ஈரோடு பெருந்துறையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என்று கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.
மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து விமானம் மூலம் மணிக்கு கோவை வந்தடைந்த தவெக தலைவர் விஜய் அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை நோக்கி செல்கிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்பு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் தவெக பொதுக்கூட்டம் என்பதால், கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் விஜய்
பொதுக் கூட்டத்திற்கு 84 நிபந்தனைகள்!
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்குப் பின்பு, தமிழகத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்கவில்லை. உள்ளரங்கங்களில் நடந்த கட்சி நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றார்.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதியன்று புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் பேசினார். ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின், இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் என்ற பகுதியில் நடக்கும் தவெக பொதுக்கூட்டத்தில் தான் விஜய் பங்கேற்றுப் பேசவுள்ளார். இந்த கூட்டத்துக்கு அனுமதியளிப்பதற்கு காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்திருந்தது. இன்று காலை 11 மணிக்குத் துவங்கி பிற்பகல் 1 மணியளவில் இந்த கூட்டம் நிறைவுபெறவுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த இடம், கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியை ஒட்டியே அமைந்துள்ளது. கொங்கு குறுப்பு நாட்டு படைத்தலை வேளாளர் சங்கம் என்ற அமைப்புக்குச் சொந்தமான விஜயமங்களம் ஸ்ரீவிஜயபுரி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
படக்குறிப்பு, பெண்களுக்கு தனி இடங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், ”கரூர் துயர சம்பவத்துக்குப் பின்பு விஜய் பங்கேற்கும் முதல் திறந்தவெளி நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதல் கவனத்துடன் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கேயுமே நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நுழைவாயில்களும் வெளியில் செல்வதற்கான வழிகளும் போதியளவில் அமைக்கப்பட்டுள்ளன.” என்றார்.
”குடிநீர் வசதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, வரும் மக்கள் அனைவருக்குமே குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. அதைத் தவிர்த்து 20 இடங்களில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. திடலின் வெளிப்பகுதிகளில் குடிநீர் லாரிகள் நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் 20 பேர் தண்ணீர் குடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்தார்.
35 ஆயிரம் பேருக்கு எதிர்பார்ப்பு: 1800 போலீசார் பாதுகாப்பு!
பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் 10 ஆயிரம் பேரும், பொது மக்கள் 25 ஆயிரம் பேரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அருண்ராஜ், 2500 போலீசார் பாதுகாப்புக்கு கோரியிருப்பதாகவும் கூறினார். மற்ற எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு எங்களுக்கு நன்றாக இருக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பமாகவுள்ளது என்றும் அருண்ராஜ் தெரிவித்தார்.
பொதுக்கூட்டம் நடக்கவுள்ள பகுதியில், இரும்புத் தடுப்புகளால் 72 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நடுப்பகுதியில் இடைவெளி விட்டு அங்கு பேருந்தில் நின்று விஜய் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேக மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. அதேபோன்று பொதுமக்கள் அமர்வதற்கு எங்குமே நாற்காலிகள் போடப்படவில்லை. மொத்தமுள்ள 72 தடுப்புகளுள்ள பகுதிகள் ஒவ்வொன்றிலும் 500 பேர் நிற்க இடமிருப்பினும் 400 பேரை மட்டுமே நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் விளக்கினர்.
பொதுக்கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தகவல் தெரிவித்த ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மொத்தம் 1800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தவெகவினர் அளித்த தகவலின்படி, கூட்டத்தை கண்காணிப்பதற்காக 60 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதோடு, டிரோன் கேமராக்களை வைத்துக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 58 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுடன் 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்துக்கு வருவோரை உள்ளே அனுமதிப்பதற்கு பிரதான வாயில் உட்பட 14 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், ”எந்த வகையிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். கூட்ட நெரிசல் எங்கேயும் ஏற்படாதவாறு விரிவான இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் வேறு கட்சிகளிலிருந்து யார் யார் சேர்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.” என்றார்.
பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வரவேண்டாம்; முதியவர்கள், கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று ஏற்கெனவே கட்சித்தலைமை அறிவித்திருப்பது குறித்து நினைவூட்டிய தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், ”தலைவர் சொன்னதை அனைவரும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவர்கள் அனைவரும் வீடுகளிலிருந்து தொலைக்காட்சிகளில் நேரலைகளில் தலைவர் விஜய் பேசுவதைப் பார்க்கலாம்.” என்றார்.
குழந்தைகளை அழைத்து வரவேண்டாமென்று கட்சித்தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையிலும், நேற்று மாலையிலிருந்து ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பலரும் குடும்பம் குடும்பமாக வந்து பொதுக்கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்து செல்ஃபி புகைப்படங்கள் எடுத்ததைப் பார்க்க முடிந்தது. கட்சியின் கரைத்துண்டு, மப்ளர், கட்சிக்கொடிகள் போன்றவற்றின் விற்பனையும் நடந்துவந்தது.