ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிட்டிங் தொகுதியைப் பறிகொடுப்பதால் காங்கிரஸ் நிர்வாகிகள் கொதிப்பில் இருப்பதாக வெளியாகும் தகவலை, அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மறுத்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது ஏன்?
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதியன்று ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 10) தொடங்கியுள்ளன. தற்போது வரை மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
யார் இந்த வி.சி.சந்திரகுமார்?
‘காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் தொகுதியான ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்?’ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தற்போது திமுக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இவர் இதே தொகுதியில் 2011-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தேமுதிகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் தேமுதிகவின் சட்டமன்ற கொறடாவாகவும் வி.சி.சந்திரகுமார் இருந்துள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவுக்கு எதிராக தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.சந்திரகுமார், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். தற்போது திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி?
அதேநேரம், தங்களின் சிட்டிங் தொகுதியை பறிகொடுத்தது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் சில தகவல்களைத் தெரிவித்தார்.
“கடந்த முறை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது திமுக அங்கு போட்டியிடுவதை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை” எனக் கூறுகிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிட விரும்புவது குறித்து முன்னாள் தலைவர்களுடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தியதாகக் கூறும் அவர், “கூட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடுவதாக முடிவானது” என்கிறார்.
“திமுக தலைமையிடம் நல்ல அணுகுமுறையில் செல்ல வேண்டும் என்பதில் செல்வப்பெருந்தகை உறுதியாக இருக்கிறார். அதற்காக கட்சியின் நன்மதிப்பு சீர்குலைவதைப் பற்றி தலைமை கவலைப்படவில்லை” எனவும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
அதில், ”2026 சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், முதல்முறையாக முதலமைச்சர் கேட்டுக்கொண்டதால், திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று முடிவு செய்யப்பட்டது” என கூறியுள்ளார்.
பிபிசி தமிழிடம் செல்வப்பெருந்தகை கூறியது என்ன?
காங்கிரஸ் நிர்வாகிகளின் அதிருப்தி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகையிடம் பிபிசி தமிழ் பேசியது.
“தொகுதியை விட்டுக் கொடுத்ததில் எந்தவித வருத்தங்களும் இல்லை. திமுகவுக்கு மகிழ்ச்சியோடு விட்டுக் கொடுத்தோம்” எனக் கூறினார் அவர்.
தொண்டர்கள் அதிருப்தி பற்றிக் கேட்டபோது, “அப்படியில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் இதைவிட பல மடங்கு தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். கட்சிக்குப் பல நன்மைகள் நடக்க உள்ளன. அதற்காக சிறிய சமரசத்துக்கு உடன்பட்டுக் கொடுத்தோம்” எனக் கூறினார்.
அதேநேரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி வரலட்சுமியை போட்டியிட வைக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்ததாக செல்வப்பெருந்தகை கூறினார்.
“கடந்த 10-ஆம் தேதி இரவு வரையில் அவர்தான் வேட்பாளராக இருந்தார். அவர் மறுத்துவிட்டதால் இந்த முடிவுக்கு வந்தோம். அவர் விரும்பியிருந்தால் அவர்தான் போட்டியிட்டிருப்பார்” எனவும் பிபிசி தமிழிடம் கூறினார்.
“கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஓரிரு தொகுதிகள் மாறும். சில இடங்களில் மனக்குறைகள் இருக்கவே செய்யும். இதையெல்லாம் தாண்டி தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரமாக வேலை பார்ப்பார்கள்” எனக் கூறுகிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி.
திமுக போட்டியிட விரும்பியது ஏன்?
ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட விரும்பியதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அதை சரிசெய்யும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 80 சதவீத வாக்குகளைப் பெறுவது அக்கட்சியின் இலக்காக இருக்கலாம்” என்கிறார்.
“காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் அவ்வளவு வாக்குகளைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை” என ஷ்யாம் குறிப்பிட்டார்.
“ஈரோடு கிழக்கு என்றைக்கும் காங்கிரஸின் தொகுதியாக இருந்ததில்லை” எனக் கூறும் ஷ்யாம், ” பெரியார் குடும்பத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவர் இறந்ததால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை போட்டியிட்டார்” எனக் கூறுகிறார்.
ஆட்சியின் மீது அதிருப்தியா?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜிவ்காந்தி, “ஈரோடு கிழக்குத் தொகுதியில் நன்கு அறிமுகமானவராக சந்திரகுமார் இருக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி இந்த முடிவை முதலமைச்சர் எடுத்துள்ளார்” என்கிறார்.
“இடைத்தேர்தல் என்பது மாநில அரசை எடைபோடும் தேர்தலாக இல்லாவிட்டாலும் அரசின் மீதான விஷம பிரசாரங்கள், அவதூறு தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் அமைந்துள்ளது” எனக் கூறுகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பது திமுகவின் இலக்காக உள்ளதாகக் கூறும் ராஜிவ்காந்தி, “பெண்கள் மத்தியில் ஆட்சியின் மீது விமர்சனம் இல்லை. சமூக ஊடகங்களில் சிலர் அவதூறு பரப்புகின்றனர். களத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லை” என்கிறார்.
அதிமுக புறக்கணிப்பு
இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்துள்ளது குறித்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “2015-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் திமுகவும் புறக்கணித்துள்ளது. அது ஒரு வியூகம்” எனக் கூறுகிறார்.
“இடைத்தேர்தலில் தோற்றால் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்படும். அதுவே தேர்தலைப் புறக்கணித்தால் சில நாள்கள் பேசுவார்கள்” என்கிறார் ஷ்யாம்.
அந்தவகையில், விக்ரவாண்டி இடைத்தேர்தலைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்துள்ளது என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.