பட மூலாதாரம், TNDIPR
இந்தியாவில் சட்டம் இயற்றும் மன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
குடியரசுத் தலைவர் இது தொடர்பாக எழுப்பிய 14 கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகள் குறித்து, மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார்.
குடியரசுத் தலைவருடைய கேள்விகளின் பின்னணி என்ன?
கேள்வி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் காலக்கெடு நிர்ணயிப்பது உள்பட குடியரசுத் தலைவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு (Presidential Reference) உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்த உங்கள் பார்வை என்ன?
பதில்: குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் கால அவகாசத்தைக் குறிப்பிட முடியாது என குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் இப்போது உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ஆளுநர் கால வரையறையன்றி, ஒரு மசோதாவை வைத்திருந்தால் அதன் மீது “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்” முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். ஆனால், “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்” என்று குறிப்பிட்டிருப்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

குடியரசுத் தலைவரின் கேள்விகள், ஏதோ பெரிய அளவில் சட்டத்தை முடிவு செய்வதற்காகக் கேட்கப்படவில்லை. முந்தைய வழக்கில் ஆளுநரின் செயல்பாடுகள் உச்ச நீதிமன்றத்தில் அம்பலமாகி விட்டதால், அதைச் சரிக்கட்டவே இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 143இன் கீழ் அளிக்கப்படும் உச்ச நீதிமன்றத்தின் பதில்கள், அறிவுரைத் தன்மை கொண்ட கருத்துகள் மட்டும்தான். அது கட்டுப்படுத்தும் தன்மையுடைய முன்னுதாரணம் அல்ல.
வாதி, பிரதிவாதி ஆகிய இருவரும் தங்களுடைய தரப்பை எடுத்துச் சொல்லி, அதன் அடிப்படையில் தீர்ப்பளித்தால்தான் அது கட்டுப்படுத்தும் தன்மையுடைய முன்னுதாரணம் ஆகும். அல்லது 141வது பிரிவின் கீழ் ஒரு விஷயத்தை அறிவித்தால், அது கட்டுப்படுத்தக் கூடிய முன்னுதாராணமாக அமையும்.
ஆகவே, என்னைப் பொறுத்தவரை ஒரு தாமதத்தை ஏற்படுத்துவதற்காகவோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பால் பின்னடைவு ஏற்படவில்லை என்று காட்டுவதற்காகவோ இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கலாம்.
தற்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகளை, குடியரசுத் தலைவர் அப்படியே ஏற்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. பிரிவு 143இன் கீழ் அளிக்கப்படும் பதில்கள் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவையல்ல.
பட மூலாதாரம், Getty Images
மசோதாவை காலவரையின்றி ஆளுநர் வைத்திருக்க முடியுமா?
கேள்வி: குடியரசுத் தலைவரை இந்தக் கருத்துகள் கட்டுப்படுத்தாது என்றாலும், கீழமை நீதிமன்றங்களையும் இந்தக் கருத்தை அளித்த உச்ச நீதிமன்ற அமர்வைவிடக் குறைந்த நீதிபதிகளைக் கொண்ட அமர்வையும் இந்தக் கருத்துகள் கட்டுப்படுத்துமா? அல்லது இதன் அடிப்படையில் தீர்ப்புகளை அளிக்க அழுத்தமாக அமையுமா?
பதில்: எப்போது இந்தக் கருத்துகள் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை அல்ல என்று ஆகிவிட்டதோ அப்போதே அவை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தாது. இதுபோல, சில விஷயங்களுக்கு இதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
முதன் முதலில் டெல்லி சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளைக் கேட்டார். இதுபோன்ற கருத்துகள் கட்டுப்படுத்தாது என்றாலும், இவை அழுத்தம் கொடுக்கும் அம்சமாக இருக்கும்.
கேள்வி: குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே, இனி ஆளுநர்கள் ஒரு மசோதாவை எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் முடிவெடுக்காமல் வைத்திருக்க முடியுமா?
பதில்: காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஆளுநர் முன்பாக உள்ள வாய்ப்புகள் என்ன என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
அதாவது, மசோதாவை ஏற்கலாம் அல்லது மீண்டும் பரிசீலிக்கும்படி சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பலாம் அல்லது மத்திய சட்டங்களோடு முரண்பட்டால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.
இதில் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஏற்க வேண்டும். இதையெல்லாம் எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கருத்து அதைத்தான் தெளிவுபடுத்துகிறது.
பட மூலாதாரம், ANI
ஆளுநர் காலத்தை நீட்டித்துக் கொண்டே போனால்…?
கேள்வி: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தால், அந்த மசோதா அங்கேயே முடங்கிவிடவோ அல்லது நிராகரிக்கப்படவோ வாய்ப்பிருக்கிறது அல்லவா?
