• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

ஈழத் தமிழ் எழுத்தாளருக்கு ஆதரவாய் சிங்கள இலக்கிய அமைப்பின் கலந்துரையாடல்

Byadmin

Oct 6, 2024


ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள பயங்கரவாதி நாவல் குறித்து பிரபல சிங்கள பதிப்பகம் குட்ரீட்ஸ் இலக்கிய கலந்துரையாடல் ஒன்றை நேற்று (04.10.2024) நடாத்தியுள்ளது.

தற்போது கொழும்பு பண்டாரநாயக்கா மண்டபத்தில் இடம்பெற்று வரும் கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சியிலேயே இந்த இலக்கிய உரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களின் முன்னர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணையை முன்னெடுத்தது. இந்த நிலையில் சமகால அரசியல் சூழலில் எழுத்தில் ஏற்படுத்தப்படும் பதற்றமான நிலையில் பயங்கரவாதி நாவல் மற்றும் அதன எழுத்தாளர்மீது கரிசனை செலுத்தும் பொருட்டே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு மாணவனின் கதையை நல்லதொரு இலக்கியத்தை பற்றிய புரிதல் இல்லாமல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு முன்னெடுத்த விசாரணைக்காக சிங்கள மக்களாக, சிங்கள படைப்பாளிகளாக மன்னிப்புக் கோருவதாக சிங்கள எழுத்தாளர்களான புலஸ்பதி மற்றும் ஜிஜி. சரத் ஆனந்த ஆகியோர் உணர்ச்சிகரமாக உரையாற்றினர்.

இதேவேளை நாவலில் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலை கண்டு கதாநாயகன் மாறனுக்கு பெரும் அசௌகரியத்தை இராணுவத்தினர் ஏற்படுத்தும் காட்சி தொடர்பிலும் சிங்களப் படைப்பாளிகள் அதிருப்தி வெளியிட்டனர்.

ஈழம் என்பது இலங்கையின் மற்றொரு பெயர் என்றும் அது செழுமையான இலக்கியப் பெயர் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர். இதனை நாட்டின் தலைவர்கள் தெளிவுபடுத்தி ஈழம் என்ற பெயரை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

குட்ரீட்ஸ் சிங்களப் பதிப்பக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் மொழிபெயர்ப்பாளர் சிவகுருநாதன் சிங்கள எழுத்தாளர்களான ஜி.ஜி. சரத் ஆனந்தா, புலஸ்பதி மற்றும் சஞ்சுலா பீற்றர் ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.

By admin