- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
பிப்ரவரி 5 ஆம் தேதியன்று நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், வழக்கமான இடைத்தேர்தல் பரபரப்புகளையும், அரசியல் பிரமுகர்களின் பரப்புரைகளையும் பார்க்க முடியவில்லை.
முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையில், தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர்.
இந்த தேர்தலின் முடிவுகளை விட, இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியின் வாக்கு வங்கி கூடுகிறது, குறைகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் களத்தில் பிரசாரம் எவ்வாறு நடக்கிறது?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4 அன்று , அவர் மாரடைப்பால் இறந்தார்.
அதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அவரது தந்தை இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கிட்டதட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் காலமானார்.
இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி மீண்டும் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்குள் இந்தத் தொகுதியில் மூன்றாம் முறையாக தேர்தல் நடக்கவுள்ளது.
2023 ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த இத்தொகுதியில் இப்போது சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு தொகுதி- 3 தேர்தல்
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அதிமுக அறிவித்தது. பாரதிய ஜனதா கட்சியும் புறக்கணித்துவிட்டது.
புதிதாகத் துவக்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடுமென்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அக்கட்சியும் தற்போது போட்டியிடவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த சட்டமன்றத் தொகுதியில், தற்போது திமுக போட்டியிடுகிறது.
முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்துவிட்டநிலையில், நாம் தமிழர் கட்சி மட்டுமே, இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
திமுக சார்பில் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் களம் காண்கின்றனர்.
சந்திரகுமார், கடந்த 2011–2016 காலகட்டத்தில், இதே தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2016-ஆம் ஆண்டில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, தோல்வியைச் சந்தித்தவர். இப்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
சந்திரகுமார், சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 பேர் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக இருக்கின்றனர்.
இரண்டே இரண்டு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே மோதும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் கள நிலவரத்தை அறிய பிபிசி தமிழ் சென்றது.
கடந்த 2023 பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் நடந்த நிகழ்வுகளையும், பரப்புரை மற்றும் தேர்தல் பணிகளையும் ஒப்பிட்டால், இப்போது மிகப்பெரும் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.
தேர்தலுக்கான சுவர் விளம்பரங்கள், தோரணங்கள், கொடிகள், சுவரொட்டிகளைப் பார்ப்பதே அரிதாகவுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எல்லை ஆரம்பம், எல்லை முடிவு என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்க்கும்போதுதான், தேர்தல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதிப் பகுதி இதுதான் என்பதையே அறிய முடிகிறது.
அந்த அளவுக்கு இந்த இடைத்தேர்தல் எவ்வித பரபரப்புமின்றி அமைதியாக நடக்கயிருக்கிறது.
அதேபோல, கடந்த இடைத் தேர்தலில் இருந்த அளவுக்கு பணப்புழக்கம் இப்போது இல்லை என பிபிசி தமிழிடம் பேசிய இத்தொகுதி வாக்காளர்கள் பலர் கூறினர்.
முக்கிய தலைவர்களின் பரப்புரை இல்லை
அத்துடன் மக்களிடம் இடைத்தேர்தல் குறித்த ஒரு சலிப்பும் தென்படுவதால் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறையுமென்ற பேச்சும் பரவலாக இருக்கிறது.
வாக்குப்பதிவு சதவீதம் குறையுமென்ற கருத்தை மறுத்த தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளருமான முத்துசாமி, ”மக்களிடம் இடைத்தேர்தல் குறித்து எவ்வித அலுப்பும் சலிப்பும் தெரியவில்லை. மாறாக, ஒரு மிகப்பெரிய தலைவர் இறந்து போனதால் இந்தத் தேர்தல் வந்துள்ளது என்று வருத்தத்தில்தான் உள்ளனர்.” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய டீக்கடை உரிமையாளர் கணேசன், ”ஆளும்கட்சி வேட்பாளர் நிற்பதால் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் கூடுவதற்கே வாய்ப்புள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இளங்கோவன் போட்டியிட்ட காரணத்தால், கடந்த இடைத் தேர்தலில் இங்கு திமுக சார்பில் பல்வேறு அமைச்சர்களும் முகாமிட்டு, பகுதிவாரியாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இப்போது திமுகவே நேரடியாக களமிறங்கியுள்ள நிலையில், மாவட்ட அமைச்சரான முத்துசாமியைத் தவிர, வேறு எந்த அமைச்சரும் இங்கு காணப்படவில்லை.
அதே போல, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என முக்கிய தலைவர்களின் பரப்புரையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுபற்றி திமுக வேட்பாளர் சந்திரகுமார் பிபிசி தமிழிடம், ”பெரிய தலைவர்கள், அமைச்சர்கள் யாரும் வராமலே வெற்றி பெற வேண்டுமென்பதுதான் தலைமையின் உத்தரவு. எங்களை வீடு வீடாக, வீதி வீதியாகப் போகச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனால்தான் மைக், வேன் போன்றவற்றைக் கொண்டு பரப்புரை நடத்தவில்லை.” என்றார்.
அதேபோல, காங்கிரஸ் தொகுதியில் திமுக போட்டியிடுவதால் அக்கட்சியினரிடம் கடும் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படும் தகவலை முத்துசாமி மறுத்தார்.
”அப்படி எந்த அதிருப்தியும் காங்கிரசாரிடம் கிடையாது. ஏனெனில் தோழமைக்கட்சித் தலைமையிடம் பேசி, பரஸ்பர புரிதலுடன்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றார் அமைச்சர் முத்துசாமி.
இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு வந்த ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனிடம் இதுபற்றி கேட்டபோது, ”வருத்தம் இருக்கிறது; அதிருப்தி இல்லை. நாங்களும் களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்கிறோம். ஆனால் 2026 பொதுத் தேர்தலில் இந்த தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமென்று மாவட்ட கமிட்டி சார்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.” என்றார்.
தொகுதிக்குள் இருக்கும் பிரதான பிரச்னைகள்!
இது ஒருபுறமிருக்க,தொகுதிக்குள் பல பிரச்னைகள் இருப்பதாக வேட்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் செல்லக்குமாரசாமி , ”தொகுதியில் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இந்த இடைத் தேர்தலுக்கு சிறப்பு வாக்குறுதி எதுவுமில்லை என்று திமுக தரப்பில் சொன்னதால்தான் நான் இந்தத் தேர்தலிலேயே போட்டியிடுகிறேன். பல பிரச்னைகள் இருக்கின்றன. குறிப்பாக காற்று மாசு, நீர் மாசு அதிகரித்து, புற்றுநோய் நகரமாக ஈரோடு மாறி வருகிறது. இதைத் தடுக்காமல் இப்போது மீண்டும் வாக்குக் கேட்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.” என்றார்.
பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த வாக்காளர் ப்ரீத்தா, தெருநாய் தொல்லையைக் கூடக்கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
அதனால் தன்னைப் போன்ற எளிய வாக்காளர்களுக்கு ஆளும்கட்சி உட்பட எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கையில்லை என்றும் கூறிய அவர், ஆனாலும் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிப்போம் என்று குறிப்பிட்டார்.
இதே போல பெரிய குறைகள் பட்டியலை அடுக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி, ”நகரில் ரோடுகள் சரியில்லை; குப்பைகள் குவிந்துள்ளன; கொசுக்கள் தொல்லை அதிகமாகி விட்டது. மாசு அதிகரித்து, மஞ்சள் நகரம் என்று அழைக்கப்பட்ட ஈரோடு இப்போது புற்றுநோய் நகரமாகி விட்டது. இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று ஆளும்கட்சியினரிடம் கேளுங்கள் என்பதைத்தான் நான் எனது பரப்புரையில் முக்கியமாக வலியுறுத்தி வருகிறேன்.” என்றார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார், ”தொகுதிக்குள் பெரிய பிரச்னை, எதிர்ப்பு ஏதுமில்லை. மக்கள் குறை சொல்லவில்லை. கோரிக்கை வைக்கின்றனர். அதையும் திமுகவால்தான் நிறைவேற்ற முடியுமென்று நம்புகின்றனர். நீர்நிலை புறம்போக்கில் இருப்பவர்களுக்கு பட்டா கொடுப்பதில் உச்சநீதிமன்ற உத்தரவால் சிக்கல் உள்ளது. மாற்று இடம் தரமுடியாது; 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்று வீடுகள் தயாராகவுள்ளன. அதற்கு ஒப்புக் கொண்டால் உடனே வீடுகளை ஒதுக்க அரசு தயாராகவுள்ளது.” என்றார்.
தினமும் பரப்புரை செய்யும் சீமான்
களத்தில் திமுகவை எதிர்க்கும் ஒரே பிரதான கட்சி என்பதால், நாம் தமிழர் கட்சியினரிடம் கூடுதல் உற்சாகம் தெரிகிறது.
அதற்கேற்ப கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோட்டிலேயே தங்கியிருந்து தினமும் மாலையில் ஏதாவது ஓரிடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி பரப்புரை செய்கிறார்.
நகரின் முக்கிய வணிகப்பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரமாண்டமான தேர்தல் அலுவலகம் அமைத்து, அங்கு நுாற்றுக்கணக்கானவர்கள் தங்கியிருந்து தேர்தல் பணி செய்வதையும் பார்க்க முடிந்தது.
சமீபத்தில் பெரியாரைப் பற்றி சீமான் பேசிய கருத்துகள், தமிழகத்தில் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் அவர் தங்கி பரப்புரை செய்து வருகிறார். அவர் மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது, கலவையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதையும் களத்தில் உணர முடிகிறது.
சீமானின் இந்த பேச்சு, ஈரோடு மக்களிடம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய, பலரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் இதனால் தங்களுக்குக் கூடுதல் வாக்குகளே கிடைக்குமென்று நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
”பெரியாரைப் பற்றி சீமான் பேசியதால் எந்த பாதிப்புமில்லை. எதிர்ப்புமில்லை. சில இடங்களில் அது சாதகமாகத்தான் உள்ளது. இப்போது பெரியார் பற்றி மக்களுக்கு யோசிக்க நேரமில்லை. அவர்களுக்கு அன்றாடப் பிரச்னைகள் தீர்ந்தால் போதும். அதைத்தான் நாங்கள் பரப்புரையில் பேசி வருகிறோம்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி.
பெரியாரை எதிர்த்துப் பேசியதன் மூலம் திமுகவையும், பெரியாரையும் எதிர்க்கும் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா வாக்குகள், நாம் தமிழர் கட்சிக்குக் கிடைக்குமென்றும் அக்கட்சியினர் நம்பியுள்ளனர்.
வேட்பாளர் சீதாலட்சுமியும் இந்தக் கருத்தைக் கூறியதோடு, ”அதிருப்தி வாக்கு, நாம் தமிழர், அதிமுக, பாரதிய ஜனதா வாக்குகளால் வெற்றி பெறுவேன்” என்றார்
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இதே தொகுதியில் கடந்த 2023 இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான தென்னரசு, ”பாரதிய ஜனதாவின் வாக்குகள், அவருக்குக் கிடைக்கலாம். ஆனால் அதிமுக வாக்குகள் போவதற்கு அதிக வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். பெரியாரைப் பற்றி அவர் பேசியதில் எங்கள் கட்சியினருக்கும் கடும் அதிருப்தி உள்ளது.” என்றார்.
இந்தத் தொகுதியைப் பற்றிப் பேசாமல், சீமான் சித்தாந்தரீதியாகப் பேசுவதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாரதிய ஜனதா இருப்பதாகக் குற்றம்சாட்டினார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்.
இந்த கருத்துகளை மறுத்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர், ”பெரியாரை எதிர்ப்பதால் மட்டும் சீமான் புனிதராகிவிடமாட்டார். அவருடைய சித்தாந்தம், எப்போதுமே தேச நலனுக்கு எதிரானதுதான். அவரை பாரதிய ஜனதா கட்சியினர் யாரும் நம்ப மாட்டார்கள். சீமான் கட்சிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.