• Tue. Apr 21st, 2026

24×7 Live News

Apdin News

ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு: பெட்ரோல் திருட்டுகள் 62% அதிகரிப்பு!

Byadmin

Apr 21, 2026


ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையிலான போர் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரித்துள்ளன.

பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் சம்பவங்கள் ஒரு சராசரி நிலையத்தில் வாரத்திற்கு 2.1-லிருந்து 3.4-ஆக உயர்ந்துள்ளதாக ஆதார வீடியோக்களுடன் பிபிசி அறிக்கை வெயிட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து, ஒரு சாதாரண குடும்ப காரில் பெட்ரோல் நிரப்புவதற்கான செலவு 14 பவுண்டுகளும், டீசல் நிரப்புவதற்கான செலவு சுமார் 27 பவுண்டுகளும் அதிகரித்துள்ளன. இதனால் திருடப்படும் எரிபொருளின் சராசரி மதிப்பும் 56 பவுண்டுகளிலிருந்து 67 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு இலண்டன், கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் பர்மிங்காம் போன்ற பகுதிகளில் இந்தப் பிரச்சனை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்படும் எரிபொருளில் ஒரு சிறிய பகுதி வாழ்வாதார நெருக்கடியால் நடந்தாலும், பெரும்பான்மையானவை திட்டமிடப்பட்ட குற்றங்களாகவே கருதப்படுகின்றன. சிசிடிவி காட்சிகளில் மோட்டார் சைக்கிள்கள், வெள்ளை நிற வேன்கள் மற்றும் Porsche SUV போன்ற சொகுசு கார்களில் வருபவர்கள் கூட எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் செலுத்தாமல் செல்வது பதிவாகியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள், பெட்ரோல் நிலைய ஊழியர்களைத் திருடர்கள் என்று அழைப்பதும், அவர்களை அச்சுறுத்துவதும் அதிகரித்துள்ளது. ஆனால், எரிபொருள் விலையில் 55% வரியாகச் செல்வதாகவும், சில்லறை விற்பனையாளர்களுக்கு மிகக் குறைந்த லாபமே கிடைப்பதாகவும் பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (PRA) விளக்கம் அளித்துள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் எரிபொருள் விற்பனையாளர்களுக்கு நிதி ரீதியாகப் பெரும் சுமையை ஏற்படுத்துவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் திருட்டில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முழுத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றவாளிகளைக் கண்டறியவும், மீண்டும் இத்தகைய செயல்கள் நடக்காமல் தடுக்கவும் சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

By admin