பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன. அத்தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம்.
‘அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்து சேமித்தது, நான் வேலை பார்த்து சேமித்தது எல்லாவற்றையும் எங்கள் சிகிச்சைக்காக செலவழித்துவிட்டோம். உடல் பருமனைக் குறைக்க பெரிதாக செலவு செய்யவில்லை. அதற்கு எங்களுக்கு வசதியும் இல்லை. முதுகு வலி சிகிச்சைக்கே பெரும் செலவாகிவிட்டது. சேமிப்பு கரைந்து கடனாகிவிட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீட்டிலிருந்த மிச்சம் மீதிப் பொருட்களும் போனபோது வாழ்வில் நம்பிக்கையே போய்விட்டது.”
தங்கையுடன் தற்கொலைக்கு முயன்று, தற்போது தங்கையை இழந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இப்ராகிம் பாதுஷா (வயது 46) கூறிய வார்த்தைகள் இவை.
காஞ்சிபுரம் துரைப்பாக்கம் செகரட்டரியேட் காலனியைச் சேர்ந்தவர் இப்ராகிம் பாதுஷா (வயது 46); இவரது தங்கை சம்சத் பேகம் (வயது 33). இவர்கள் இருவரும் கோவை நகரின் மையப் பகுதியிலுள்ள ராம்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்துள்ளனர்.
கடந்த 14 ஆம் தேதியன்று வெளியில் சென்ற இப்ராகிம், மறுநாள் வரை திரும்பி வரவில்லை. அறைக்குள் இருந்த சம்சத் பேகமும் வெளியே வரவில்லை.
‘சம்பாதித்தது அத்தனையும் சிகிச்சைக்காக கரைந்தது’
ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது, சம்சத் பேகம் இறந்து கிடந்தார். அவருக்கு அருகில் இருந்த கடிதத்தில், உடல் பருமனால் கஷ்டப்படுவதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தன்னையும், தன் அண்ணனையும் ஒன்றாக அடக்கம் செய்ய வேண்டுமென்றும் எழுதியிருந்தார்.
அதன்பின், கோவை ரயில் சந்திப்பு அருகில் இப்ராகிமை போலீசார் பிடித்தபோது, அவரும் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்து, அவரை போலீசார், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காட்டூர் காவல் ஆய்வாளர் தெளலத் நிஷா, ”இப்ராகிம் வெளிநாட்டில் ஓட்டுநராக இருந்துள்ளார். இவர்களின் தாய், தந்தை இறந்தபின், அண்ணன், தங்கை ஒன்றாக இருந்துள்ளனர். உடல் பருமனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சம்சத் பேகம் கீழே விழுந்ததில் நடமாடவே முடியாமல் போக, அவரையும் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு இப்ராகிம் தள்ளப்பட்டுள்ளார். அதனால் வேலைக்கும் போக முடியவில்லை. சேர்த்து வைத்த பணமெல்லாம் தீர்ந்தபின், உறவினர், நண்பர் யாருடைய ஆதரவும் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.” என்றார்.
சம்சத் பேகம் உடலைப் பெறுவதற்கு யாருமே வராத நிலையில், ஆதரவற்றவர்களை அடக்கம் செய்யும் ‘ஜீவசாந்தி’ என்ற அமைப்பினர், அவரின் உடலைப் பெற்று கோவையிலேயே அடக்கம் செய்துள்ளனர்.
அந்த அமைப்பினர்தான், தற்போது இப்ராகிமுக்கும் சில உதவிகளைச் செய்து வருகின்றனர். அவர் நலமடைந்தபின், அவருக்கு ஏதாவது ஒருவிதத்தில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர காவல்துறை மற்றும் சிலரின் உதவியுடன் முயற்சி செய்து வருவதாக இவ்வமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இப்ராகிம் பாதுஷா, தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தங்கையின் மரணத்தால் மிகவும் வேதனையுற்ற நிலையில் இருந்த இப்ராகிம், பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
” அப்பாவின் ஊர் திருச்சி. அம்மாவின் ஊர் பெரம்பூர். சென்னையில் செட்டில் ஆகிவிட்டோம். சிறு வயதில் நாங்கள் இருவருமே சரியான எடையில்தான் இருந்தோம். அப்பாவும் சரியான எடையுடன்தான் இருந்தார். நாங்கள் பிறந்தபின், அம்மா சற்று உடல் பருமனாகி விட்டார் என்பார்கள். கடந்த 2017ஆம் ஆண்டில் அப்பாவும், அடுத்த ஆண்டில் அம்மாவும் இறந்துவிட்டார்கள். அதன்பின் எங்களுடைய உடல் எடை பிரச்னை அதிகரித்துவிட்டது. இளம் வயதிலேயே இருவருக்கும் உடல் பருமன் ஒரு பிரச்னையாகிவிட்டது. அதன் காரணமாகவே, நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.” என்றார் இப்ராகிம் பாதுஷா.
பத்தாம் வகுப்பு படித்துள்ள இப்ராகிம் பாதுஷா, செளதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார். அங்கு சென்ற இரு ஆண்டுகளில் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் துவங்கியதாக கூறுகிறார். ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல்வது கஷ்டமாக இருந்ததுடன், தங்கையைக் கவனிப்பதற்காக இங்கு திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்.
