• Wed. Dec 10th, 2025

24×7 Live News

Apdin News

உக்ரேன் தேர்தலை நடத்த டிரம்ப் அழைப்பு; தயார் என்கிறார் ஸெலென்ஸ்கி!

Byadmin

Dec 10, 2025


உக்ரேன் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் Politico தளத்துக்குத் தந்த பேட்டியில் டிரம்ப் அவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரேன் ஜனநாயக நாடுதானா என்றும் டிரம்ப் அதில் கேள்வியெழுப்பியுள்ளார்.

உக்ரேன் ஜனாதிபதி வொலோமிடிர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) குறித்து அவர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார். போரைச் சாதகமாகப் பயன்படுத்தி, உக்ரேன் தேர்தலை நடத்தாமல் இருப்பதாக அவர் குறைகூறினார்.

உக்ரேனில் 2022ஆம் ஆண்டிலிருந்து போர் நடக்கிறது. அதனால் இராணுவச் சட்டம் அங்கு நடப்புக்கு வந்திருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ரஷ்யா உக்ரேனைவிட பலம்வாய்ந்த நாடு; அதனுடன் தொடர்ந்து போரிடுவதால் உக்ரேனின் இழப்புகள் அதிகரித்துகொண்டே இருக்கின்றனர் என்றும் டிரம்ப் கூறினார். தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே உக்ரேன் பல இழப்புகளைச் சந்தித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு அவற்றின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தின. அந்த நாடுகளைப் பற்றியும் டிரம்ப் குறைகூறினார். ஐரோப்பிய நாடுகள் பேசிக்கொண்டே இருக்கின்றன; போரை நிறுத்த முயற்சி செய்யவில்லை என டிரம்ப் மேலும் கூறினார்.

தேர்தலை நடத்தத் தயார்: ஸெலென்ஸ்கி

இதேவேளை, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தேர்தல் நடத்தத் தயார் என்று கூறியிருக்கிறார்.

உக்ரேனில் தேர்தல் நடத்த வேண்டும் என்று டிரம்ப் கூறிய கருத்துக்கு அவர் பதிலளித்துள்ளார்.

உக்ரேனில் போர் நடக்கும்போது தேர்தல் நடத்த சட்டம் அனுமதிக்கவில்லை. அந்தச் சட்டத்தை மாற்றத் தயார் என்றும் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்திருக்கும் அமைதித் திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தை அவர் நாளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By admin