• Wed. Jan 1st, 2025

24×7 Live News

Apdin News

‘உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம்’ – ராமதாஸ் சந்திப்புக்குப் பின் அன்புமணி பேட்டி | PMK internal issues need not be discussed in public: Anbumani says after meet with Ramadoss

Byadmin

Dec 29, 2024


சென்னை: “உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரித்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் நேற்று (டிச.28) பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களிடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கட்சியில் இருக்க இஷ்டம் இல்லாதவர்கள் கிளம்பலாம்; இது நான் தொடங்கிய கட்சி’ என ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து, தனிக் கட்சி அலுவலகம் தொடங்குவதாக அன்புமணி அறிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளானது.

இந்நிலையில், விழுப்புரத்தில் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.29) நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. சந்திப்பின் போது ஜிகே மணி உள்ளிட்ட பாமகவின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

ராமதாஸுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தோம். சித்திரை முழுநிலவு மாநாட்டைப் பற்றி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, விவசாய மாநாட்டுக்குப் பின்னர் அடுத்தடுத்து பாமக முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் என்னென்ன என்பன குறித்து ஆலோசனை செய்தோம்.

வருகின்ற ஆண்டு எங்களுக்கு மிக முக்கியமான ஆண்டு. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஐயாவுடன் ஆலோசித்தோம்.

பாமக ஒரு ஜனநாயகக் கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவின் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பிரச்சினையைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்வோம். ஐயா எங்களுக்கு என்றும் ஐயா தான்” என்றார்.

முகுந்தன் பரசுராமன் நியமனம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் அன்புமணி கடந்து சென்றது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.. மேலும் வாசிக்க >> ராமதாஸ் – அன்புமணி இடையே பகிரங்க மோதல் வெடித்தது ஏன்? – முழு பின்னணி



By admin