பட மூலாதாரம், Getty Images
உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுக்கள் 2020 டெல்லி கலவரம் தொடர்பானவை. டெல்லி கலவரம் ஒரு ‘பெரிய சதி’யின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது. இந்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் இன்னும் வழங்கப்படவில்லை.
ஷர்ஜீல் இமாம், உமர் காலித், குல்பிஷான் பாத்திமா, அதர் கான், அப்துல் காலித் சைஃபி, முகமது சலீம் கான், ஷிஃபா-உர்-ரஹ்மான், மீரான் ஹைதர் மற்றும் ஷதாப் அகமது ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தஸ்லீம் அகமதுவின் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், அவர்களில் 12 பேர் தற்போது சிறையில் உள்ளனர். ஆறு பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர், இருவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு ஜாமீன் மறுத்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஜூலை 9-ம் தேதி ஒத்திவைத்தது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களின் போது 2020 பிப்ரவரியில் டெல்லியில் வகுப்புவாத கலவரங்களை ஏற்படுத்த இந்த நபர்கள் சதி செய்ததாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட முடிவு
பட மூலாதாரம், Getty Images
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், விசாரணையின்றி ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.
விசாரணைக்கு அதிக நேரம் ஆகும் என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினர்.
இந்த வழக்கில் தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் ஆகியோருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது என்றும் எனவே, சமத்துவத்தின் அடிப்படையில், மீதமுள்ள குற்றவாளிகளுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஜாமீன் குறித்த தனது முடிவை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஷர்ஜீல் இமாம் மற்றும் காலித் சைஃபி போன்ற குற்றம் சாட்டப்பட்ட சிலரின் மனுக்கள் 2022 முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உமர் காலித் உட்பட குற்றம் சாட்டப்பட்ட பலரின் மனுக்கள் 2024 முதல் நிலுவையில் உள்ளன.
ஜூலை 9 அன்று, டெல்லி காவல்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
அவர் இரண்டு வாதங்களை முன்வைத்தார். முதலாவதாக, 2020 பிப்ரவரியில் நடந்த வகுப்புவாத வன்முறை இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் நன்கு திட்டமிடப்பட்ட சதி என்றார்.
இரண்டாவதாக, விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் ஜாமீன் வழங்கப்படலாம், ஆனால் தலைநகர் டெல்லியில் வன்முறையைத் தூண்டும் முயற்சி குறித்த வழக்கில் வழங்கக்கூடாது, இவை சாதாரண கலவரங்கள் அல்ல என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டெல்லி கலவர சதி வழக்கு
பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் பிப்ரவரி 2020 கலவரத்தில், 53 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.
கலவரம் தொடர்பாக 758 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் ஒன்றை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. இதே வழக்குதான் டெல்லி கலவர சதி தொடர்பான வழக்கு.
2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியபோது, சில ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலவரத்தைத் தூண்ட சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
முன்னதாக, உமர் காலித்தின் மற்றொரு ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
போலீசார் 58 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கலவரத்தைத் தொடங்க சதி செய்ததாக இந்த சாட்சிகள் கூறுகிறார்கள். இப்போதைக்கு, இந்த சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தரப்பு வாதம்
பட மூலாதாரம், Getty Images
இந்த கலவரங்கள் நான்கு கட்டங்களாக நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். இவை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களின் போது தொடங்கியது என்று போலீஸ் கூறுகிறது.
இந்த நேரத்தில் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகியோர் வகுப்புவாத வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி மாணவர்களைத் தூண்ட முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மக்களை கொலை செய்யும் நோக்கில் இருவரும் சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
உமர் காலித் சில ரகசிய கூட்டங்களில் கலந்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர், அங்கு அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஆயுதங்களை சேகரிக்கச் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, குல்பிஷா பாத்திமா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இவர்கள் போராட்டக்காரர்களுக்கு குச்சிகள், மிளகாய் தூள் மற்றும் கற்களை விநியோகித்ததாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்றனர். அவர்கள் ஆயுதங்களை சேகரித்தனர், சிசிடிவி கேமராக்களை உடைத்தனர், ஆயுதங்களுக்கு பணம் திரட்டினர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகியோரின் சில உரைகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களை போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.
விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி கலவரத்தின் நோக்கம் உலக அளவில் இந்தியாவை இழிவுபடுத்துவதாகும் என்று கூறினார்.
அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வரவிருந்தபோது கலவரங்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்ன கூறுகிறார்கள்?
பட மூலாதாரம், Getty Images
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் வாதிடுகின்றனர். எனவே, விசாரணை தாமதமாகிறது என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர்.
விசாரணை தாமதமானால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவர்கள் மேற்கோள் காட்டினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர். அனைவரின் வாதங்களிலும் இரண்டு விஷயங்கள் பொதுவானவையாக இருந்தன. முதலாவதாக, விசாரணையில் ஏற்படும் தாமதம். இரண்டாவதாக, வேறு சில குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
மேலும், போலீஸார் அளித்த சாட்சியம் குறித்தும் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
எந்தவொரு வாட்ஸ்அப் குழுவிலும் சேர்வது குற்றம் அல்ல என்று உமர் காலித்தின் வழக்கறிஞர் திரிதீப் பயஸ் கூறினார்.
“உமர் காலித் வேறு ஒருவரால் இந்த குழுக்களில் சேர்க்கப்பட்டார். அவர் குழுவில் எந்த செய்தியையும் அனுப்பவில்லை.” என்று அவர் வாதிட்டார்.
உமர் காலித்திடம் இருந்து எந்த ஆயுதமும் மீட்கப்படவில்லை என்றும் அவரது பேச்சிலும் ஆட்சேபனைக்குரிய அம்சம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதுதவிர, காவல்துறையின் ரகசிய சாட்சிகளின் நம்பகத்தன்மை குறித்தும் வழக்கறிஞர்கள் கேள்விகளை எழுப்பினர். சாட்சிகள் எவ்வளவு நம்பகமானவர்கள் என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டும் என்று திரிதீப் பயஸ் நீதிமன்றத்தில் கூறினார்.
டெல்லி கலவரத்தில் பாத்திமாவுக்கு தொடர்பு இருப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். அவர் அமைதியான போராட்டத்தில் மட்டுமே பங்கேற்றார் என்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் அவர் கூறினார்.
ஷர்ஜீல் இமாமின் வழக்கறிஞர், அவர் 2020 ஜனவரியில் கைது செய்யப்பட்டார், ஆனால் கலவரம் பிப்ரவரியில் நடந்தது என்று சுட்டிக்காட்டினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு