3
உக்ரேனுக்கு வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் அமெரிக்கா நிறுத்துவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில் உக்ரேன் நாட்டு ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு வாக்குவாதத்தில் முடிந்தது.
இது உலகளவில் பேசுபொருளாகியது. அத்துடன், ஐரோப்பிய நாடுகள் பல உக்ரேன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், உக்ரேனுக்கு வழங்கப்படும் இராணுவ உதவியை நிறுத்திவைக்கச் சொல்லியுள்ளதாக Bloomberg மற்றும் Fox News செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரேனிய தலைவர்கள், ரஷ்யாவுடனான போரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளனர் என்ற நம்பிக்கை வரும் வரை டிரம்பின் முடிவில் மாற்றம் இருக்காது என்று இந்த செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இராணுவ உதவியை நிறுத்துவது நிரந்தரமான முடிவல்ல என்று அமெரிக்க அரசாங்க அதிகாரி தெரிவித்ததாகவும் Fox News குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதியுடனான வாக்குவாதத்தின் பின்னரும், அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாட்டுக்குத் தாம் தயார் என உக்ரேன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாட்டைச் செய்ய வேண்டும். தவறினால் அமெரிக்காவின் ஆதரவை இழக்கக்கூடும் என்று உக்ரேன் ஜனாதிபதியிடம் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.