ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகள், உரிய நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 84 நிபந்தனைகளை இந்த கூட்டத்துக்கு காவல்துறை விதித்தது.
இருவர் மயக்கமடைந்தது, தடுப்பை ஏறிக் குதித்தபோது ஒருவருக்கு காலில் அடிபட்டது ஆகியவை தவிர இந்த கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்தது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகான முதல் பொதுக்கூட்டம்
கரூரில் கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர்.
இதனால் தவெக மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து, இதுகுறித்து விஜய் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர், தமிழக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பட மூலாதாரம், TVK
ஈரோடு பொதுக் கூட்டம், கரூர் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், இதற்கு 84 விதமான நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டதன் பேரில் இந்தக் கூட்டதிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கரூரில் ‘ரோடு ஷோ’ நடத்த விஜய் பல மணி நேரம் தாமதமாக, இரவு நேரத்தில் வந்ததும் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்று தமிழக அரசின் தரப்பில் கூறப்பட்டது.
இந்தநிலையில் ஈரோட்டில் காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டுமென்று அனுமதியில் குறிப்பிடப்பட்டிருந்தது என்கிறார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா.
படக்குறிப்பு, விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
பொதுக்கூட்ட ஏற்பாடுகள் எப்படி இருந்தன?
பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சுமார் 20 ஏக்கரில் செய்யப்பட்டு இருந்தபோதும், கார்கள் மற்றும் டூ வீலர்கள் நிறுத்த வெவ்வேறு பகுதிகளில் இடம் தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பொதுக்கூட்ட திடலுக்கு அரை கி.மீ. நடந்து வரும் வகையில் ஏற்பாடுகள் இருந்தன. பிரதான வாயில் உள்படப் பல திசைகளிலும் வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்கள் நின்று கூட்டத்தைப் பார்ப்பதற்கான இடம், மொத்தம் 72 ‘பப்ளிக் பாக்ஸ்’ எனப்படும் 72 தடுப்புகளால் ஆன பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்குள் தொண்டர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் அனுமதிக்கப்பட்ட ‘பப்ளிக் பாக்ஸ்’களில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று அப்பகுதிகளில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஒவ்வொரு பப்ளிக் பாக்ஸ் பகுதியிலும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு, தேவைப்படுவோர் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவை தவிர்த்து மக்கள் நடந்து வரும் வழிகளில் பல இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாகச் சில குடிநீர் லாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
விஜய் பரப்புரை பேருந்தில் நின்று பேசுவதைப் பார்க்கும் வகையில் ஆங்காங்கே எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் பொதுக்கூட்டம் நடந்தபோது கடுமையான வெயில் இருந்ததால் அவற்றில் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை இருந்தது.
இவற்றைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கி மதியம் 12:45 மணிக்குள் முடிவடைந்தது.
இருவர் மயக்கம், ஒருவர் காலில் காயம்
விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஓருவர் ஸ்பீக்கர்கள் வைக்கப்படிருந்த இரும்பு தூணின் மீது ஏறியிருந்தனர். அருகில் இருந்தவர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் கூறியும் அவர்கள் இறங்க மறுத்துவிட்டனர்.
அதைப் பார்த்த விஜய், ”தம்பி! உடனே கீழே இறங்குப்பா… நீ கீழே இறங்கு நான் முத்தம் கொடுக்கிறேன்!” என்று கூறியதும் அவர்கள் இருவரும் இறங்கிவிட்டனர். இதேபோன்று தடுப்பில் ஏறிக் குதித்த ஓர் இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
பொதுக்கூட்டம் நடக்கும் விஜயமங்கலம் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில், கோவையில் இருந்து வந்த விஜயை காண மக்கள் திரண்டிருந்தனர்.
அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் கனமான கயிறுகளை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
ஏற்கெனவே குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் பொதுக் கூட்டத்திற்கு வரவேண்டாமென்று தலைமை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை பார்ப்பது அரிதாக இருந்தது.
கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் நின்றபடியே விஜய் பேச்சை கேட்டனர்
பள்ளி வயதுடைய மாணவர்கள், மாணவிகள் சிலரை பெற்றோர்கள் அழைத்து வந்தபோது, அவர்களை பொதுக்கூட்டத்திற்கு வரும் வழியிலும், வாயில் பகுதியிலும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர்.
”வழக்கமான நிபந்தனைகளுடன் சில விஷயங்களை கட்டாயமாகச் செய்ய வேண்டுமென்று கூறியிருந்தோம். குறிப்பாக குடிநீர் வசதி போதிய அளவில் செய்யப்பட வேண்டும்; நெரிசல் ஏற்படாத வகையில் தனித்தனியாக பல பகுதிகளை அமைத்து, பலமான தடுப்புகளை அமைக்க வேண்டும்; மருத்துவக் குழு தயாராக இருக்க வேண்டும்; ஆம்புலன்ஸ் செல்ல வழிகள் விட வேண்டும்; முக்கியமாக தாமதமின்றி உரிய நேரத்துக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டுமென்று கூறியிருந்தோம்.” என்றார் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சுஜாதா.
மேலும் ”பொதுக்கூட்டத்துக்கான இடம் சகல வசதிகளையும் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதும் அதில் முக்கிய நிபந்தனை. இந்த இடத்தில் அவை எல்லாமே இருந்தன. அதுமட்டுமின்றி, நாங்கள் கூறிய நிபந்தனைகளை சரியாகச் செய்துள்ளனரா என்பதை ஆய்வும் செய்தோம். குறிப்பாக ‘பப்ளிக் பாக்ஸ்’களுக்கு இடையிலான இரும்புக் கம்பிகளை 3 அடி ஆழத்துக்குத் தோண்டி வலுவான அடித்தளத்துடன் அமைக்கவும் அறிவுறுத்தியிருந்தோம். அதனால் நெரிசல் எங்குமே ஏற்படவில்லை.” என்றார்.
”பொதுக் கூட்டத்தில் இருவர் மயக்கம் அடைந்திருந்தனர். தடுப்பை ஏறிக் குதித்த ஒரு இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அவை தவிர்த்து, வேறு எங்கும் எந்தவித விபத்துகளும், அசம்பாவிதங்களும் நடந்ததாகத் தகவல் இல்லை. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்றும் கண்காணித்து வருகிறோம். மற்றபடி பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது” என்றார் சுஜாதா.
”கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பெண்கள் பகுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதற்காக 400 பெண் காவலர்களை நியமித்திருந்தோம். அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது” என்றார் சுஜாதா.