சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி சக நீதிபதிகள் முன்னிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அவர்களுக்கு நி்ரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீதிபதிகள் ஆர்.ஹேமலதா, எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் பணிஓய்வு பெற்ற நிலையில், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் வரும் மே 9-ம் தேதியும், நீதிபதி வி.பவானி சுப்பராயன் வரும் மே 16-ம் தேதியும், நீதிபதி வி.சிவஞானம் வரும் மே 31-ம் தேதியும் பணிஓய்வு பெறவுள்ளனர். இதன்காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ஆக குறையும் நிலை உள்ளது.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் செய்திருந்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்று அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் இன்னும் சில தினங்களில் இந்த நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவியேற்பர் எனத் தெரிகிறது.