ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ச்சியான விலைவாசி உயர்வை எதிர்த்து, அரசு மற்றும் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், ஈரானின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
போராட்டங்கள் மேலும் பரவாமல் தடுக்க, செல்போன் சேவைகள் மற்றும் இணைய வசதிகள் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த கட்டுப்பாடுகளையும் மீறி மக்கள் எதிர்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.
தொடர்புடைய செய்தி – ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிப்பு – டிரம்ப் அறிவிப்பு
இந்த சூழலில், போராட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, 18,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் பட்சத்தில், ஈரான் விவகாரத்தில் தலையிட நேரிடும் என்றும், அதனால் இராணுவ நடவடிக்கைகள் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஈரானில் போராடும் மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்புகள், ஈரான் விவகாரத்தில் சர்வதேச அரசியல் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
The post ஈரானில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்: பலி எண்ணிக்கை 2,571ஆக உயர்வு appeared first on Vanakkam London.