பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் சட்டம் இயற்றும் மன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குடியரசுத் தலைவர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த பதில்கள் மாநில அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதற்கு முரணான கடந்த காலத் தீர்ப்புகள் என்ன ஆகும்?
தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிலுவையில் வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, இப்படி மசோதாக்களை நிறுத்தி வைப்பது ‘சட்டவிரோதம்’ எனக் கூறி, சட்டப்பிரிவு 142இன் கீழ் தமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. அதோடு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 200 மற்றும் 201இன் கீழ் ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து ‘ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா?’ எனக் கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ‘குறிப்பு’ (Presidential reference) ஒன்றை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பினார்.
இந்திய அரசமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட இந்தக் குறிப்பில், “மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?” என்பது உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் முன்வைத்திருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ்.சந்தூர்கர் அடங்கிய அமர்வு பத்து நாட்களுக்கு விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 20) நீதிபதிகள் அமர்வு பதிலளித்துள்ளது.
குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் முன்வைத்த 14 கேள்விகள் என்னென்ன என்பதையும் அதற்கு நீதிமன்றம் அளித்த பதில்கள் என்னென்ன என்பதையும் இனி பார்க்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி 1: பிரிவு 200இன் கீழ் ஒரு மசோதா ஒப்புதலுக்காக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசமைப்பு வாய்ப்புகள் யாவை??
உச்ச நீதிமன்றத்தின் பதில்: மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதல் அளிக்காமல் இருக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். ஒப்புதல் அளிக்காவிட்டால் பிரிவு 200இன் முதல் விதிப்படி, அதை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவது என்பது நான்காவது வாய்ப்பு அல்ல. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும்போது, கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை. ஆகவே, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், கண்டிப்பாக மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும். சட்டமன்றத்திற்கு அனுப்பாமல் ஆளுநர் அப்படியே வைத்திருக்கலாம் என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
கேள்வி 2: ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, அமைச்சர்கள் குழுவால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
பதில்: வழக்கமாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியின் பேரில்தான் தனது பணிகளைச் செயல்படுத்துகிறார். ஆனால், பிரிவு 200ஐ பொறுத்தவரை, ஆளுநர் தன் விருப்பப்படி செயல்படுவார். பிரிவு 200இன் இரண்டாவது விதியில் ‘அவரது கருத்துப்படி’ (in his opinion) என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், பிரிவு 200இன் கீழ் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது. ஆகவே ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கலாம்.
பட மூலாதாரம், TNDIPR
கேள்வி 3: இந்திய அரசமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அரசமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதா?
பதில்: இந்திய அரசமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அரசமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதல்ல. ஆளுநர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. இருந்தாலும் எவ்வித விளக்கமும் இன்றி நீண்ட காலத்திற்கு மசோதாக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்தால், 200வது பிரிவின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் தனது கடமையை நிறைவேற்ற வேண்டுமென, வரையறுக்கப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்க முடியும்.
கேள்வி 4: பிரிவு 200இன் கீழ் ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறு ஆய்வு செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 361 ஒரு முழுமையான தடையாக இருக்குமா?
பதில்: நீதிமன்றத்தின் ஆய்வுக்கு 361வது பிரிவு முழுமையாகத் தடை விதிக்கிறது. ஆனால், பிரிவு 200இன் கீழ் ஆளுநர் நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் தருணங்களில் நீதிமன்றம் குறைந்த அளவுக்கு குறுக்கிடுவதை, இந்தப் பிரிவைக் கொண்டு தடை செய்ய முடியாது. ஆளுநருக்குத் தனிப்பட்ட முறையில் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், ஆளுநரின் அலுவலகம் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி 5: அரசமைப்புச் சட்ட ரீதியாக காலக்கெடு ஏதும் இல்லாவிட்டாலும், பிரிவு 200இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநர் பயன்படுத்துவதற்காக நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்கவோ, பரிந்துரைக்கவோ முடியுமா?
கேள்வி 6: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 201இன் கீழ் குடியரசுத் தலைவர் விருப்புரிமையைப் பயன்படுத்துவது நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டதா?
கேள்வி 7: பிரிவு 201இன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகளின் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
கேள்விகள் 5,6,7க்கான பதில்கள்: அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 200 மற்றும் 201இல் இடம்பெற்றுள்ள அம்சங்கள், நமது நாடு போன்ற ஜனநாயமும் கூட்டாட்சியும் உள்ள ஒரு நாட்டில் சட்டம் இயற்றும்போது எழக்கூடிய பல்வேறு சூழல்களை மனதில் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் அதிகாரிகளுக்கு தேவைப்படக் கூடிய நெகிழ்வுத் தன்மையை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்டம் கால வரையறை எதையும் நிர்ணயிக்காத நிலையில், நீதிமன்றம் அதை நிர்ணயிப்பது சரியாக இருக்காது. ஆளுநருக்குச் சொல்லப்பட்டதைப் போலவே, 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது. இதே காரணத்திற்காக, பிரிவு 201இன் கீழ் செயல்பட குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது.
பட மூலாதாரம், TNDIPR
கேள்வி 8: ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது பிரிவு 143இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையும் கருத்தையும் பெற கடமைப்பட்டுள்ளாரா?
பதில்: ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ஒவ்வொரு முறையும், குடியரசுத் தலைவர் நீதிமன்றத்தின் அறிவுரையைக் கோரத் தேவையில்லை. ஏதாவது தெளிவில்லாமல் இருந்தாலோ, அறிவுரை தேவைப்பட்டாலோ குடியரசுத் தலைவர் நீதிமன்றத்தை நாடலாம்.
