படக்குறிப்பு, இறந்தவரின் குழந்தைகள் தந்தையின் உடலுடன் அலைந்துகொண்டிருந்தனர் கட்டுரை தகவல்
உத்தரப் பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவுதன்வாவில் ஒருவர் இறந்த பிறகு, அவரது மூன்று குழந்தைகள் இறுதிச் சடங்கு செய்வதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
சிறார்கள் தங்கள் தந்தையின் உடலுடன் இங்கும் அங்கும் அலைந்தனர், ஆனால் அருகிலுள்ளவர்களோ அல்லது உறவினர்களோ அவர்களுக்கு உதவி செய்யவில்லை.
இறுதியாக, ஒரு வார்டு உறுப்பினரின் உதவியுடன் அவர்கள் தங்கள் தந்தையின் இறுதிச் சடங்கைச் செய்ய முடிந்தது.
மறுபுறம், மாவட்ட நிர்வாகம், இந்தச் சம்பவம் பற்றிய தகவல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் அந்த சிறார்களுக்கு உரிய நேரத்தில் உதவ முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
இப்போது சிறார்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உள்ளூர் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
“நாங்கள் வண்டியுடன் கதவருகே நின்றுகொண்டிருந்தோம். நிறைய பேர் வந்தார்கள், ஆனால் யாரும் உதவவில்லை,” என உயிரிழந்தவரின் 14 வயது மூத்த மகன் கூறினார்.
குழந்தைகள் தந்தையின் உடலை கல்லறைக்கும் எடுத்துச் சென்றனர், ஆனால் உயிரிழந்தவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், உடலைப் புதைக்க முடியாது என்று மறுக்கப்பட்டது.
நான்கு புறங்களிலும் ஏமாற்றமடைந்து, குழந்தைகள் உடலை வண்டியில் ஏற்றி அலைந்து கொண்டிருந்தபோது, உள்ளூர்காரர்களான ரஷீத் குரைஷி மற்றும் அவரது உறவினர் வாரிஸ் குரைஷி முன்வந்து உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தனர்.
என்ன நடந்தது?
பட மூலாதாரம், Azeem Mirza
படக்குறிப்பு, உள்ளூர்காரரான ரஷீத் குரைஷி (நடுவில்) மறைந்தவரின் இறுதிச் சடங்கைச் செய்தார்
40 வயதான லவ்குமார், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நவுதன்வாவில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார்.
அவரது இரு மகன்களும் ஒரு மகளும் தங்கள் பாட்டியுடன் தனியாக வசித்து வந்தனர். லவ்குமாரின் உடல்நிலை பல நாட்களாக மோசமாக இருந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, கடந்த வாரம் அவர் இறந்தார்.
லவ்குமாரின் மறைவுக்குப் பிறகு, இறுதிச் சடங்கு செய்ய அவரது குழந்தைகள் அக்கம்பக்கத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களிடம் உதவி கேட்டனர்.
லவ்குமாரின் மூத்த மகன் கூறுகையில், “எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் உடலை மானவாகாட்டுக்கு எடுத்துச் சென்றோம், ஆனால் அங்கிருந்து எங்களை முஸ்லிம்கள் அடக்கம் செய்யும் இடத்துக்கு அனுப்பினார்கள், ஆனால் அங்கும் மறுக்கப்பட்டது. நாங்கள் சக்வா சாவடி அருகே நின்று மணிக்கணக்கில் உதவி கேட்டோம், ஆனால் யாரும் வரவில்லை.” என்றார்.
இறுதியாக அவ்வழியாக சென்றவர்களிடம் பணம் கேட்டு உடலை எரிக்க தேவையான விறகுகளை சேகரிக்க முயன்றனர். இதற்கிடையில், பல மணிநேரம் உடல் வண்டியில் வைக்கப்பட்டிருந்ததால் அதன் நிலை மோசமடைந்தது.
அதன் பின்னரே, உள்ளூர் மக்கள் வார்டு உறுப்பினர் ரஷீத் குரைஷிக்கு தகவல் தெரிவித்தனர்.
“சப்பவா சந்திப்பில் ஒரு உடல் கிடப்பதாக திங்கட்கிழமை மாலை ஏழு மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தைகள் அழுது கொண்டிருப்பதாகவும், ஆனால் யாரும் உதவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நான் அங்கு சென்றபோது, உடல் வீங்கி, துர்நாற்றம் வீசுவதைக் கண்டேன். மக்கள் அருகில் கூட செல்ல விரும்பவில்லை. குடும்பத்தினர் இரண்டு நாட்களாக எங்கும் உதவி கிடைக்கவில்லை என்று கூறினர்,” என ரஷீத் பிபிசியிடம் கூறினார்,
குரைஷி உடனடியாக விறகு ஏற்பாடு செய்து, இரவு 12 மணி வரை சுடுகாட்டில் நின்று, இந்து மரபுப்படி மறைந்தவரின் இறுதிச் சடங்கைச் செய்தார். வாரிஸ் குரைஷி மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் உதவினர்.
படக்குறிப்பு, சம்பவம் பற்றிய தகவல் கிடைத்த பிறகு, சார் ஆட்சியர் உயிரிழந்தவரின் குழந்தைகளைச் சந்தித்தார்
“மனிதநேயம் மதத்துக்கு மேலானது. குழந்தைகள் தங்கள் தந்தையின் உடலுடன் தனியாக நின்று அழும்போது மௌனமாக இருப்பது பாவமாகும், ” என்று ரஷீத் குரைஷி கூறினார்,
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்த பிறகு, நவுதன்வாவின் மாவட்ட சார் ஆட்சியர் நவீன் குமார் தனது குழுவுடன் அங்கு சென்றார்.
குழந்தைகளுக்கு உடனடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது மற்றும் ரேஷனிலிருந்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, என அவர் தெரிவித்தார்.
“குழந்தைகள் ஆதரவற்றவர்களாகிவிட்டனர். அவர்கள் பாலர் சேவைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்கு திறக்கப்பட்டவுடன், ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 5,000 ரூபாய் உதவி வழங்கப்படும். இதுவரை அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை, ஆனால் நிர்வாகம் அவர்களின் கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளது,” என்று நவீன் குமார் பிபிசியிடம் கூறினார்.
இறந்த லவ்குமார் நகர பஞ்சாயத்துக்கு வெளியே உள்ள பகுதியில் தனியாக வசித்து வந்தார் என சார் ஆட்சியர் தெளிவுபடுத்தினார்.
சம்பவம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதால் உதவி செய்ய முடியவில்லை என்று சார் ஆட்சியர் கூறினார்.
இறந்தவரின் உடல்நிலை மோசமாக இருந்தது, ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை இறந்திருக்கலாம் என்றும், குடும்பத்தினருக்கு அவரது மறைவு பற்றி பின்னர் தான் தெரியவந்தது என்றும் சார் ஆட்சியர் கூறினார்.
(கூடுதல் தகவல் சேகரிப்பு உள்ளூர் செய்தியாளார் அசீம் மிர்ஸா)