பட மூலாதாரம், Varsha Singh
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உத்தராகண்டின் ஒரு பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு புதிய முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஜான்சர் பவார் பழங்குடிப் பகுதிக்குட்பட்ட கிராமங்களில், கிராமத்தின் வளம் குறையக்கூடாது என்ற நோக்கத்தில் நகைகளைப் பயன்படுத்த குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் பெண்கள் தொடர்பான இந்த முடிவு, அவர்கள் இல்லாதபோது எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தங்கத்தின் விலை வானளவு உயர்ந்த நிலையில், கந்தட் மற்றும் இந்த்ரோலி கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் அவசர கூட்டத்தைக் கூட்டினர்.
அச்சமயத்தில் திருமணத்துக்கான சுபநாட்கள் தொடங்கியிருந்த நிலையில், கிராமத்தில் இரண்டு குடும்பங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மக்களால் வாங்க முடியாத அளவு தங்கம் விலை உயர்ந்து வருவது தொடர்பாக ஆண்கள் கவலைப்பட்டனர். அதேபோல், நகை வாங்குவது குறித்து குடும்பங்களுக்குள் வாக்குவாதங்களும் வெடிக்கத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து, இரு கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவரான “சயனாஜி” தலைமையில் நடந்த கூட்டத்தில், மூக்குத்தி, காதணிகள் மற்றும் தாலி என பெண்கள் திருமணங்களின் போது மூன்று நகைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று ஆண்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.
கந்தட் மற்றும் இந்த்ரோலி கிராமங்கள், உத்தராகண்டில் உள்ள ஜான்சர் பவார் எனப்படும் பழங்குடிப் பகுதியின் ஓர் அங்கமாகும்.
டேராடூன் மாவட்டத்தின் சக்ரதா தாலுகாவில் டான்ஸ் (Tons) மற்றும் யமுனா நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, அதன் தனித்துவமான கலாசாரம், சமூக சூழல், சமூக உணர்வு மற்றும் அதன் பண்டிகைகளின் சிறப்புக்காக பிரசித்திபெற்றது.
‘ஒரு விவசாயியால் எப்படி தங்கம் வாங்க முடியும்?’
பட மூலாதாரம், Varsha Singh
கந்தட் மற்றும் இந்த்ரோலி உட்பட நான்கு கிராமங்களை உள்ளடக்கியது கந்தட் கிராம சபை. இங்கு 65க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதன் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 650.
“இந்தக் கூட்டத்தில் சுமார் 60–70 ஆண்கள் பங்கேற்றனர். கிராமத்தில் வேலைவாய்ப்புள்ளவர்களால் நகை வாங்க முடியும். ஆனால் விவசாயிகளுக்கு அது சாத்தியமில்லை. அதனால் நகை அணிவதை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. பின்னர் திருமணம் போன்ற விழாக்களில் மூக்குத்தி, காதணி மற்றும் கழுத்தில் ஒரு நகை என பெண்கள் மூன்று ஆபரணங்கள் மட்டுமே அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது”என்று தலைவர் சயானா அர்ஜுன் சிங் ராவத் கூறுகிறார்.
பாரம்பரியமாகவே, கிராமக் கூட்டங்களில் பெண்கள் சேர்க்கப்படுவதில்லை.
“கூட்டங்களுக்கு ஆண்கள் மட்டுமே வருகிறார்கள். முடிவுகளையும் அவர்களே எடுக்கிறார்கள். இந்த முடிவை யாராவது ஏற்கவில்லை என்றால், ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்,” என்று சயானா ராவத் விளக்குகிறார்.
கந்தட் கிராம ஆண்கள் இந்த முடிவை வரவேற்பது போல் தெரிகிறது. பெண்களும் இந்த முடிவின் காரணத்தை புரிந்துகொள்கிறார்கள். இருந்தாலும், அவர்களின் சம்மதத்தின் கீழ் ஒருவித ஏமாற்றம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
‘நகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது’
இந்த ஏமாற்றம், கிராமத் தலைவர் சயானா ஜியின் மனைவி அனாரி தேவியின் குரலிலும் வெளிப்படுகிறது.
“அனைத்து கிராம மக்களின் முடிவையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். நகைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை நினைத்து வருத்தமாயிருந்தது. ஆனால் அதுவும் நல்லது தான். பணம் இல்லாதவர்கள் எப்படி நகை வாங்குவார்கள்?” என்று அவர் கூறுகிறார்.
கடந்த காலத்தை நினைவுகூர்ந்து பேசியபோது, நகைகளின் சத்தம் அனாரி தேவியின் குரலில் ஒலிக்கிறது. “என் மாமியாரிடம் நிறைய நகைகள் இருந்தன. அவை எல்லாம் அவரது பிள்ளைகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இப்போது நகைகள் வாங்குவது கடினம். இவ்வளவு நகைகள் இல்லாத பெண்கள் இருக்கிறார்கள். அதனால் எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்பது கிராமத்தாரின் எண்ணம்”என்று அவர் பகிர்ந்து கொள்கிறார்.
நகைகள் பெண்களின் சொத்து என அனாரி தேவி கருதுகிறார்.
ஏதாவது பிரச்னை வந்தால், ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அல்லது வீடு கட்ட வேண்டியிருந்தால், நகைகள் உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
கிராம பஞ்சாயத்தின் இந்த முடிவால் முதலில் பாதிக்கப்பட்டது கிராமத் தலைவரின் குடும்பத்தினர் தான்.
சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 29-30வாக்கில், சயானா அர்ஜுன் சிங் ராவத்தின் இரண்டு மகன்களின் திருமணங்கள் நடைபெற்றன.
சக்ரதா பகுதியின் பங்கர் கிராமத்திலிருந்து கந்தட்டின் மருமகளாக வந்த ரேகா சவுகான், அவரது நகைகளைப் பார்த்தபடி, “நகை அழகை கூட்டுகிறது. சில பெண்கள் நகைப் பயன்பாடு குறித்து கட்டுப்பாடு விதிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறார்கள். ஒரு வகையில் இந்த முடிவு சரியானது தான், அனைவரின் பொருளாதார நிலையும் ஒரே மாதிரியாக இருக்காது” என்று கூறுகிறார்.
‘சமத்துவத்திற்காக பாடுபடுதல்’
பட மூலாதாரம், Varsha Singh
2000 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் ரூ.5,000 க்கும் குறைவாக இருந்தது.
2025ம் ஆண்டில், அதே அளவு தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்துவரும் நிலையில், விவசாயிகளின் வருமானம் அதனை எட்டாத அளவுக்கு பின்தங்கியது.
மதிய உணவுக்குப் பிறகு, அமிர்தா ராவத் வேலை நிமித்தமாக வயல்களை நோக்கிச் செல்வதைக் காண முடிந்தது.
“விவசாயத்தில் பெரிய வருமானம் கிடைக்காது. வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமே இப்போது நகை வாங்க முடியும். வெளியூரிலுள்ள பெண்கள் எல்லாரும் அழகாக இருப்பார்கள். எங்கள் கிராமத்தில் ஏழைப் பெண்கள் வெயிலில் உழைத்துக் களைப்பாக இருப்பார்கள். இப்போது எல்லோரும் மூன்று நகைகள் மட்டுமே அணிய முடியும். இதனால் சமத்துவமான சூழல் நிலவும். மற்ற கிராமங்களும் இதைப் பின்பற்றும்,” என்று அவர் கூறுகிறார்.
மேம்பட்ட விவசாய முறைகளுக்குப் பெயர் பெற்ற பகுதியாகவும் ஜான்சர் பவார் அறியப்படுகிறது.
“நாங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, சமைத்துவிட்டு வயல்களுக்கு வருகிறோம். மதியம் 12 மணிக்கு வீட்டுக்கு திரும்பி உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் வயல்களுக்கு வர வேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஓய்வெடுக்க நேரமே கிடையாது” என இங்குள்ள விவசாயி கவிதா ராவத் கூறுகிறார்.
மேலும், “திருமணங்கள், பண்டிகைகள் வந்தால், கிராமத்து பெண்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடுவோம். பாடல்கள் பாடுவோம். நகைகள் அணிவோம். அது தேவைப்படும் நேரங்களில் உதவியாகவும் இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்களும் இந்த விஷயம் குறித்து அமைதி காக்க விரும்புகிறார்கள்.
அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண் விவசாயிகள், தங்க நகைகள் கிராமத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்து வருவதாகக் கருதுகின்றனர்.

‘ஒரு பவுன் தங்கம் ஒரு வருட வருமானத்திற்குச் சமம்’
கந்தட் கிராமத்தைச் சேர்ந்த ஜீத் சிங் ராவத் ஒரு விவசாயி. அவரது சகோதரர்களில் ஒருவர் டேராடூனில் வங்கி மேலாளராக உள்ளார். மற்றொருவர் அரசு பணியில் உள்ளார்.
“ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் ரூ.1.25 லட்சம். அதே அளவு தான் எங்களின் ஆண்டு வருமானமும். அப்படி இருக்கையில் எங்கிருந்து எங்களால் தங்கம் வாங்க முடியும்? குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் திருமணங்களில் கூடும்போது, நகரத்தில் வாழும் எங்கள் உறவினர்கள் செயின், பெரிய காதணிகள் போன்றவற்றை அணிவார்கள், சிலர் பெரிய மூக்குத்தியும் அணிவார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ” இரவும் பகலும் வயல்களில் உழைத்து விவசாயம் செய்யும் எங்களால் அந்த நகைகளை வாங்க முடியாது. அதனால்தான், எந்தப் பெண்ணும் தன்னிடம் குறைவான நகைகள் இருப்பதாகவும், வேறொருவரிடம் அதிகமாக நகைகள் இருப்பதாகவும் உணரக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சக்ரதா உட்பட ஜான்சர் பவார் பகுதியில் உள்ள கிராமங்களில் பெண்களின் வாழ்வாதாரம் குறித்து பணியாற்றிய சமூக ஆர்வலர் தீபா கௌஷலம் இதுகுறித்துப் பேசுகையில், “சமூக ஊடகங்கள் உட்பட பல இடங்களிலும், பெண்கள் மீது இது திணிக்கப்பட்டது, அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, மிக விரைவாக எதிர்வினையாற்றப்படுகிறது என நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறார்.
“ஜான்சர் பவார் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சமூக அமைப்புடைய பகுதி. இங்கு எப்போதும் சமூக முடிவுகள் அச்சமூக மக்களாலே எடுக்கப்பட்டுள்ளன. நகைகள் தொடர்பாக வீடுகளுக்குள் தகராறு இருந்திருக்கலாம். அதனால் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். அதன் உணர்வுபூர்வமான அம்சத்தை கலாசார புரிதலுடன் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் மற்றொருவரைவிட தாழ்வாக உணரும்போது, அந்த உணர்வை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அதை உணர மட்டுமே முடியும்” என்று தீபா பகிர்ந்துகொண்டார்.
‘நகைகளுக்காக நிலத்தை விற்க மாட்டேன்’
பட மூலாதாரம், Varsha Singh
“தங்கம் என்பது ஒரு வகையான சொத்து. தேவைப்படும் நேரத்தில் ஆண்களும் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அது பெண்களின் இருப்போடு மட்டும் இணைந்தது அல்ல. பெண்களின் உண்மையான செல்வம் அவர்களின் தன்னம்பிக்கை, கல்வி, சமூகத்தில் அவர்களின் இடம் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்றவை தான். தங்கம் அணிவதல்ல,” என்று தீபா கௌசலம் கூறுகிறார்.
இந்திரௌலி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் சவுகான் என்பவர் கண்டத் கிராம சபையின் கிராமத் தலைவராக உள்ளார். அவர் கிராமத்தின் கூட்டு முடிவால் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக அக்கிராமத்தின் பெண்களுக்கு அரவிந்த் நன்றி கூறுகிறார்.
“கிராமத்தில் சமத்துவத்தை உருவாக்கும் முயற்சி இது. எங்கள் ஊரில், குடும்பத்தின் முதல் மகனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. யாராவது ரூ. 10-20 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கினால், மற்ற குடும்பங்களும் நகை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்காக பலர் நிலத்தை விற்கவும், அடமானம் வைக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டது. நகைக்காக நிலத்தை விற்க வேண்டியிருந்தால் அதில் என்ன பயன்?” என்று அவர் கூறுகிறார்.
கந்தட் கிராம சபைக்குட்பட்ட மற்ற இரண்டு கிராமங்களான பங்கியாசெட் மற்றும் சந்தோலி ஆகியவையும் குறைவாக நகை அணிவது தொடர்பான இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக அரவிந்த் கூறுகிறார்.
அதேபோல், அப்பகுதியில் உள்ள மற்ற கிராமங்களும் கூட்டங்களை நடத்தி, இந்த முடிவை தங்களது கிராமங்களிலும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.
பழங்குடிப் பெண்களின் உரிமைகள்
பட மூலாதாரம், Varsha Singh
இந்த முடிவை நடைமுறைப்படுத்திய கிராமங்களில் ஒன்று, சக்ரதா தாலுகாவுக்கு உட்பட்ட கர்சி கிராமம்.
“கந்தட் கிராமம் நகைகளை குறைவாக அணிய வேண்டும் என முடிவு செய்த பிறகு, எங்கள் கிராமமும் இதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. வெளியில் இருந்து வரும் மக்கள், பெண்கள் நகைகளைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்தம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். எங்கள் பகுதியில் பெண்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். நாங்கள் ஒரு பழங்குடி சமூகம், பெண்களின் முடிவுகளை மதிப்பது எங்களின் வழக்கம். ஒரு பெண் ஒரு பிரச்னைக்காக தனது தலைப்பாகையைக் கழற்றினால், அந்த நேரத்தில் அவர் என்ன சொன்னாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் சவுகான் கூறுகிறார்.
தனது வாதத்தை வலுப்படுத்த, சுரேஷ் பாரம்பரிய நடைமுறை ஒன்றை உதாரணமாகக் கூறுகிறார்.
“எங்கள் பகுதியில், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடிக்கவில்லையெனில் அவர் அந்த நபரைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கவும், வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளவும் அவருக்கு உரிமை உண்டு. திருமணத்துக்குப் பிறகு கணவரைப் பிடிக்கவில்லை என்றால், அப்பெண் அவரைப் விட்டு பிரியவும் முழு சுதந்திரம் உள்ளது. வேறு எந்த சமூகம் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறது?” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
இளைஞர்களுக்கான கொள்கைகளை உருவாக்குவதற்கு முன்பு அவர்களை உள்ளடக்குவது போல, பெண்கள் தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதில் பெண்களையும் உள்ளடக்க வேண்டும் என்று தீபா குறிப்பிடுகிறார்.
மதுவை ஏன் தடை செய்யக்கூடாது?
பட மூலாதாரம், Varsha Singh
நகைகள் தொடர்பான இந்த முடிவு ஜான்சர் பவார் பகுதியில் உள்ள பல கிராமங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் ஏற்படும் சண்டைகள் மற்றும் செலவுகளின் காரணமாக அதிகமாக நகை அணிவது தடைசெய்யப்பட்டால், மது ஏன் தடைசெய்யப்படக்கூடாது என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
கந்தட் கிராமத்தைச் சேர்ந்த டிகாம் சிங், போதைப்பொருட்களால் அப்பகுதி இளைஞர்கள் சீரழிந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். இதுகுறித்துப் பேசிய அவர், “மதுக்கடைகளில் கிடைக்கும் போலி மதுபானங்களைத் தடை செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம். இருப்பினும், அத்தகைய முடிவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை” என்றார்.
அதே நேரத்தில், கார்சி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடிப்பதும் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு