10
’ஈழத்தில் வாழும் கண்ணகை வழிபாடும் பனுவல்களும் தனித்துவமானவை’ கோயம்புத்தூர் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்கவுரையில் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் உரை
அண்மையில் கோயம்புத்தூர் நா. மகாலிங்கம் தமிழாய்வு மையம் , குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து குமரகுரு கல்வி வளாகத்தில் ஏற்பாடு செய்த “சிலப்பதிகாரம்- கண்ணகி வழிபாடு- பண்பாட்டுப் பரவல்’ என்ற தலைப்பில் இடப்பெற்றது. தமிழாய்வு மைய இயக்குநர் முனைவர் இரா ஜெகதீசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தீபேஷ் சந்திரசேகரன் , மூத்த கவிஞர், கல்வியாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மேனாள்துணை வேந்தரும் சமூகவியல் தகைசால் பேராசிரியருமான பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடக்கி வைத்து ஆய்வுரை வழங்கினார் . ஈழத்தில் வாழும் கண்ணகை : அண்மைய கள ஆய்வு அவதானங்கள் என்ற தலைப்பில் அவரது ஆய்வுரை அமைந்தது.
‘சிலப்பதிகார பிறப்பிடத்தை விட ஈழத்தில் கணணகை அம்மன் வழி பாடு உயிர்ப்பானது . குறிப்பாக கிழக்கிலங்கை மட்டக்களப்பில் நிலவும் சடங்குகளும் பனுவல்களும் சிறப்பானவை கண்ணகை சார்ந்த ஈழத்தமிழ் பனுவல்கள் வழிபாட்டிற்கென்றே எழுந் தனவாக அமைந்துள்ளன. அவ்வகையான இலக்கியங்களில் கண்ணகி வழக்குரை, சிலம்பு கூறல், கோவலன் கதை என்பன முதன்மை பெறுகின்றன. மண்சார்ந்த பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கிக்கொள்ள வேண்டியமைக்கான தேவை ஈழத்துக் கண்ணகை வழிபாட்டில் ஏற்பட்டதெனலாம்.
மூன்று காண்டங்களைக் கொண்டதாகச் சிலப்பதிகாரம் அமைந்திருக்க, கண்ணகி வழக்குரை அவ்வாறமையாமல் பதினொரு காதைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. மதுரையை எரித்தபின் கண் ணகை சேர நாடடைந்தாள் என வஞ்சிக்காண்டம் கூறுகின்றது; ஈழத் தோடு அது கண்ணகையை இணைக்கவில்லை. அதனால் ஈழத்து மக்கள் கண்ணகை தங்களிடம் வந்தது போலவும் தங்களது நாட்டில் எழுந்தருளியது போலவுமான தங்களுக்கென்று ஓர் ஈழத்துக் காண்டத்தைப் படைத்துக்கொண்டார்கள்.
வைகாசிமாதம் என்றால் கண்ணகை ஆலயங்கள், ,குறிப்பாக மட்டக்களப்பு கோயில்களின் சடங்குகளின் ஓசையிலே ஊரெலாம் மூழ்கிவிடுகின்றன. வாழும் மரபாக ஈழத்து மக்கள் மனங்களில் கண்ணகையின் நிலைபேறு விளங்குகின்றது ’
பேராசிரியர் சண்முகலிங்கனின் உரையினைத்தொடர்ந்து புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் பேராசிரியர் பத்தவத்சல பாரதி, வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவுநர் முனைவர் பாவல் பாரதி ஆகியோரின் கருத்துரைகள் இடம் பெற்றன.
நிறைவு நிகழ்வாக கேரளா பாலக்காடு ஜனார்த்தனன் குழுவினரின் பாரம்பரிய கண்ணகை வழிபாடு சார்ந்த நாட்டுப்புற இசை நிகழ்வும் இடம்பெற்றது .
தமிழக , கேரள பல்கலைக்கழக பேராசிரியர்கள் , முனைவர் பட்ட ஆர்வாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கலந்துரையாடலைத்தொடர்ந்து பேராசிரியர் துரை முருகன் நன்றியுரை வழங்கினார் .