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்நிலையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது. எவ்வாறிருப்பினும் இலங்கையின் கடல் சார் வர்த்தக பாதிப்புக்களைக் கருத்திற் கொண்டு அக்கப்பலுள்ளவர்கள் மீட்டு, பின்னர் அதனை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்தது.

அதற்கமைய அந்த கப்பலிலிருந்த 208 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 53 அதிகாரிகளும் 84 கெடட் அதிகாரிகளும் 48  சிரேஸ்ட கடற்படையினரும் 23 கடற்படையினரும்  உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னல் வெலிசறையிலுள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான ஐரிஸ் டெனா கப்பலிருந்த 90 பேரது சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த சடலங்களை ஈரானுக்கு அனுப்பி வைக்கும் வரை அவற்றை வைத்திருப்பதற்கான அதிகுளிரூட்டப்பட்ட இரு கொள்கலன்கள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த தாக்குதலுக்கு உள்ளான கடற்பிராந்தியத்தில் தொடந்தும் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

By admin