பட மூலாதாரம், UGC
“அன்று இரவு நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. பாலத்தின் அடியில் படுத்திருந்தோம். இரவு 12 மணி வரை பேசிவிட்டு தூங்கச் சென்றோம். சற்று நேரத்தில், ‘குழந்தையைக் காணவில்லை’ என, என் மகன் சத்தம் போட்டான். யாரோ கொசு வலையை அறுத்து குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டனர்” எனக் கூறுகிறார், சினையன்.
இவரது ஒன்றரை வயதுள்ள பேத்தியை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அருகில் உள்ள கடை ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சியில் இரவு மணி 12.50 என பதிவாகியிருந்ததாக பிபிசி தமிழிடம் சினையன் தெரிவித்தார்.
குழந்தையை 25 நாட்களுக்குப் பிறகு காவல்துறை மீட்டுள்ளது. “ஆனால், கடத்திய நபரைக் கண்டறிய சிசிடிவி துணை புரியவில்லை” எனக் கூறுகிறார், ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.எம்.தங்கவேல்.
கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் காவல்துறை கைது செய்தது எப்படி?
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாச்சலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதிக்கு ஊர் ஊராகச் சென்று துடைப்பம், ஊஞ்சல் உள்ளிட்டவற்றை விற்பது தொழிலாக உள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் சுமார் 2 வயதான பெண் குழந்தையும் உள்ளனர்.
‘கொசு வலையை அறுத்து குழந்தை கடத்தல்’
“பகல் முழுக்க துடைப்பங்களைக் கொண்டு போய் வியாபாரம் செய்வோம். இரவு நேரத்தில் கோணவாய்க்கால் அருகில் உள்ள பாலத்தின்கீழ் படுத்துத் தூங்குவது வழக்கம்” எனக் கூறுகிறார், வெங்டேஷின் தந்தை சினையன்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகில் சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கோணவாய்க்காலின் அருகில் உள்ள லட்சுமி நகரில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.
அக்டோபர் 16-ஆம் தேதி நடந்த சம்பவத்தை பிபிசி தமிழிடம் விவரித்த சினையன், “குழந்தையைக் கொசு கடிக்காமல் இருப்பதற்காக சிறிய வலையைப் போட்டு தூங்க வைத்திருந்தோம். நான் சற்று தள்ளி படுத்திருந்தேன். அனைவரும் அசந்து தூங்கிய நேரத்தில் வலையை அறுத்துவிட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டனர்.” என்கிறார்.
அப்போதே அருகில் உள்ள இடங்களில் எல்லாம் குழந்தையைத் தேடியுள்ளனர். குழந்தை கிடைக்காததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சித்தோடு காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். மேம்பாலத்துக்கு அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Erode Police
7 தனிப்படைகள்.. 200 சிசிடிவி காட்சிகள்..
குழந்தை கடத்தப்பட்டதாக சித்தோடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.எம்.தங்கவேல் தலைமையில் ஏழு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியைக் கடந்து சென்ற சுமார் 120-க்கும் மேற்பட்ட வாகனங்களின் பதிவு எண்கள் மற்றும் அங்குள்ள செல்போன் டவர்களில் பதிவான எண்கள் ஆகியவற்றை சேகரித்து தனிப்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
“இந்த வழக்கில் இருநூறுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். ஆனால், கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களைக் கண்டறிய முடியவில்லை,” எனக் கூறுகிறார் பி.எம்.தங்கவேல்.
“இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், அதே வாகனத்தில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், நள்ளிரவு நேரம் என்பதால் காட்சிகள் தெளிவாக கிடைக்கவில்லை. இதனால் வழக்கில் சற்று தாமதம் ஏற்பட்டது.” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
‘இதுவரை இப்படி நடந்ததில்லை’
காவல்துறையின் தேடுதல் பணிகள் ஒருபுறம் இருந்தாலும் குழந்தையின் பெற்றோரும் தங்களுக்குத் தெரிந்த இடங்களில் தேடி வந்துள்ளனர்.
“எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. சத்தியமங்கலம், கரூர், கோவை எனப் பல இடங்களில் தேடினோம். எங்களால் கண்டறிய முடியவில்லை,” எனக் கூறுகிறார் குழந்தையின் தந்தை வெங்கடேஷ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக சரியாக சோறு சாப்பிட முடியவில்லை. குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாது எனக் கடவுளை வேண்டினோம். காவல்துறை தரப்பிலும் தைரியம் கொடுத்தனர்.” என்கிறார்.
“எனக்குத் திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போது ஆறு மாதங்களுக்கு வியாபாரம் செய்வோம். அதன்பிறகு ஊருக்குப் போய்விடுவோம். இதுவரை இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை,” எனவும் அவர் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனத்தின் பதிவு எண்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தியும் குழந்தையைக் கடத்திச் சென்ற நபர் குறித்த தகவல்களைக் காவல்துறையால் கண்டறிய முடியவில்லை.
“ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வியாபாரம் செய்கிறோம். கோவை, ஈரோடு, திருவள்ளூர், சென்னை எனப் பல இடங்களில் தங்கியிருக்கிறோம். குழந்தை காணாமல் போன பிறகு சென்னைக்கு வந்து எங்களிடம் போலீஸார் விசாரித்தனர்,” எனக் கூறுகிறார் குழந்தையின் உறவினரான பாலகிருஷ்ணன்.
குழந்தையை மீட்டது எப்படி?
“கடந்த சில ஆண்டுகளாக குழந்தைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் கைதானவர்களின் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகத்தின் அடிப்படையில் ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது,” என்கிறார் பி.எம்.தங்கவேல்.
ரமேஷ் மீது கடந்த ஆண்டு சேலத்தில் குழந்தைக் கடத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இவர் மீது வேறொரு குற்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. “கடந்த ஆண்டு அவர் கைதாகும்போது இருந்த முகவரியில் தற்போது இல்லை. புதிய முகவரியில் வசித்து வந்துள்ளார்.” என்றும் தெரிவித்தார் பி.எம்.தங்கவேல்.
நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ரமேஷ், பொள்ளாச்சி நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக அக்டோபர் 15-ஆம் தேதி சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
“நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு நாமக்கல்லுக்குத் திரும்பிச் செல்லும்போது குழந்தையைத் திருடியிருக்கிறார்,” எனக் கூறும் தங்கவேல், “கைதான நபர் மனைவியுடன் இல்லை. நித்யா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இந்தக் குழந்தையைத் திருடிக் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்.”
“அதேநேரம், குழந்தையைக் கடத்துவதற்காக வெகுநாட்களாக திட்டம் போட்டுக் கடத்தவில்லை” எனக் கூறும் தங்கவேல், “நீதிமன்றத்துக்குப் போகும் வழியில் குழந்தை இருப்பதைப் பார்த்துள்ளார். அங்கிருந்து திரும்பி வரும்போது கடத்திச் சென்றுவிட்டார்” எனத் தெரிவித்தார்.
காவல்துறையின் நடைமுறைகளுக்குப் பிறகு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறும் அவர், “சித்தோடு காவல்நிலைய ஆய்வாளர் உள்பட தனிப்படையினர் சிறப்பான முறையில் செயல்பட்டனர். தொடர்ச்சியாக விசாரணை செய்ததால் ரமேஷ் மற்றும் நித்யா ஆகியோரை கைது செய்ய முடிந்தது.” என்கிறார்.
கைதான இருவரையும் ஈரோடு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
‘விழிப்புணர்வு இல்லை’ – குழந்தைகள் நல அலுவலர்
ஈரோடு மாவட்டம் முழுக்கவே துடைப்பம், நாற்காலிகள், ஊஞ்சல் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து பல்வேறு குழுக்கள் வருகின்றன.
“ஆந்திராவைச் சேர்ந்த சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈரோட்டில் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஆனால், குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை” எனக் கூறுகிறார் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி.
“இதுபோன்று சாலையோரத்தில் குழந்தை கடத்தப்படுவது ஈரோடு மாவட்டத்தில் சமீப நாட்களில் முதல் நிகழ்வாக உள்ளது,” எனவும் அவர் தெரிவித்தார்.
தொடரும் குழந்தைக் கடத்தல்
தமிழ்நாட்டில் குழந்தைக் கடத்தல் என்பது பரவலாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிறந்து பதினைந்து நாட்களே ஆன குழந்தையை பிகாரில் இருந்து சில ஆயிரம் ரூபாய்களுக்கு வாங்கி வந்து கோவையில் சுமார் 2 லட்ச ரூபாய்க்கு விற்றதாக, சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூலூரில் உள்ள அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்த பிகாரைச் சேர்ந்த மகேஷ்குமார், அஞ்சலி தேவி ஆகியோர் பிகாரில் இருந்து குழந்தைகளை வாங்கி வந்து விற்றதாகக் கூறி காவல்துறை கைது செய்தது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகளைக் காவல்துறை மீட்டுள்ளது. குழந்தையை வாங்கிய நபரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்துக்குப் பிறகு சிகிச்சையில் இருந்த அப்பெண்ணின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வைஜெயந்தி மாலா என்பவரிடம் நடைபெற்ற விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த கும்பலை காவல்துறை செய்தது. இந்த வழக்கில் நான்கு பெண்கள் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
பட மூலாதாரம், UGC
இதனை மேற்கோள் காட்டிப் பேசும் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, ” கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கண்ணகி நகரில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு மீட்கப்பட்டது. இதை ஒரு வணிகமாக சிலர் செய்து வருகின்றனர்.” எனக் கூறுகிறார்.
“விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் போதிய கண்காணிப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“பேருந்து நிலையம் உள்பட சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விளக்கப்படுகிறது” என்கிறார் உமா மகேஸ்வரி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு