• Sat. May 17th, 2025

24×7 Live News

Apdin News

ஈழத்தில் நடந்தது உண்மையில் இனப்படுகொலைதான்! – சிறீதரன் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)

Byadmin

May 16, 2025


“ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கின்றார்கள். உண்மையில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான். அதை இந்தச் சிங்களப் பேரினவாதிகள் மறைக்க முடியாது.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ். நெடுந்தீவில் நடைபெற்ற குமுதினிப் படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குமுதினிப் படகில், குருநகர் கடலில், கொக்கட்டிச்சோலையில், சத்துருக்கொண்டானில், வாகரையில், நவாலியில், நாகர்கோயிலில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை கொத்துக்கொத்தாக எங்களைக் கொன்றொழித்துவிட்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறவே இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், நாமல் ராஜபக்ஷவும், அலி சப்ரியும் தெரிவித்துள்ள கருத்துக்கள் உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கத்தக்க, சிங்கள வல்லாதிக்க வெளிப்பாட்டுக்குரியவை. அத்தகைய கருத்துகளை முன்வைத்தோர்க்கு எதிராக நான் எனது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன்.

இத்தகைய இனவாதம் கொப்பளிக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான சர்வதேச சாட்சியமாக, பிரம்டனில் இனப்படுகொலை நினைவுத்தூபியை நிறுவிய கனேடியப் பிரதமர் மாண்புமிகு மார்க் ஹனி, பிரம்டன் நகர மேயர் கெளரவ பற்றிக் பிரவுண் ஆகியோரோடு, இதற்குக் காரணமான அனைவருக்கும் எமது நன்றிகள்.

காலங்காலமாக எங்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் கறைபடிந்த வரலாற்றின் நாளான குமுதினிப் படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தலில், வலிசுமந்த நெடுந்தீவு மண்ணிலிருந்து மேற்படி இருவருக்கும் நன்றிகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன்.” – என்றார்.

The post ஈழத்தில் நடந்தது உண்மையில் இனப்படுகொலைதான்! – சிறீதரன் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin