பட மூலாதாரம், Asif Ali
-
- எழுதியவர், ஆசிஃப் அலி
- பதவி, பிபிசி இந்திக்காக
-
உத்தராகண்டின் டேராடூனில் படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த 24 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், வட இந்தியாவில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாகுபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, டேராடூனின் சேலாகுய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைப் பகுதியில் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ இறுதியாண்டு பயின்று வந்த ஏஞ்சல் சக்மா என்ற மாணவர், கையில் அணியும் காப்பு மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
திரிபுராவின் அகர்தலா அருகிலுள்ள நந்த்நகரைச் சேர்ந்த ஏஞ்சல், இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து 16 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த நிலையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்தபோது அவரது தம்பி மைக்கேலும் அங்கேயே இருந்துள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆறாவது நபர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் டேராடூன் காவல்துறை தெரிவித்துள்ளது.
தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய உதவுபவர்களுக்கு உள்ளூர் காவல்துறை 25,000 ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது.
இச்சம்பவம் நடந்ததில் இருந்து டேராடூன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வடகிழக்கு மாநில மாணவர்களிடையே அச்சம் நிலவுகிறது.
பட மூலாதாரம், Asif Ali
ஏஞ்சலின் சகோதரர் கூறியது என்ன ?
உயிரிழந்த மாணவர் ஏஞ்சல் சக்மாவின் தம்பி மைக்கேல் சக்மாவுக்கு 21 வயது ஆகிறது. அவர் டேராடூனில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
டிசம்பர் 9 அன்று நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த மைக்கேல் பிபிசி இந்தி செய்தியிடம் பேசுகையில், அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் தனது அண்ணன் ஏஞ்சல் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுடன் செலாகுய் சந்தைக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.
மைக்கேலின் கூற்றுப்படி, சந்தையில் ஏஞ்சல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் குழு ஒன்று கிண்டல் செய்யத் தொடங்கியது.
“அவர்கள் அவரை ‘சிக்கன்’, ‘சிங்கி’, ‘சைனீஸ்’ என்று அழைத்ததோடு சாதி ரீதியான வசவுகளையும் பயன்படுத்தினர். அவர் ஆரம்பத்தில் அவர்களைப் புறக்கணித்தார். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபோது, அந்த இளைஞர்கள் அவருக்கு நேராக வந்து அவரைத் திட்டத் தொடங்கினர்” என்று மைக்கேல் கூறினார்.
தான் தட்டிக் கேட்டபோது, அந்த இளைஞர்கள் உடனே தன் மீது தாக்குதல் நடத்தியதாக மைக்கேல் கூறுகிறார்.
தன்னைக் காப்பாற்ற ஏஞ்சல் முன்வந்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள் அவரையும் அடிக்கத் தொடங்கியதாக மைக்கேல் தெரிவித்தார்.
“அவரைத் தரையில் தள்ளி கால்களால் மிதித்தனர். அந்த நேரத்தில், ஒரு இளைஞன் அவரது தலையில் பிரேஸ்ட்லெட்டால் தாக்கினார், இதனால் அவர் மயக்கமடைந்தார். சிறிது நேரம் கழித்து சுயநினைவு திரும்பியபோது, அவரது தலையில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்த இளைஞர் குழு ஏஞ்சலை அடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது” என்று மைக்கேல் கூறுகிறார்.
பட மூலாதாரம், Asif Ali
ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது சகோதரரின் நிலையைப் பார்த்து தான் மிகவும் பயந்துவிட்டதாக மைக்கேல் கூறினார்.
“இரவு 7 மணியளவில், எப்படியோ ஒரு ஆம்புலன்ஸ் மூலம் ஏஞ்சலை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்றார்
மேலும் டிசம்பர் 9 முதல் டிசம்பர் 26 வரை மருத்துவமனையில் ஏஞ்சலுடன் தொடர்ந்து இருந்ததாகவும், ஆனால் சகோதரரை காப்பாற்ற முடியவில்லை என்றும் மைக்கேல் குறிப்பிட்டார்.
“ஒரு இந்தியரை ‘சீனர்’ என்று அழைப்பது சர்ச்சைக்குரியது. நாங்களும் இந்தியர்கள் தான், நாங்களும் நம் நாட்டை சமமாக நேசிக்கிறோம்” என்றார் மைக்கேல்.
டிசம்பர் 28, ஞாயிற்றுக்கிழமையன்று ஏஞ்சலின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
ஏஞ்சல் மற்றும் மைக்கேலின் தந்தை தருண் பிரசாத் சக்மா, மணிப்பூரில் பிஎஸ்எஃப் (BSF) இன் 50-வது பட்டாலியனில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். தன் பிள்ளைக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று அவர் கூறுகிறார்.
“மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா என அனைத்து இடங்களிலிருந்தும் குழந்தைகள் படிக்கச் செல்கிறார்கள். டெல்லி, மும்பை, பெங்களூரு என சிலர் வேலைக்கும், சிலர் படிக்கவும் செல்கிறார்கள். எனவே அவர்களை மோசமாக நடத்தக்கூடாது”என ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்களும் இந்தியர்கள் தான். யாருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது. நாங்கள் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Asif Ali
காவல்துறை நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்
ஏஞ்சல் சக்மாவின் படுகொலையைத் தொடர்ந்து, காவல்துறையின் செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 9 ஆம் தேதி நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏஞ்சல் சக்மாவின் சகோதரர் மைக்கேல் சக்மா அளித்த புகாரின் அடிப்படையில், டிசம்பர் 12 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் மீது மதுபோதையில் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மைக்கேல் சக்மா காவல்துறையிடம் அளித்த புகாரில், ஏஞ்சல் சக்மா கத்தி மற்றும் கம்பியால் தாக்கப்பட்டதையும், சண்டையின் போது சாதி ரீதியான வசவுகள் பயன்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், முதல் தகவல் அறிக்கையில் ‘கொலை முயற்சி’ தொடர்பான பிரிவு சேர்க்கப்படவில்லை.
ஐந்து பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 14 அன்று காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொலை மிரட்டல் பிரிவு சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால், டிசம்பர் 12 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்தப் பிரிவு இடம் பெறவில்லை.
ஏஞ்சல் சக்மாவின் தம்பி மைக்கேல் சக்மா பிபிசி இந்தி செய்தியிடம் கூறுகையில், “டிசம்பர் 10 அன்று புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றேன், ஆனால் அங்கிருந்த போலீசார் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, போலீசார் என் மீது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, நான் ஏன் சாதியத்தை பரப்புகிறேன் என்றும் கேட்டனர்,” என்றார்.
தன் சகோதரர் கத்தியால் தாக்கப்பட்ட போதிலும், டிசம்பர் 12 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ‘கொலை முயற்சி’ பிரிவு சேர்க்கப்படவில்லை என்று மைக்கேல் வருத்தத்துடன் தெரிவித்தார்.
காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்த விவகாரத்தில் தேசிய பழங்குடியினர் ஆணையமும் தலையிட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் கேட்டு அதிகாரிகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அகில இந்திய சக்மா மாணவர்கள் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் பிபுல் சக்மா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆணையம் எடுத்துள்ளது.
பட மூலாதாரம், Asif Ali
போலீசார் என்ன சொன்னார்கள்?
டேராடூன் காவல் கண்காணிப்பாளர் (நகரம்) பிரமோத் குமார் இது குறித்துக் கூறுகையில், “டிசம்பர் 9 அன்று, திரிபுராவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஏதோ ஒரு வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது, அங்கிருந்த சில இளைஞர்களுடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அது பின்னர் மோதலாக மாறியது”என்றார்.
“விசாரணையின் போது, தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய மற்றொரு நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார், அவர் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர். அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 25,000 ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்” என்று பிரமோத் குமார் தெரிவித்தார்.
ஏஞ்சல் சக்மா உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கொலைப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Asif Ali
கவலை எழுப்பியுள்ள மாணவர்கள் மற்றும் அமைப்பு
தற்போது சுமார் 300 திரிபுரா மாணவர்கள் டேராடூனில் படித்து வருகின்றனர். அதே நேரத்தில், வடகிழக்கு இந்தியாவிலிருந்து இங்கு பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 500 என மதிப்பிடப்பட்டுள்ளது.
திரிபுரா மாணவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக யுனிஃபைட் திரிபுரா ஸ்டூடண்ட் அசோசியேஷன் டேராடூன் (UTSAD) என்ற அமைப்பு அங்கு செயல்பட்டு வருகிறது.
திரிபுராவைச் சேர்ந்த டோங்க்வாங், சமீபத்தில் டேராடூனில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்மா படிப்பை முடித்தார், தற்போது டேராடூனுக்கு அருகிலுள்ள ஒரு மருந்தக நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
ஏஞ்சல் சக்மாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த டோங்க்வாங், பிபிசி இந்தியிடம் கூறுகையில், ஏஞ்சல் தனக்கு தம்பி போன்றவர் என்று கூறினார்.
“ஏஞ்சல் மிகவும் நல்லவர். அவர் யாருடனும் சண்டையிட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு மனித உயிரைப் பறிப்பது மிகப்பெரிய விஷயம். அவரைக் கொன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும்,” என்றார்.
இனப் பாகுபாடு என்பது டேராடூனுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்று டோங்க்வாங் கூறுகிறார்.
டெல்லி, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களிலும் வடகிழக்கு மக்கள் பாகுபாட்டையும் இனவெறியையும் எதிர்கொள்கின்றனர் என்பது அவரது கருத்தாக உள்ளது.
“எந்த அடிப்படையில் எங்களை ‘சிங்கி’, ‘மிங்கி’ அல்லது ‘சீனர்கள்’ என்று அழைக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் இந்தியக் குடிமக்கள், அதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன,” என்றார்.
தனது கல்லூரி காலத்திலிருந்தே தான் இனப் பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
“நீங்கள் சீனர்கள், இந்தியாவிலிருந்து திரும்பிச் செல்லுங்கள் என என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். சில நேரங்களில் திரிபுரா ஜப்பானில் இருக்கிறதா அல்லது பூட்டானில் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள்,” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
ஏஞ்சலின் கொலைக்குப் பிறகு, டேராடூனில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே அச்சம் நிலவுவதாக அவர் கூறுகிறார்.
“நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. ஏஞ்சலுக்கு இது நடந்துள்ளது என்றால், நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்,” என்றார்.
வடகிழக்கைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவதற்காக தொலைதூர இடங்களிலிருந்து இங்கு வருவதாகவும், அவர்களது குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளின் இறந்த உடல்களுடன் திரும்பி வர விரும்புவதில்லை என்றும் அவர் கூறினார்.
“நாங்களும் இந்தியர்கள் தான். எங்களை ‘சீனர்கள்’ என்று அழைக்கக்கூடாது. அதற்காக, ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பட மூலாதாரம், Asif
கடுமையான கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்
திரிபுரா மாணவர் கொலை செய்யப்பட்டதை “வெறுப்பினால் விளைந்த கொடூரமான குற்றம்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘வெறுப்பு என்பது ஒரே இரவில் பிறப்பதில்லை’ என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் எதிர்வினையாற்றியுள்ளார்.
“டேராடூனில் திரிபுரா மாணவர் கொல்லப்பட்டது, வெறுப்புணர்ச்சி கொண்டவர்களின் அருவருப்பான மனநிலையின் விளைவாகும். இத்தகைய சீர்குலைக்கும் சிந்தனை ஒவ்வொரு நாளும் ஒருவரின் உயிரைப் பறிக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், இதுபோன்ற சம்பவங்கள் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
“சட்ட ஒழுங்குடன் விளையாடுபவர்கள் அரசாங்கத்திடம் கருணையை எதிர்பார்க்கக்கூடாது. இத்தகைய அராஜக சக்திகள் எந்த விலையிலும் தப்பிக்க முடியாது. உத்தராகண்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்கும் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு