13
ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்துள்ள நாடுகள் மீது புதிதாக 25 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளாக சீனா, இந்தியா, துருக்கியே, ஈராக் மற்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், இந்த நாடுகள் அனைத்தும் புதிய வரி விதிப்புக்கு உட்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக பரவலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவை வெளிநாட்டு தலையீட்டுடன் நடைபெறுவதாக ஈரானிய அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை அடக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்தி : ஈரானில் தீவிரமடையும் போராட்டங்கள்: நிரம்பிய மருத்துவமனைகள்; 217 பேர் உயிரிழப்பு!
நடந்து வரும் கலவரங்களின் போது இதுவரை 10,700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் 648 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 505 பேர் ஆர்ப்பாட்டக்காரர்கள் என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.