• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

உசிலம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் | The body of the head constable murdered near Usilampatti was buried

Byadmin

Mar 29, 2025


மதுரை: உசிலம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் உடல் இன்று (மார்ச் 29) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (36).உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளரின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். தற்செயல் விடுப்பில் இருந்தவர், மார்ச் 27-ம் தேதி தனது நண்பர் ராஜாராம் என்பவருடன் சேர்ந்து நாவார்பட்டியிலுள்ள அரசு மதுபானக் கடைக்குச் சென்றார். அங்கு, ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த தேனி, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 5 நபர்களுக்கும், தலைமைக் காவலர் முத்துக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த ரோந்து போலீஸார் இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதன்பின், முத்துக்குமாரும், அவரது நண்பரும் அருகிலுள்ள தோப்பில் மது அருந்தியபோது, அவ்வழியாகச் சென்ற அந்த 5 பேரும் முத்துக்குமாருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் கற்கள், இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர். இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முத்துக்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீஸார் முயன்றனர். அப்போது, உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், முத்துக்குமாரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீஸார், வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நிவாரணம் வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.

இரண்டாம் நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்களோடு வருவாய்த் துறையினர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை கைது செய்யவும், அரசின் நிவாரண நிதி கிடைக்கவும் உறுதி அளித்ததால் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் அவரது உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தலைமைக் காவலரின் உடலுக்கு விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் தலைமையில் காவல்துறையினர் அரசு மரியாதை செய்தனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.



By admin