• Thu. Sep 25th, 2025

24×7 Live News

Apdin News

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்து வருவாய் துறையினர் போராட்டம் | Revenue Department Workers Boycott Ungaludan Stalin Camp and Protest

Byadmin

Sep 25, 2025


சென்னை: தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இது குறித்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம்.பி.முருகையன் கூறும்போது, “‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஒரு வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் நடத்தச் சொல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றை அன்றே இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை முடிக்க நள்ளிரவு வரை ஆகிவிடுகிறது. அதற்குப் பின் கூகுள் மீட் மூலம் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்கள்.

வழக்கமான பணிகளுடன், கூடுதலாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணிகளையும் வருவாய்த் துறையினர் பார்க்க வேண்டியுள்ளதால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நில அளவர்கள், நில அளவை ஆய்வாளர்கள் என 42,000 பேர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சேவைகள் பொது மக்களுக்கு விரைவாக கிடைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், முகாம்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணியை வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் போதிய காலஅவகாசம் வழங்காமல் அவசர கதியில் பணிகளை முடிக்க அரசு நிர்ப்பந்தம் செய்வதை கைவிடக் கோரி, வருவாய்த் துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், வருவாய் கிராம ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் புறக்கணிப்பு போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கினர்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களுக்குச் செல்லாமல் மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால், முகாம்களில் மனுக்களைப் பெறுவது, பதிவுசெய்வது, கணினியில் உள்ளீடு செய்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனிடையே, மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு குடிமைப்பணி அலுவலர் சங்கம் உள்பட 13 சங்கங்களை உள்ளடக்கிய வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருவாய்த் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செப்.25 முதல் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்களில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அதேநேரம், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin