ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 13, 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (மே 11), நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 13, 14-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 15, 16-ம் தேதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வரும் 13, 14-ம் தேதிகளில் நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 6 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 4 செ.மீ., திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.