பட மூலாதாரம், Antariksh Jain/BBC
“அவர்கள் தப்பித்துவிடுவார்களா, மேம்?”
“தப்பித்துவிடுவார்களா? என்ன சொல்கிறாய்?”
உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த 24 வயதுப் பெண், தன்னுடன் அமர்ந்திருக்கும் பெண்கள் உரிமை ஆர்வலர் யோகிதா பயானாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். அதற்கு அவர், “இல்லை, இப்போதைக்கு நேர்காணலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதிகமாக சிந்திக்க வேண்டாம்” என்று பதிலளிக்கிறார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் எங்களை நோக்கித் திரும்புகிறார்… மீண்டும் பேச முயற்சிக்கிறார், ஆனால் அவரது கண்களில் பயமும் பதற்றமும் தெரிகிறது.
அவருடன் பேச, அவரது வழக்கறிஞர் மஹ்மூத் பிராச்சாவின் அலுவலகத்தில் நாங்கள் அமர்ந்திருந்தோம்.
அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன், ஒரு பெரிய ஹால் உள்ளது. அதன் நடுவே ஒரு நீண்ட மற்றும் அகலமான மேசை உள்ளது. அதைச் சுற்றி வழக்கறிஞர்கள் குழு அமர்ந்திருக்கிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத் திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய், மற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் யோகிதா பயானாவின் குழுவினர் இந்த ஹாலுக்கு எதிரே உள்ள அறையில் அமர்ந்திருக்கிறார்கள்.
நாங்கள் இங்கே அமர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணோடு பேச ஆரம்பித்தோம்.
“டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறது என்று கேள்விப்பட்டீர்களா?” என்று கேட்டோம்.
அதற்குப் பதிலளித்த அந்தப் பெண், “விவாதம் நடந்துகொண்டிருந்தபோது சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது? இப்போது ஒவ்வொரு மகளின் தைரியமும் உடைந்துவிட்டது. ஒரு பாலியல் வன்கொடுமை நடந்தால், ஒன்று நாங்கள் கொல்லப்படுவோம், அல்லது குற்றவாளி தண்டிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார். இந்த உத்தரவைப் பார்க்கும்போது, இங்கே ஒவ்வொரு மகளின் தைரியமும் உடைந்துவிட்டது” என்றார்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணின் வாழ்க்கை, கடந்த எட்டு ஆண்டுகளில் பல சிரமங்களைச் சந்தித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை, போலீஸ் காவலில் தந்தையின் மரணம், இரண்டு உறவினர்கள் மற்றும் ஒரு வழக்கறிஞர் சாலை விபத்தில் மரணம்… அதன்பிறகு மருத்துவமனையில் தனது உயிரைக் காப்பாற்ற ஆறு மாத காலப் போராட்டம்.
இந்த எட்டு ஆண்டுகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர், விசாரணைகள் நடத்தப்பட்டன, தீர்ப்புகள் வழங்கப்பட்டன, தண்டனைகளும் வழங்கப்பட்டன. இருப்பினும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவு பாதிக்கப்பட்டவரின் கோபத்தை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
பட மூலாதாரம், Antariksh Jain/BBC
விவாதம் இந்தியில் நடந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது
“இந்த விவாதம் இந்தியில் நடந்திருந்தால், என் வழக்கிற்காக நானே போராடியிருப்பேன். என் ஆங்கிலம் கொஞ்சம் பலவீனமானது… ஆனால் சில விஷயங்களைப் புரிந்துகொள்கிறேன். அவர் ‘அனுமதி’ (allow) என்று சொன்னபோது… நான் புரிந்துகொண்டேன். அவர், ‘குல்தீப் சிங் செங்கர், பாதிக்கப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் அம்மாவிடமிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் செல்லமாட்டார்’ என்றார். ஆனால் ஐந்து கிலோமீட்டர் என்ன… ஐயாயிரம் கிலோமீட்டர் கூட அவருக்கு ஒன்றுமில்லை” என்று கூறினார் அந்தப் பெண்.
“அவர்கள் யாரையாவது கொல்ல வேண்டும் என்றால், அதை அவர்களாகவே செய்ய மாட்டார்கள்… முழு குற்றத்தையும் தங்கள் ஆட்களைக் கொண்டு செய்ய வைப்பார்கள். ஏனென்றால், இந்த நாட்டில் என் கண்களால் இதைப் பார்த்திருக்கிறேன். பாலியல் வன்கொடுமை நடக்கிறது, பின்னர் பாதிக்கப்பட்டவர் கொல்லப்படுகிறார். நான் உயிர் பிழைத்தது வெறும் விதிதான். நான் ஆறு மாதங்கள் வென்டிலேட்டரில் இருந்தேன். நானும் மரணத்துடன் ஒரு போர் நடத்தினேன். என் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மாவட்ட நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு வருவார். நான் எப்படிச் சிரமப்பட்டேன் என்பதையும் அவர் பார்த்தார். என்னால் பேச முடியவில்லை, மயக்கமடைவேன், ஆனாலும் என் வாக்குமூலத்தை அளித்தேன்” என்றும் அவர் கூறினார்.
2017-ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அப்போதைய பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டியபோது, அவருக்கு வயது 17 மட்டுமே.
இத்தகைய சூழ்நிலையில், 2019-ஆம் ஆண்டில், டெல்லியின் கீழமை நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, குல்தீப் சிங் செங்கருக்கு போக்ஸோவின் ‘கடுமையான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை’ (aggravated penetrative sexual assault), அதாவது தீவிரமான பாலியல் வன்முறை பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு அரசு ஊழியர் பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்யும்போது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(b) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவு 5(c) ஆகியவற்றின் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த பிரிவுகளின் கீழேயே குல்தீப் செங்கரும் தண்டிக்கப்பட்டார்.
ஆனால் செங்கரின் வழக்கறிஞர்கள், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு எம்எல்ஏவை அரசு ஊழியராகக் கருத முடியாது என்பதால், அவரை அரசு ஊழியராகக் கருதியதில் விசாரணை நீதிமன்றம் தவறிழைத்துள்ளது என்று கூறினார்கள்.
டெல்லி உயர்நீதிமன்றம் செங்கரின் வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்டு, அரசு ஊழியர் என்ற வரையறை அவருக்குப் பொருந்தாது என்று கூறியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குற்றவியல் சட்டத்தின்படி அரசு ஊழியர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தின் 1984-ஆம் ஆண்டு தீர்ப்பை நீதிமன்றம் நம்பியிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
“எட்டு ஆண்டுகளில் மூன்று உறுப்பினர்களை குடும்பம் இழந்துள்ளது”
செங்கரின் ஜாமீன் நிராகரிக்கப்படும் வரை தனது போராட்டத்தைத் தொடர்வேன் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்
“என் குடும்பத்தை இழந்த பிறகு நான் போராடிக்கொண்டிருக்கிறேன். என் அப்பா, என் அத்தை, என் தாய் மாமாவை இழந்தேன். கிராமத்து வழக்கறிஞர், என் வழக்கறிஞரையும் இழந்தேன். நானும் சென்றிருப்பேன், ஆனால் கடவுள் என்னைக் காப்பாற்றினார்” என்றும் அந்தப் பெண் கூறினார்.
தனது பாதுகாப்பிற்காக 2017-ஆம் ஆண்டே உன்னாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்கிறார் அவர்.
“நான் மிகவும் பயந்தேன்… அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்து, யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். என் அப்பாவைக் கொன்ற பிறகு, குல்தீப் சிங் செங்கர் என் குடும்பம் முழுவதையும் கடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர்களைக் கடத்திச் சென்று கொல்ல முடிவு செய்திருந்தார். ஆனால் என் குடும்பத்திற்கு செய்தி கிடைத்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்” என்றார் அவர்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, உன்னாவில் வசிக்கும் அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பயந்துவிட்டதாக அந்தப் பெண் எங்களிடம் தெரிவித்தார். செங்கர் இப்போது வெளியே வருவார் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
ஆனால் குல்தீப் சிங் செங்கர் அந்தப் பெண்ணின் தந்தையைக் கொலை செய்த (Unintentional) குற்றவாளியாகவும் உறுதி செய்யப்பட்டார். தற்போது அந்த வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து வருகிறார்.
ஆனால் இவ்வளவு பெரிய வழக்கில் செங்கருக்கு ஜாமீன் கிடைக்க முடியும் என்றால், இந்த வழக்கு அவருக்கு ஒன்றுமில்லை என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறுகிறார்.
குல்தீப் சிங் செங்கர் இந்த வழக்கிலும் தண்டனையை நிறுத்தி வைக்க விண்ணப்பித்திருந்தார், ஆனால் 2024-ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பும் ஒரு முக்கிய பிரச்னை என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இருப்பினும், டிசம்பர் 2021-ல், டெல்லி நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர், அவரது உறவினர் மற்றும் அவரது வழக்கறிஞரைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டிலிருந்து செங்கரை விடுவித்தது. அவருக்கு எதிராக முதல் கட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அந்நீதிமன்றம் கூறியது.
2019-ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன் அத்தை, தாய் மாமா மற்றும் வழக்கறிஞருடன் ரேபரேலிக்குச் சென்று கொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாத ஒரு லாரி அவரது காரை மோதியது.
இந்த சம்பவத்தில், அந்தப் பெண்ணின் இரண்டு உறவினர்களும் வழக்கறிஞரும் இறந்தனர். அதேநேரம் அந்தப் பெண் ஆறு மாதங்கள் வென்டிலேட்டரில் இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
“நாங்கள் தொடர்ந்து போராடுவோம்”
அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், “எனக்கு விபத்து ஏற்பட்டபோது, நான் என்னை மீட்டெடுத்தேன். நான் பயமற்றவள், தைரியத்தை இழக்க மாட்டேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். சுற்றிலும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு இருந்தபோதிலும், எனக்கு மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன… ஆனாலும் நாங்கள் பயப்படவில்லை.
‘என்ன நடந்தாலும் சந்திப்போம். அவர்கள் வெளிப்படையாக எங்களை மிரட்டினால், அன்று அவர்கள் எங்களைக் கொல்லவே நினைக்கிறார்கள் என்பதை நான் நிரூபிப்பேன்’ என்று சொன்னேன். ஆனால், அவர்களால் இப்போது எங்களைக் கொல்ல முடியாது என்றில்லை… அவர்களால் முன்னால் இருந்து தாக்க முடியாது, அவ்வளவுதான். பின்னால் இருந்து தங்கள் கூட்டாளிகள் மூலம் நிச்சயமாக அதைச் செய்ய முடியும்” என்று கூறுகிறார்.
“குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை பூலான் தேவியாக மாறும்படி கட்டாயப்படுத்துகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்களின் ஜாமீன் மறுக்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இப்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாய். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்குத் தனது கணவரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது. தனது குடும்பத்திற்கு என்ன நடக்கும் என்று தெரியாததால், அந்த அழைப்பை எடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
அவரது இந்தப் போராட்டத்தில் கணவரின் ஆதரவு கிடைக்கிறதா என்று அவரிடம் கேட்டோம்
அதற்கு அவர், “என் கணவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார். என் குழந்தைகள் என் தாய்ப்பாலை ஒருபோதும் குடிக்கவில்லை. நான் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்ததால் அந்தப் பழக்கத்தை நான் ஏற்படுத்தவில்லை. அவர்கள் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பாதுகாப்பு இருக்கும்போதும், நான் இன்னும் பயப்படுகிறேன்… நாங்கள் வெளியே சென்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நான் எங்கே போவேன்… எங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை, ஆனால் நாங்கள் கைவிட மாட்டோம்… நாங்கள் போராடுவோம்” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு