படக்குறிப்பு, உமர் காலித்தின் தந்தை எஸ்.க்யூ.ஆர். இலியாஸ், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் தனது போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்கட்டுரை தகவல்
உமர் காலித் மற்றும் மற்ற ஆறு பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவர் ஐந்தாம் தேதி வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
2020-ஆம் ஆண்டில் டெல்லியில் வகுப்புவாத வன்முறையை தூண்ட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களின் ஜாமீன் மனுக்கள் மீது முதன்முறையாக உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க இருந்ததால் அது முக்கியமானதாக கருதப்பட்டது.
தன் மகன் மீண்டும் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கையுடன், அன்றைய தினம் காலையில் உமர் காலித்தின் தந்தை எஸ்.க்யூ.ஆர். இலியாஸ் உச்ச நீதிமன்றத்தை அடைந்தார்.
பிபிசி ஹிந்தியிடம் அவர் பேசுகையில், “நான் நீதிமன்றத்திற்குள் நுழைந்த போது, எல்லோரும் என்னிடம் இனிப்பு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்களா என கேட்டனர்” என்றார்.
பல மாத விசாரணைக்குப் பிறகு அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருந்தது.
டெல்லி கலவர வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய உச்ச நீதிமன்றம், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் இருந்தாலும் அவர்களுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்படக் கூடாது என தெரிவித்தது.
ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கில் மற்ற 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு முக்கியமானதல்ல என்றும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
‘இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்தேன்’
பிபிசி ஹிந்தியிடம் பேசிய உமர் காலித்தின் தந்தை, உச்ச நீதிமன்றத்தின் முடிவு குறித்து வருத்தம் தெரிவித்தார். “உமர் காலித்தும் எங்களின் குடும்பத்தினரும் தைரியத்துடன் தொடர்கிறோம். இந்த முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் நாங்கள் போராடுவோம். எங்களுக்குள்ள வாய்ப்புகள் அனைத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம்.” என்றார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உமர் காலித் சிறையில் உள்ளார். அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த வழக்கு டெல்லியின் கர்கர்டூமா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவ்வழக்கில் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை.
கீழமை நீதிமன்றத்தால் அவருடைய ஜாமீன் மனுக்கள் இரு முறையும் டெல்லி நீதிமன்றத்தால் இருமுறையும் நிராகரிக்கப்பட்டுள்ளன, தற்போது உச்ச நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உமர் காலித்தின் தந்தை இலியாஸ் கூறுகையில், தன் மகன் ஒருபோதும் யாரையும் வன்முறை அல்லது பயங்கரவாதத்திற்கு தூண்டியதில்லை என்றார்.
அவர் கூறுகையில், “உமர் மீது ‘தவறு’ என ஒன்று இருக்குமானால், அது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முகமாக இருந்ததுதான். ஆக, அரசின் எந்தவொரு முடிவுக்கும் சவால் விடுப்பது குற்றமென்றால், உமர் அந்த குற்றத்தை செய்திருக்கிறார்.” என்றார்.
யுஏபிஏ சட்டத்தின்கீழ் ஜாமீன் பெறுவது மிகவும் கடினம் என்றார் அவர். “சாதாரண வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நீங்கள் குற்றமற்றவர் தான். ஆனால், யுஏபிஏ சட்டத்தின்படி, அது அப்படியே நேர்மாறானது.” என அவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
“10-15 ஆண்டுகள் கழித்து அவர் குற்றமற்றவர் என நீங்கள் கண்டறிந்தால் அதற்கு யார் பொறுப்பு? யாரும் அதற்கு பொறுப்பாக மாட்டார்கள்.” என்றார்.
‘உமர் காலித் அப்போது டெல்லியில் இல்லை’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உமர் காலித்தின் தந்தை, “அவன் எப்படி ஐந்தரை ஆண்டுகளாகச் சிறையில் இருந்தானோ, அதேபோல் இன்னும் ஒரு வருடமும் சிறையிலேயே இருப்பான்” என்று கூறினார்.
பயங்கரவாத வழக்கில் உமர் காலித்திற்கு எதிராக முகாந்திரம் இருப்பதாக கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரின் தந்தை கூறுகையில், “நாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்கும் விஷயங்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் திரும்பத்திரும்ப கூறப்படுகின்றன,” என்றார்.
