• Sat. Aug 30th, 2025

24×7 Live News

Apdin News

“உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை காகிதமாக பார்க்காமல்…” – அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை | ‘Ungaludan Stalin’ Petition Should Not be Viewed as Paper…: Udhayanidhi Advice to Officials

Byadmin

Aug 29, 2025


சென்னை: ”உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல், அவர்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும்” அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்துக்கு அனைத்து மாவட்டத்திலும் பொதுமக்களிடம் அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரைக்கும் 11.50 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக மகளிர் உரிமை தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் வந்துள்ளது.

மனுக்களையெல்லாம் காகிதமாக பார்க்காமல், பொதுமக்களுடைய வாழ்க்கையாக, தனிமனிதனுடைய வாழ்க்கையாக நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும். நம்முடைய அரசை நம்பி பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை, நாம் முடிந்த அளவுக்கு வெகு விரைவாக அதை தீர்த்து வைக்க வேண்டும்.

இந்த மனுக்களை நாம் வழக்கமான குறைதீர்ப்பு நாள் மனுக்களாகவோ, மற்ற சாதாரண மனுக்களாகவோ கருதக்கூடாது. மனுக்களுக்கு நீங்கள் அனைவரும் அதிக அளவு முக்கியத்துவம் அளித்து மக்களுடைய தேவைகளை தீர்க்க வேண்டும். குறிப்பாக தீர்வு காண இயலாத மனுக்களுக்கு அலுவலர்கள் எதற்காக தீர்வுகான இயலவில்லை என்ற காரணத்தினை முறையாக பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயர் பெ.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்… – முன்னதாக, திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட திருப்புவனம் பேரூராட்சி மற்றும் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் மனுக்கள் அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்தன.

இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற அதிகாரிகள், அந்த மனுக்களை மீட்டனர். இம்மனுக்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்திட்ட அசல் மனுக்களாக இருந்தன. இதுகுறித்து திருப்புவனம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி கூறும்போது, “ஆற்றில் மனுக்கள் மிதந்தது குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட 6 பட்டா மாறுதல் மனுக்களின் நகல்கள் இருந்தன. அந்த மனுக்கள் மீது ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுள்ளன. அத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்களும் இருந்தன.

மனுக்களை ஆற்றில் வீசியது தொடர்பாக, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாகப் பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும், இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோட்டாட்சியர் மனு அளித்துள்ளார். அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து, பல மணி நேரம் காத்திருந்து அளித்த மனுக்கள் ஆற்றில் மிதந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



By admin