பதில்: ஒரு மசோதா மிக அரிதான தருணங்களில்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். சில விஷயங்கள் மத்திய அரசின் பட்டியலிலும் இருக்கும்; மாநில அரசின் பட்டியலிலும் இருக்கும். நீட் தேர்வு சம்பந்தப்பட்ட மசோதா இதற்கு ஓர் உதாரணம்.
இதுபோன்ற மசோதாக்களில் ஆளுநர்களால் கருத்து சொல்ல முடியாது. ஆகவேதான் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். இந்த மாதிரியான சூழலில், கால வரையறையை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
அது அரசமைப்புச் சட்ட ரீதியாகப் பெரிய தவறு அல்ல. வெறுமனே, ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் (As early as possible)’ என்றால், அது ஒரு நாளாகவும் இருக்கலாம், 50 நாட்களாகவும் இருக்கலாம். அதனால், கால வரையறை நிர்ணயிக்கலாம்.
கேள்வி: குடியரசுத் தலைவருக்கோ, ஆளுநருக்கோ மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஒட்டுமொத்தமாக காலவரையறை நிர்ணயிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்த மாதிரியான சூழலில், ஒரு தனி மசோதா மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலத்தை நீட்டித்துக்கொண்டே போனால், அதற்காக நீதிமன்றத்தை அணுக முடியுமா?
பதில்: கண்டிப்பாக முடியும். முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது என்பது கடமையைச் செய்வதிலிருந்து தவறுவதாகும். ஆளுநரின் பணியை வேறு யாரும் செய்ய முடியாது. ஆனால், பணியை செய்யுமாறு சொல்ல முடியும்.
இதில் இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. அதாவது ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் சட்டப் பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர முடியாது என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற விவகாரங்களில் வழக்குத் தொடர முடியும். ஏனென்றால், அது ஆளுநர் அலுவலகத்தின் மீது தொடரப்படும் வழக்கு.
பட மூலாதாரம், TNDIPR
ஆளுநருக்கு விருப்புரிமை இருக்கிறதா?
கேள்வி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு விருப்புரிமை இருக்கிறதா? அரசமைப்புச் சட்ட விவாதங்களின்படி பார்த்தால், அவருக்கு விருப்புரிமை இல்லை என்கிறார்கள் அரசமைப்புச் சட்ட நிபுணர்கள்…
பதில்: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு விருப்புரிமை இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் மூன்றில் ஒன்றைத் தேர்வு செய்வதில்தான் விருப்புரிமை இருக்கிறது.
குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரை, 1971ஆம் ஆண்டின் அரசமைப்பு திருத்தச் சட்டத்தின்படி அரசமைப்புத் திருத்தச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். சாதாரண சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பி, நாடாளுமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். ஆகவே, இதில் விருப்புரிமை என்ற கேள்விக்கே இடமில்லை.
கேள்வி: உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளை மாநில அரசுக்குப் பின்னடைவு என்ற வகையில் சிலர் பார்க்கிறார்கள். சிலர், இது மாநில அரசுக்குச் சாதகமானது எனச் சொல்கிறார்கள். எப்படிப் புரிந்து கொள்வது?
பதில்: நான் இரு விதமாகவும் பார்க்கவில்லை. மசோதாக்களை சும்மாவே வைத்துக் கொண்டிருப்பது இனி நடக்காது. இப்போது நடந்துகொண்டிருப்பது இனி நடக்காது.

கேள்வி: தற்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகளால், ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்புகளில் தாக்கம் இருக்குமா?
பதில்: அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இனி ஒரு மசோதா வரும்போதுதான் மீண்டும் அந்தப் பிரச்சனை எழும்.
கேள்வி: ஏப்ரல் மாதம் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், ஒரு மசோதாவை இவ்வளவு நாட்கள் கால தாமதம் செய்யக்கூடாது எனக் கூறி, நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. இப்போதைய ஐந்து நீதிபதிகள் அமர்வு, அதற்கு முரணான கருத்துகளைத் தெரிவித்துள்ளது…
பதில்: முந்தைய தீர்ப்புக்கு மாறான கருத்துகளைச் சொல்ல முடியும். ஆனால், இதுபோன்ற கருத்துகள் கட்டுப்படுத்துமா, இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
முந்தைய தீர்ப்பில், ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்துவிட்டு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை ஆளுநர் செய்யாவிட்டால் நாங்கள் செய்வோம் என்றார்கள்.
நீதிபதிகள் தங்களுடைய கருத்தில், “142வது பிரிவின்படி உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அந்த அதிகாரம் இந்த விஷயத்திற்குப் பொருந்தாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் (deemed assent) என்பதும் கிடையாது என்று கூறியுள்ளார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு