0
பாரதிதாசன் பரம்பரையினரின் மரபிலக்கியத்தில் இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர். வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர், ஈழத்தமிழ் ஆதரவாளர் ஈரோடு தமிழன்பன் இன்னுயிர் ஈந்தார்.
இளம் வயதில் இலக்கிய வாழ்க்கை:
ஈரோடு தமிழன்பன் பள்ளி மாணவனாக இருந்தபோதே ‘சுய சிந்தனை’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியிருக்கிறார். முதல் கவிதை நூல் 1968-ல் ‘கொடி காத்த குமரன்’ ‘வில்லுப்பாட்டு’. விடிவெள்ளி, ‘மலையமான்’ என பல புனைபெயர்களில் எழுதியபின் தமிழன்பன் என்னும் பெயர் நிலைத்தது.
பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் கொண்டவர். ‘நெஞ்சின் நிழல்கள்’ என்னும் நாவல் பாரதிதாசன் பரிந்துரையால் சென்னை பாரி நிலையத்திலிருந்து 1965-ல் வெளியானது.
ஆனால் தொடர்ந்து புனைவுகள் எழுதாமல் கவிஞராகவே நிலைகொண்டார். பாரதிதாசன் பரம்பரை கவிஞராக மரபுக்கவிதைகளை எழுதிவந்தவர் வானம்பாடி கவிதை இயக்கம்தொடர்புக்குப்பின் புதுக்கவிதையில் ஈடுபட்டார்.
ஈரோடு தமிழன்பன் ஜப்பானிய கவிதை வடிவங்களான ஹைக்கூ, சென்ரியூ ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஒரு வண்டி சென்ரியு (2001) என்னும் தொகுதி அந்த வடிவை தமிழில் அறிமுகம் செய்தது. லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வழியாக தமிழில் அறிமுகம் செய்தார்.
அரசியல் இலக்கியத்தில் :
ஈரோடு தமிழன்பன் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் பொதுவாகக் கொண்டிருக்கும் அரசியல், சமூகவியல் கருத்துக்களை யாப்பற்ற கவிதைவடிவில் நேரடியான மொழியில் முன்வைத்தவர். பாப்லோ நெரூதா, வால்ட் விட்மான் கவிதைகளின் நெகிழ்வான உரையாடல் பாணியை கைக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் மேடைகளில் இருந்து நேரடியாக பொதுவாசகர்களை நோக்கி பேசுபவை. பாரதிதாசன் பரம்பரைக்கும் வானம்பாடி இலக்கிய இயக்கத்துக்குமான தொடர்புச்சரடு என ஈரோடு தமிழன்பனை வரையறை செய்யலாம்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன் செப்டம்பர் 28, 1933இல் பிறந்த தமிழ்க் கவிஞர். மரணிக்கையில் அவருக்கு வயது 92. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தமிழன்பன் 22/11/25 இல் காலமானார். “வணக்கம் வள்ளுவ” என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1933 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழன்பன். அவரது இயற்பெயர் ஜெகதீசன். இவர் தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் சிறந்தவர். இவரின் கவிதைத் தொகுப்பான “வணக்கம் வள்ளுவ” நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் போன்ற பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார் ஈரோடு தமிழன்பன். ஹைக்கூ கவிதையை தமிழில் பிரபலப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஈரோடு தமிழன்பன். பாரதிதாசன் மரபில் வந்த இவர், வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் மற்றும் “அரிமா நோக்கு” என்ற ஆய்விதழின் ஆசிரியர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். திரைத்துறையில் இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் தமிழில் 60க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளையும், 6 பெரும் தொகுதிகளையும் வெளியிட்டவர் தமிழன்பன்.
ஈழத் தமிழர்களில் பற்று:
இனவெறிப் போரின் முடிவில்
இவர்கள் எல்லோருமே அங்காந்த
சாவுப் பள்ளத்தாக்கின் வாயில்
கொட்டிக் குவிக்கப்படலாம்.
ஆயின்
தனது மண்ணிலிருந்தும் கல்லிலிருந்தும்
மலைகள் காடுகளிலிருந்தும்
ஈழத்தாய்
இரத்தமும் சதையும் எலும்பும் நரம்பும்
சாகாச் சுதந்தர மூச்சும் கொண்டவர்களாய்
அவர்களை
மறுஉற்பத்தி செய்வாள்
இது சத்தியம் என கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘என் அருமை ஈழமே’ தொகுப்பில் எழுதியுள்ளார்.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா