ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அக்கட்சிக்கு கிட்டதட்ட 24 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது?
நாம் தமிழர் கட்சி மட்டுமே நேரடி போட்டியில் இருந்ததால், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் யாரும் கிழக்குத் தொகுதியில் பெரிதாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) நடந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தி.மு.க வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியான இறுதி தரவுகளின்படி தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் கிடைத்துள்ளன.
1.பெரியார் மீதான விமர்சனம்
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதைவிட கூடுதலான வாக்குகளை தற்போது அக்கட்சி பெற்றுள்ளது.
பிரதான கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால் நாம் தமிழர் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதே காலகட்டத்தில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்தார். பெண்ணிய உரிமை தொடர்பாக பெரியார் கூறியதாக சீமான் பேசிய பேச்சு, பெரியாரிய அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் பெரியார் மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
கடந்த தேர்தலைவிட13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தாலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
2. தேர்தல் உத்தி தவறா?
“வரும் காலங்களில் தனது தேர்தல் உத்திகளை நாம் தமிழர் கட்சி மாற்றிக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்கு பெரியாரும் பிரபாகரனும் பயன்படுவதில்லை. பழைய சித்தாந்தங்கள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவர் உயரத்தில் இருந்த காலத்தில்கூட வாக்கு அரசியலில் வெற்றி பெறும் நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியதில்லை” எனக் கூறுகிறார்.
மேலும், “பெரியார் எதிர்ப்பு என்ற நிலையை எடுத்தால் அது பா.ஜ.க ஆதரவு என்ற நிலையாக மக்கள் பார்ப்பார்கள். தேர்தல் முடிவுகளின்படி மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு இல்லை என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்” என்கிறார்.
“ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் பிரசாரம் அமையவில்லை” எனக் கூறும் ஷ்யாம், ” கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை சீமான் பலப்படுத்த வேண்டும்” என்கிறார்.
இதனை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, “கடந்த காலத்தைவிட கட்டமைப்பில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 2026 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் முகவர்களை நியமிப்பது எங்களின் இலக்காக உள்ளது” எனக் கூறினார்.
பொதுக்கூட்டங்களில், தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே சீமான் அதிகம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சித்தாந்த ரீதியாக பேசும்போதும் திராவிடம் குறித்துப் பேசும்போதும் பெரியார் குறித்தும் பேசினோம். அதிலும் 10 சதவீதம்தான் பெரியார் பற்றிப் பேசினோம்” என்கிறார் இடும்பாவனம் கார்த்தி.
“திமுகவும் பெரியார் பெயரை சொல்லி வாக்குகளைக் கேட்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கியிலும் பெரியார் குறித்த விமர்சனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை” எனக் கூறுகிறார் அவர்.
3. புறக்கணித்த எதிர்க்கட்சிகள்- யாருக்கு லாபம்?
பிரதான அரசியல் கட்சிகள் போட்டியிடாத சூழலில் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “அதிமுக வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறவில்லை. அதற்கான வாய்ப்பு தொடக்கத்தில் இருந்தே இல்லை. ஆளும்கட்சி எதிர்ப்பு வாக்குகள் ஒன்று சேர்ந்திருந்தால் நாம் தமிழர் கட்சி, இன்னும் அதிக வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
“எதிர்கட்சிகள் போட்டியிட்டு தங்களின் வாக்குவங்கியைக் காட்டியிருக்க வேண்டும். அப்போது தான் திமுக எதிர்ப்பு வாக்குகளை அடையாளம் காண முடியும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது” என்கிறார்.
இதற்கு மாற்றான கருத்தை முன்வைக்கும் அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளருமான பாபு முருகவேல், “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டபோதே என்ன நடக்கும் என்பதை அறிந்து தான் போட்டியிட்டோம். தற்போது போட்டியிடுவது என்பது தேவையில்லாத ஒன்று” எனக் கூறுகிறார்
இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதை சுட்டிக் காட்டும் பாபு முருகவேல், “ஆளும்கட்சியின் மீதான அதிருப்திக்கு இதுவே காரணம். 80 சதவீதத்துக்கும் வாக்குகள் பதிவாகியிருந்தால் அதிமுக வாக்குகள் மடை மாறியிருக்கும் என நம்பலாம்” எனக் கூறுகிறார்.
“கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் 25 சதவீத வாக்குகளை அதிமுக வாங்கியது. அப்படிப் பார்க்கும் போது அ.தி.மு.க வாக்குகள் வேறு கட்சிகளுக்கு திசை மாறிச் செல்லவில்லை” என கூறுகிறார் பாபு முருகவேல்.
2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவர் 62,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜாவுக்கு கிட்டதட்ட 56 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தென்னரசுவுக்கு 43,922 வாக்குகள் கிடைத்தன.
அந்தவகையில், ”நாம் தமிழர் கட்சிக்கு எதிர்க்கட்சி வாக்குகள் பெரிதாக சென்று சேரவில்லை” என ஷ்யாம் குறிப்பிட்டார்.
4. வழக்கமான இடைத்தேர்தலை போல இந்த முறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவா?
தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், “ஆளும்கட்சி போட்டியிடும்போது கடந்த காலங்களில் பிரதான கட்சிகள் போட்டியிடாமல் இருந்துள்ளன. அப்போது யாராவது ஒருவர் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்குவார்கள். அதை விபத்தாக பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.
இதை எப்படி விபத்தாக பார்க்க முடியும் என செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் கூறியதை தவறாக திரிக்க வேண்டாம்” எனக் கூறிய சந்திரகுமார், “யாரைப் பார்த்தும் திமுக பயந்தது இல்லை. பயப்படுவதாக கூறினால் அது அவர்களின் அறியாமை” என்றார்.
ஆட்சியை மக்கள் ஆதரிப்பதால், எதிர்க்கட்சிக்கு விழக் கூடிய வாக்குகளும் தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறிய சந்திரகுமார், “அதன் வெளிப்பாடு தான் இவ்வளவு பெரிய வெற்றி” எனக் கூறினார்.
“இந்த தேர்தலால், நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை” எனக் கூறுகிறார் அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த தேர்தலை விடவும் அதிக வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது” எனக் கூறினார்.
பெரியாரை விமர்சித்த காரணத்தால் வாக்குகள் குறையவில்லை எனக் கூறியுள்ள சீதாலட்சுமி, “நாம் தமிழர் கட்சி மீது புரிதல் உள்ளவர்கள், எங்களுக்கு வாக்களித்துள்ளனர். பணம், கள்ள ஓட்டு ஆகியவற்றைத் தாண்டி இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளோம்” எனக் கூறுகிறார்.
5. தி.மு.க வெற்றி – எதைக் காட்டுகிறது?
“இந்த வெற்றியின் மூலம் திமுக மகிழ்ச்சியடைவதற்கு எதுவும் இல்லை” எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “இந்த வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்க முடியாது” என்கிறார்.
அதேநேரம், தேர்தல் களம் என்பது சரிசமமாக இல்லை எனக் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியியின் இடும்பாவனம் கார்த்தி.
வீதிக் கூட்டம், தெருமுனைக் கூட்டம் என திமுக பிரசாரம் செய்யவில்லை எனக் கூறும் அவர், “பணத்தை நம்பி திமுக போட்டியிட்டது. கோடிக்கணக்கில் செலவு செய்து திமுக இந்த வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளது” என குற்றம்சாட்டினார்.
திமுகவின் வெற்றி குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, “யாரும் களத்தில் இல்லை. இது போலி வெற்றி. எங்கள் நிர்வாகிகள் ஓட்டைக் கூட அவர்களே பதிவு செய்துவிட்டனர். கள்ள ஓட்டுகளின் மூலம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்” எனக் கூறினார்.
ஆனால், இதை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பு செயலர் கான்ஸ்டன்டைன், ” இது பெரியார் மண் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு இது” எனக் கூறுகிறார்.
கள்ள ஓட்டு, பண விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த கான்ஸ்டன்டைன், “தோற்றவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறுவார்கள்” என்றார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆவடியில் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பெரியார் மண்ணில் மகத்தான வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். நம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.