கலவரம் ஏற்பட்ட போது உமர் காலித் டெல்லியிலேயே இல்லை என்றார் அவர்.
‘வன்முறையைத் தூண்டக்கூடிய எந்த தகவல்களையும் அவர் வாட்ஸ்ஆப்பில் பகிரவும் இல்லை, அதேசமயம் தன் உரைகள் வாயிலாக மக்களை வன்முறைக்குத் தூண்டவும் இல்லை’ என அவர் கூறினார்.
கலவரத்தை தூண்டியதில் உமர் காலித் முக்கிய பங்கு வகித்ததாக கூறும் சில ‘பாதுகாக்கப்பட்ட சாட்சியங்கள்’ இருப்பதாக டெல்லி காவல் துறை கூறுகிறது.
‘ஜாமீன் வழங்கும் கட்டத்தில் நீதிமன்றம், வழக்கு ஒன்றில் ஒருவருக்கு எதிராக முகாந்திரம் இருக்கிறதா என்பதை மேலோட்டமாக ஆய்வு செய்கிறது. யுஏபிஏ போன்ற சட்டங்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன’ என இலியாஸ் தெரிவித்தார்.
“‘அவர்களை சுடுங்கள்’, ‘காவல்துறையை அப்புறப்படுத்துங்கள்’ என கூறியவர்கள் இப்போது அமைச்சர்களாக இருப்பதை பார்க்கிறோம், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என தெரிவித்தார்.
ஓராண்டு கழித்து உமர் காலித் மீண்டும் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உமர் காலித்தின் தந்தை இதுகுறித்து கூறுகையில், “இது விநோதமாக இருக்கிறது. ஓராண்டு கழித்து நாங்கள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் எங்களுக்கும் தெரியவந்துள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நாட்டில் மிக உயரிய நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் உள்ளது. உண்மையின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி நடக்கவில்லை.” என்றார்.
இதற்கு பிறகு குறைந்தது ஓராண்டுக்கு அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
உமர் காலித்தின் தந்தை கூறுகையில், “ஐந்தரை ஆண்டுகள் சிறையில் கழித்தபின்னும் அவர் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். ஓராண்டு கழித்தும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்பதில் நிச்சயம் இல்லை. நிச்சயமாக, இந்த ஐந்து ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தன, இனிவரும் காலமும் அப்படித்தான் இருக்கும்.” என்றார்.
உமர் காலித் தொடர்ந்து மகாத்மா காந்தி மற்றும் பகத் சிங்கின் வார்த்தைகளை மேற்கோளிடுவார் என இலியாஸ் கூறுகிறார்.
உமர் காலித்திற்கு நியூயார்க் மேயர் கடிதம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானியின் கடிதம் குறித்து பேசிய உமரின் தந்தை, “நீதிமன்றங்கள் இந்த வழக்கை சர்வதேசமயமாக்கிவிட்டன” என்று கூறுகிறார்.
சமீபத்தில் நியூ யார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி, உமர் காலித்திற்கு ஆதரவாக கடிதம் எழுதினார்.
இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவே இவ்வாறு செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
“இந்த விவகாரத்தை நாங்கள் சர்வதேச பிரச்னையாக்கவில்லை. அரசு மற்றும் நீதிமன்றங்களின் முடிவுகள் அதை சர்வதேச பிரச்னையாக மாற்றியுள்ளது,” என இல்யாஸ் தெரிவித்தார்.
உமர் காலித்தை ஆதரித்த அறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோரை அவர் மேற்கோளிட்டார்.
உமர் காலித்தின் தந்தை கூறுகையில், “சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றேன். எப்போதெல்லாம் நான் அங்கு செல்கிறேனோ, அப்போதெல்லாம் பலரும் என்னிடம் உமர் குறித்து கேட்பார்கள்.” என்றார்.
சமீபத்தில், தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்காக உமர் காலித்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில் உமர் காலித் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்தார். இலியாஸ் கூறுகையில், “நாங்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டோம். உமர் என்னை ஊக்கப்படுத்தினார், கவலைப்பட வேண்டாம் என கூறினார்.” என்றார்.