0
ரஷ்யா – உக்ரேன் போர் தொடங்கி சுமார் நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், உக்ரேனுக்கு அதன் நட்பு நாடுகள் அனைத்துலகப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முன்வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, உக்ரேனின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க பிரதிநிதிகள், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டணியைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பாரிஸில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பில், போர்க்களத்தில் முன்னணியில் செயல்பட்டு வரும் உக்ரேனிய வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் சிறப்பு பயிற்சிகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருங்காலத்தில் ரஷ்யாவின் தாக்குதல்களிலிருந்து உக்ரேனை ஆகாயம், நிலம் மற்றும் கடல் வழிகளிலான பாதுகாப்பு அமைப்புகள் மூலம் காப்பாற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆதரவாக அனுப்பப்படவுள்ள படைகளின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer), பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டதாகவும், உக்ரேனுக்கான ஆதரவு மேலும் வலுப்பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.