”என் தங்கை பி.காம் (சிஎஸ்) முடித்துவிட்டு, எம்பிஏ படித்துள்ளார். கல்லுாரிப் படிப்பை முடித்த சில நாட்களிலேயே அவருக்கு உடல் எடை அதிகரிக்கத் துவங்கிவிட்டது. அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அவருக்கு முதுகுவலி பிரச்னை கடுமையாக இருந்தது. அதற்கு நிறைய மருந்து சாப்பிட்டார். ஒரு கட்டத்தில் என்னுடைய துணையின்றி அவரால் நடக்கமுடியவில்லை.” என்றார் இப்ராகிம்.
பட மூலாதாரம், Getty Images
‘ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் உடல் பருமன்’
தற்போது 178 கிலோ எடை இருப்பதாகக் கூறும் இப்ராகிம், எழுந்து நடமாடும் நிலைக்கு முன்னேறியுள்ளார். அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக அங்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்தார்.
”இருந்த சேமிப்பு அனைத்தும் கரைந்து விட்டது. கடனும் நிறைய வாங்கி விட்டோம். இருந்த பொருட்கள், மொபைல் போன்களையும் விற்று விட்டோம். கடைசியில் எதுவுமே இல்லை என்ற நிலையில்தான் இந்த தற்கொலை முடிவை எடுத்தோம். கோவையில் எனக்கு சிலர் உதவுவதாகக் கூறியிருக்கிறார்கள். சிகிச்சை முடிந்தபின்பே, என்ன செய்வதென்று முடிவெடுக்க வேண்டும்.” என்றார் இப்ராகிம் பாதுஷா.
இப்ராகிம், சம்சத் போலவே, இந்தியாவில் உடல் பருமன் காரணமாக, உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவன (NIMHANS) ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நரம்பியல் விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, இந்தியாவில் உடல் பருமன் 40.3 சதவீதம் இருப்பதாகவும் ஆண்களை விட (38.67%) பெண்களிடையே உடல் பருமன் அதிகமாக உள்ளது (41.88%) என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 36.08 சதவீதமாக உள்ள உடல் பருமன் பிரச்னை, நகர்ப்புறங்களில் 44.17 சதவீதம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களை விட பெண்களுக்கும், கிராமப்புறங்களை விட நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்கும் உடல் பருமன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறியுள்ள நிலையில், மேல்தட்டு மக்களை விட, நடுத்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களே உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார், உடல் பருமனுக்கான அறுவை சிகிச்சை நிபுணரான சரவணகுமார்.
இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை
பட மூலாதாரம், Saravanakumar
கோவையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர், ”நடுத்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்கள், வாழ்வாதாரத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் இடையிலான நெருக்கடிகளால் உடலைக் கவனிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். காலை முதல் இரவு வரை, சரியான நேரத்தில் உணவு அருந்துவது, நடைப்பயிற்சி என எதையும் கடைப்பிடிக்க முடியாமல் உடல் பருமன் பாதிப்புகளுக்கு அதிகளவில் ஆளாகி வருகின்றனர்.” என்கிறார் மருத்துவர் சரவணகுமார்.
இந்தியாவில் மரபியல் ரீதியாக உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களை விட, நகரமயமாக்கல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்த பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகம் என்று கூறும் மருத்துவர் சரவணகுமார், இதனால்தான் நீரிழிவு, உடல் பருமன் அகிய பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்.
உடல் பருமன் குறித்த சிகிச்சைக்கான பயிற்சிகளை அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதற்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணகுமார், சென்னை மருத்துவக் கல்லுாரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர்களுக்கு, இது தொடர்பாக பயிற்சி அளித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
‘உளவியல் ரீதியான ஆறுதல் தேவை’
பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன், ”உடல் பருமன் எந்த காரணத்தால் வருகிறது என்பதைப் பொறுத்தே, ஒருவருக்கு உளவியல்ரீதியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மரபியல்ரீதியாக இல்லாமல் ஹார்மோன் குறைபாடு போன்றவற்றால் உடல் பருமன் வரும்போது மன அழுத்தமும் அதிகமாகிறது. சிலருக்கு மன அழுத்தத்தாலும் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புள்ளது. நடக்க கஷ்டப்படுவதும், வேலை செய்ய முடியாமல் தவிப்பதும் மன அழுத்தத்தைக் கூட்டும்.” என்றார்.
திருமணம் தடைபடுவதுடன், நீரழிவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்புகள் போன்றவை வருவதால் உடல் பருமன் ஏற்படுவோருக்கு உளவியல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என கூறும் மருத்துவர் வெங்கடேஸ்வரன், ”உடல்ரீதியான கேலி, கிண்டல்களும் அவர்களுக்கு இத்தகைய மனநிலையை ஏற்படுத்தும்” என்கிறார்.
” இப்ராகிம், சம்சத் தற்கொலை முயற்சிக்கு, அவர்களின் உடல் பருமன் குறித்த கவலையுடன் தங்களுக்கென யாருமில்லை என்ற மன விரக்தியும் கூட பிரதானக் காரணமாக இருந்திருக்கலாம். தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டுள்ள இப்ராகிமுக்கு தற்போதைய முதல் தேவை, உளவியல் ரீதியான ஆறுதலும், எதிர்கால வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நம்பிக்கை வார்த்தைகளும்தான் ” என்கிறார் வெங்கடேஸ்வரன்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு