• Fri. Jan 17th, 2025

24×7 Live News

Apdin News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மனு தாக்கல்  | Erode East by-election Naam Tamilar Katchi candidate filed nomination

Byadmin

Jan 17, 2025


ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, இன்று (ஜன.17) காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை, அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில், ஜன.10-ம் தேதி தொடங்கியது. 10-ம் தேதியன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள், 13-ம் தேதி 6 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று (17-ம் தேதி) இறுதி நாளாகும். இன்று காலை 11 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.

அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான மாநகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காவலதுறையினர் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து வேட்பாளர் சீதாலட்சுமி மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்து விட்டு, கார் மூலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சீதாலட்சுமி கூறியதாவது: சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்ய போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். திமுகவினர் இப்போதே அராஜகத்தை தொடங்கி விட்டனர். சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் அடக்குமுறையை மீறி, சீமான் தலைமையில், சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சாரம் மேற்கொள்வோம்.

வாக்காளர்களைச் சந்தித்து நீதி கேட்போம். அவர்கள் எங்களை ஆதரித்து திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக, நாதக நிர்வாகி நவநீதன் உட்பட 5 பேர் மீது கருங்கல்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



By admin