• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

உயர்நீதிமன்றின் ஊடாக தீர்வு பெற்றுத்தாருங்கள் | சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

Byadmin

Apr 14, 2025


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தலுடன் தொடர்புடையவகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு தாம் சட்டமா அதிபரிடம் கோரியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில், வேட்பாளர்களின் பிறப்புச்சான்றிதழ்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அத்தாட்சிப்படுத்தப்படாமையைக் காரணங்காட்டி குறித்த எண்ணிக்கையான வேட்புமனுக்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் நிராகரிக்கப்பட்டன.

அதுகுறித்து அவ்வேட்பாளர்களால் இருவேறு குழுக்களாக உயர்நீதிமன்றத்திலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு தீர்ப்பளித்திருக்கிறது.

அதேவேளை இதேகாரணத்துக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு கையாளப்போகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி அமீர் பாயிஸிடம் வினவியபோது, ஒரே விடயத்தில் இருவேறு நீதிமன்றங்களில் இரு று நிலைப்பாடுகளால் தாமும் குழப்பமடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று இவ்விடயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதற்கமைய செயற்படுவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு விரும்புவதாக சுட்டிக்காட்டிய அமீர் பாயிஸ், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தீர்வைப் பெற்றுத்தருமாறு தாம் சட்டமா அதிபரிடம் கோரியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஒருவாரகாலமாக இக்கோரிக்கையை முன்வைத்துவருகின்ற போதிலும், சட்டமா அதிபரால் இன்னமும் மேன்முறையீடு செய்யப்படவில்லை எனவும், இருப்பினும் தாம் அதற்குரிய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருவதாகவும் அமீர் பாயிஸ் மேலும் தெரிவித்தார்.

By admin