கேள்வி 9: கேள்விக்குரிய மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, பிரிவுகள் 200 மற்றும் 201இன் கீழ் ஆளுநரும் குடியரசுத் தலைவரும் எடுக்கும் முடிவுகள் நீதிமன்றங்களால் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுமா? அந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கத்தின் மீது தீர்ப்பு வழங்க அனுமதிக்கப்படுகிறதா?
பதில்: இல்லை. பிரிவுகள் 200 மற்றும் 201இன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் நீதிமன்றங்களால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட முடியாது. மசோதாக்கள் சட்டமான பின்பே, அவற்றை நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்த முடியும்.
கேள்வி 10: குடியரசுத் தலைவர்/ஆளுநர்களின் அரசமைப்பு அதிகாரங்களை, பிரிவு 142இன் கீழ் நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியுமா?
பதில்: முடியாது. குடியரசுத் தலைவர்/ஆளுநர்களின் அரசமைப்பு அதிகாரங்களை, பிரிவு 142இன் கீழ் நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. அரசமைப்புச் சட்டம், குறிப்பாக பிரிவு 142, மசோதாக்களுக்கு ‘ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் நிலையை’ (deemed assent) ஏற்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி 11: மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலின்றி சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?
பதில்: பிரிவு 200இன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் சட்டமாக முடியாது. பிரிவு 200இன் கீழ் சட்டமியற்றுவதில் ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை வேறொரு அரசமைப்பு அதிகாரத்தால் பூர்த்தி செய்ய முடியாது.
கேள்வி 12: இந்திய அரசமைப்பின் பிரிவு 145(3)ன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் உள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசமைப்பின் விளக்கம் தொடர்பான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதைப் பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?
பதில்: இது இந்த விவகாரத்திற்குப் பொருத்தமில்லாத கேள்வி என்பதால் பதிலளிக்கப்படவில்லை.
கேள்வி 13: அரசமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவர்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142இன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா? முரணான உத்தரவுகளைப் பிறப்பித்தல்/ஆணைகளைப் பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?
பதில்: பத்தாவது கேள்விக்கான பதிலில், இதற்கான பதில் அடங்கியுள்ளது.
கேள்வி 14: பிரிவு 131இன் கீழ் வழக்கு தொடர்வதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசமைப்புச் சட்டம் தடை செய்கிறதா?
பதில்: பொருத்தமில்லாத கேள்வி என்பதால் பதிலளிக்கப்படவில்லை.

“உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகள், மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ ஒட்டுமொத்தமாக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இருந்தபோதும் இதில் மாநில அரசுகளுக்குச் சாதகமான அம்சங்களும் இருக்கின்றன” என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு.
“குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்பது ஏற்கெனவே தீர்ப்புகளில் சொல்லப்பட்ட கருத்துதான். 3 மாதங்களுக்குள் மசோதா குறித்து முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்பதைத்தான் இப்போது நிராகரித்துள்ளார்கள்.
ஆனால், அதே நேரத்தில் முடிவெடுப்பதற்கான காலத்தை நீட்டித்துக் கொண்டே போக முடியாது என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், அரசமைப்புப் பிரிவு 200, 201இன் கீழ் முடிவெடுக்கும்போது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள்தான் இருக்கின்றன. முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தும் வாய்ப்பு இல்லை என்பதைக் கூறியிருக்கிறார்கள்” என்கிறார் கே. சந்துரு.
குடியரசுத் தலைவருக்கோ, ஆளுநருக்கோ முடிவெடுக்க ஒட்டுமொத்தமாக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்று கூறினாலும், தனித்தனி வழக்குகளில் இந்தக் கோரிக்கைகளோடு நீதிமன்றங்களை அணுக முடியும் என்கிறார் கே. சந்துரு.
ஆனால், இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில் பார்த்தால் அப்போதும் மசோதாக்களை ஆளுநர்கள் முடக்க முடியும் என்கிறார் அரசமைப்புச் சட்ட விவகாரங்கள் குறித்து நீண்ட காலமாக எழுதி வரும் மூத்த பத்திரிகையாளர் கே. வெங்கடரமணன்.

“இவை மாநில அரசுகளுக்குப் பெரும் பின்னடைவைத் தரும் கருத்துகள். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினாலும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றங்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை. அதற்குப் பிறகும் அந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிடலாம். அதன் மூலம் அந்தச் சட்டத்தை நிறைவேறாமல் செய்துவிடலாம்” எனச் சுட்டிக்காட்டுகிறார் கே. வெங்கடரமணன்.
ஆனாலும் உச்ச நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ள கருத்துகளில் வேறு சில சாதகமான அம்சங்கள் இருப்பதாகக் கூறுகிறார் நீதிபதி கே. சந்துரு.
“இப்போது உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் கருத்துகளின்படி பார்த்தால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செய்தது முழுக்கவும் தவறு என்றாகிறது. ஒன்று, ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும். நான்காவது ஒரு வாய்ப்பாக, மசோதாவை அப்படியே போட்டு வைத்திருக்க முடியாது என்பதை இந்த முறை சொல்லியிருக்கிறார்கள். மேலும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்,” என்கிறார் கே. சந்துரு.
உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் வெளிவந்த பிறகு பலரும் கேட்கும் கேள்வி, இதற்கு முன்பாக தமிழக அரசின் மசோதாக்கள் குறித்து ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை இன்றைய கருத்துகள் கட்டுப்படுத்துமா என்பதுதான்.
அதற்கு, “கட்டுப்படுத்தாது. ஏனென்றால் அது தீர்ப்பு. இது அறிவுரை. ஆனால், எதிர்காலத்தில் வழங்கப்படக் கூடிய தீர்ப்புகள் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் கே. சந்துரு.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு