சென்னை: “ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொதுக் கருத்தாடலில் வலதுசாரிக் கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர், அவ்வளவு ஏன் குடியரசுத் தலைவர் உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும், அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல. எந்தத் தனிநபரும், அது எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை, பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி சிவா கருத்து: திமுக மாநிலங்களவை குழு தலைவரும், துணை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா வெளியிட்ட அறிக்கையில், “அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின்படி நிர்வாகம், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142-ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்திய ஒன்றியத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முத்தரசன் கண்டனம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின்படி முடிவு எடுக்காமல், அவற்றை கிடப்பில் போட்டு, மக்கள் நலன்களை ஆளுநர் புறக்கணித்து வந்தார். ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர், சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கால எல்லையில்லாமல் கிடப்பில் போட்டது சட்ட விரோதம் என மிகத் தெளிவாக கூறியுள்ளது.
தமிழக ஆளுநரின் அதிகார அத்துமீறல் குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரில் விரிவான புகார் மனு வழங்கப்பட்டது. ஆர்.என் ரவி, ஆளுநர் பொறுப்புக்கு தகுதியற்றவர் என்பதற்கான ஆதாரங்களும், தரவுகளும் வழங்கப்பட்டன. இதன் மீது குடியரசுத் தலைவர் போதுமான அக்கறை காட்டி, நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குடியரசுத் துணைத் தலைவர், தனக்கு வசதியாக மறந்து விட்டார். குடியரசுத் தலைவர் அமைதி காத்து வந்ததால், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் முறையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றிய ஆரம்ப நிலையில் இருந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கும் வரை மசோதாக்களின் உயிர் நிலை தொடர்ந்து நீடித்து வரும் என்பதை குடியரசுத் துணைத் தலைவர் நன்கறிவார்.
எனினும், அவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயக சக்திகள் மீதான “அணு ஏவுகணையாக” பிரயோகித்துள்ளது என கூறியிருப்பது சரியல்ல. ஆளுநரின் சட்டவிரோத செயல்களுக்கு, குடியரசுத் தலைவர் மவுன சாட்சியாக இருந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் குடியரசுத் தலைவரின் அரசியல் சாசன கடமைகளை நினைவூட்டி, அவைகளை நிறைவேற்ற கால வரம்பு நிர்ணயித்திருப்பது அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அரணாகவே அமைந்திருக்கிறது என்பதை குடியரசுத் துணைத் தலைவர் பிடிவாதமாக நிராகரித்து விட்டு, உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை விமர்சனம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை, “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துதான் இன்றைக்கு 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று மாநில நிதியில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசு பெற்றிருக்கிறது. இதை குடியரசுத் துணைத் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் அவர் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
குடியரசுத் தலைவரை நீதிமன்றங்கள் வழிநடத்துவதையோ, உத்தரவு பிறப்பிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக இருப்பதாகவும் ஜெகதீப் தன்கர் கூறியிருக்கிறார். இன்று ஆளும் மத்திய பாஜக அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உணர்ந்து தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரிவு 142-ஐ பயன்படுத்தியுள்ளனர்.
ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு பின்னால், மத்திய பாஜக அரசு இருக்கிறது. அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவு 142-ன் மூலமாகத் தான் தமிழக அரசு தொடுத்த வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படிதான் குடியரசுத் தலைவர் உட்பட அனைவரும் செயல்பட முடியும். இதில் எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழகமே இன்று வன்மையாகக் கண்டிக்கின்றது, எச்சரிக்கிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்தும் அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கபில் சிபல் கேள்வி: மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமான கபில் சிபல், “ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் அமைச்சர்கள் குழுவின் ‘உதவி மற்றும் ஆலோசனை’யின் பேரில் செயல்படுகிறார்கள் என்பதை குடியரசு துணைத் தலைவர் அறிந்திருக்க வேண்டும். ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது உண்மையில் சட்டமன்றத்தின் மேலாதிக்கத்தின் மீதான தலையீடு. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை எந்தச் சூழலில் பிறப்பித்தது என்பதை குடியரசு துணைத் தலைவர் தெரிந்திருக்க வேண்டும்.
தனது ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களுக்கு ஆளுநர் 2 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியுமா? நாடாளுமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றினால், குடியரசுத் தலைவர் அதை காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா? அது கையெழுத்திடப்படாவிட்டாலும், அதைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லையா?” என்றார். கேள்வி எழுப்பினார் கபில் சிபல். ஜெகதீன் தன்கர் பேசியது என்ன? – வாசிக்க > குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஜெகதீப் தன்கர் கருத்து